"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 23



ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. சூரியன் மற்றும் மழையின் தாக்கத்தில் இருந்து தம்மை பாது காக்கும் ஒரு தேவையின் நிமித்தமே முதல் முதல் ஆடை உருவானது எனலாம். எனினும் நாளடைவில் அந்த ஆடைகள் வளர்ச்சி அடைந்து ஒரு முழுமை அடைந்து அந்த மனிதனின் வாழ்க்கையில் அது ஆழமாக பதியப் பட்டு, அதன் விளைவாக, அந்த குறிப்பிட்ட இனக் குழுவுக்கு அல்லது சமுதாயத்திற்கு அல்லது நாட்டுக்கு என சிறப்பு ஆடை பழக்க வழக்கமாகி, அது ஒரு தனி மரபாக பின்னாளில் மாறியது எனலாம். உதாரணமாக, தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘ஆள் பாதி ஆடை பாதிஎன்று. அதாவது, ஒருவர் அணிந்திருக்கும் ஆடை அவரது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவரை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்றாக விளங்குகிறது. ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடையும் ஒருவரது பண்பாட்டை வெளிப்படுத்தும்.

தமிழர் மற்றும் இந்தியர் உடைகளின் வரலாறு, கிமு 2500 முன்னர் சிந்துவெளி நாகரிகத்தில் பருத்தியை சுழற்றல், நெய்தல் மற்றும் சாயமிடல் [spun, woven and dyed] ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட சிறு உருவச்சிலைகளில் (figurines), உதாரணமாக ஒரு மத குரு அரசன் ["Priest King"], ஒரு சேலையால் உடம்பை சுற்றி போர்த்து (wrapped around the body) இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இது தமிழரின் மூதாதையரான சிந்து சம வெளி மக்கள் எப்படியான உடை அணிந்தார்கள் என்பதை காட்டுகிறது. எனினும் நாம் இன்றைய தமிழகத்தில், இலங்கையில், எமது பார்வையை திருப்பும் பொழுது, முதலில் சங்க காலத்தில், எதை அணிந்தார்கள் என்று பார்த்தால், எமக்கு உதாரணமாக வரும் முதல் சங்க பட்டு, புறநானுறு 189 ஆகும். இதில் சிந்து வெளி தொடர்ச்சியை அப்படியே காண்கிறோம். கடல் சூழ்ந்த உலகம் தனது பொறுப்பின் கீழ் வரவேன்டும் என்று துடிக்கிற வேந்தருக்கும், இரவு பகல் தூங்காமல் காட்டில் வேட்டையாடித் திரிகிற கல்வி அறிவில்லா முரட்டு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவைகள்
இரண்டே. பசியைப் போக்க ஒரு நாழித் [கால் படி] தானியம் மற்றும் மேலும் கீழும் உடுக்க இரண்டு உடை என்று "தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி, வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான், கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; என அறிகிறோம். அதாவது சங்க தமிழரின் உடை இரண்டு துண்டுகளையே கொண்டிருந்தன. ஒன்று வேட்டி மாதிரி ஒரு கீழாடை, மற்றது சால்வை மாதிரி, அதிகமாக 
தலைப்பாகை போல, ஆண்கள் உடுத்தனர். ஆனால் பெண்கள் இடுப்பிற்கு கிழே மட்டுமே பொதுவாக மறைத்தனர் அல்லது தமது உடலின் கூடுதலான பகுதிகளை மறைக்கக் கூடியதாக அணிந்தார்கள். மார்பை மாலைகளாலும் சந்தனம் பூசியும் அலங்கரித்துக் கொண்டனர்.

மரப்பட்டைகள் ஆடையாக அணியப்பட்டமை குறித்தும் பெண்கள் தழையுடை அணிந்தமை குறித்தும் சங்க இலக்கியம் பேசுவதுடன் சங்க காலத்திலேயே, காலப்போக்கில் நூல் இழைகள் உருவான பிறகு, பருத்தியில் இருந்தும் ஆடைகள் செய்தனர் என அறிகிறோம். அதிகமாக,செல்வர்களும் அரசர்களும் அழகிய வேலைப்பாடு மிக்க நுண்ணிய பட்டாடைகளை உடுத்தனர். பொதுவாக மற்றவர்கள் எல்லோரும் இரண்டு துண்டு துணியுடன் தம்மை திருப்தி படுத்திக் கொண்டனர். அன்று வேட்டி போல் இடையில் கட்டும் ஆடையை காழகம் என்று அழைக்கப்பட்டுள்ளது. காழகம் என்பதற்கு அரையில் கட்டப்பெறும் ஆடை என்பது பொருள்.
பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் எமக்கு தோன்றுகின்றது.
பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே ஆகும். கண்ணியமாக உடையணிவது என்பது காலத்துக்கு ஏற்பவும், இடத்துக்கேற்பவும், சமூகத்துக்கு ஏற்பவும் மாறுபட்டு வந்துள்ளது என்பதே உண்மை. இன்றைய வழக்கம் போல், வேட்டி, சேலை அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின், சிலப்பதிகார காலத்தில் அது பொது வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். எனவே இவை நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் அல்லது மரபு ஆகும். உதாரணமாக, சிலப்பதிகாரம் 4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதையில் ,“அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய, மென் துகில் அல்குல் மேகலை நீங்கக், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்  என்ற வரி அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியுஞ் சிலம்பினை ஒழியவும், மெல்லிய துகிலை யுடுத்த அல்குலிடத்து மேகலை (waist ornament for women- ஒட்டியாணம்) நீங்கவும், கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாளாய்,  என்று உரைக்கிறது .இதன் பின் வந்த, ஆண்டாள், “இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து, மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை, அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்என்று நாச்சியார் திருமொழியில், துர்க்கை என்கிற நாத்தனார் கல்யாண புடைவை சாத்தி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்திருந்து, தன்னை  நாராயணனுக்கு மணமுடிக்கப் பேசுவதாய் பாடுகிறார். இப்பொதும் பெண்கள் தாலி கட்டும் நேரத்தில், பொதுவாக சிவப்பு நிற கூரைப் புடவை அணிந்தே திருமண மேடைக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றது, சங்க இலக்கியமானபத்துப் பாட்டுதொகுப்பில் உள்ள பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரி அந்த காலத்திலேயே இரவி உடை [nightie] அணியும் மரபு இருந்ததை, மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்-மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் எனவும் எடுத்து காட்டுகிறது.


இன்று சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவதும் ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாகவே விளங்குகின்றது. தட்ப வெப்ப நிலமைகளுக்கு உட்பட்ட நாடுகளில் வாழும் நாம் கனம் குறைந்த இலேசான ஆடைகளை அணிவது ஒன்றும் வியப்பில்லை. என்றாலும் பலர் இன்று இந்த பாரம்பரிய உடை வசதி குறைவானது என்று ஐயம் அடைகிறார்கள். ஆனால் ஊர்ப்புறத்தில் நாற்று நடுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இதை ஒரு வசதிக் குறைவு என்று ஒரு போதும் கருதுவது இல்லை. அவர்கள் ஓடினால் கூட அது அவர்களுக்கு இடையூறாய் இராது. நன்கு ஆராய்ந்து கண்டறிந்த உடுத்தல் முறை போலும். இன்று பலபேருக்கு அதுபோன்ற உடுத்தல் முறைகள் தெரியாமையே இதற்க்கு முக்கிய காரணம் ஆகும். எனவே சரியான சேலை, வேட்டி காட்டும் பழக்கமே தேவையானது. 


தொடக்கத்தில், சேலைக்கும் வேட்டிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவை உடலை சுற்றி அணியப்பட்டன, அவர்களுக்கு தையல் கலை தெரிந்து இருந்தும், நெகிழ்வுத்தன்மை மற்றும் வெவ்வேறு விதமாக ஒரு துணியாலேயே அணியும் படைப்பாற்றல் ஆகியவையை அது கொண்டு இருந்ததே (flexibility and creativity that draped clothing allowed), இந்த உடைகள், தைக்கப் படாமலே இன்றுவரை நிலைத்து இருந்தமைக்கு காரணமாகும். பண்டைய தமிழர் பெண்ணின் அழகை சிறிய இடை, பெரிய மார்பளவு மற்றும் பெரிய இடுப்பு (small waist and large bust and hips) கொண்டு அளந்தனர், இதற்கு சேலை ஒரு பொருத்தமான ஆடையாக, ஒரு பெண்ணின் இடுப்பை கச்சிதமாக, நேர்த்தியாக, பார்ப்பவர் கண்களுக்கு அம்பலப்படுத்துவதுடன் (it exposes the waist of a woman), இடுப்பு மற்றும் மார்பை, புடவை மடிப்பால் மேலும் வலியுறுத்தி (emphasizes the waist and bust with the pleated fabric), ஒரு பெண்ணின் அழகை துல்லியமாக காட்டுகிறது. இது ஒரு தைக்காத துணியாக (unstitched drape), உடுப்பவரின் உடல் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், பகுதியாக மட்டும் வயிற்றுப் பகுதியை மறைக்கிறது (partially covering the midriff), அப்படியே வேட்டியுடன் சால்வையை கம்பீரமாக ஆண்கள் அணிகிறார்கள். இந்த இரு உடைகளுமே மிக இலகுவாக வேலை ஆடையாகவோ அல்லது கொண்டாட்ட 
ஆடையாகவோ மாற்றக் கூடியவை (easily turned into working dress or party-wear). இன்று உலகத்தில் கிடைக்கும் ஆடைகளில் முழுநிறைவாக எல்லோருக்கும், எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் இருந்தாலும் பொருந்தக் கூடியது (one dress that is universal) எமது பாரம்பரிய உடையான வேட்டியும் சேலையும் தான் !. சரியாக இந்த உடைகளை கையாண்டால், அவை வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், போன்றவற்றிற்கும் அணியலாம், ஏன் வேலு நாச்சியார், பெலவாடி மல்லம்மா, கிட்டூர் ராணி சென்னம்மா போன்றோர் குதிரையின் முதுகில் எதிரிகளுடன் போரிட்டது சேலை உடுத்துக் கொண்டு தான் !

எது எப்படியாயினும், ஒவ்வொரு நாட்டுக்கும் இனக்குழுக்கும், மரப்பட்டைகளும் தழைகளும் கட்டிக் கொண்டிருந்த காலம் முதல் இன்றுவரை, ஆடை என்பது அதன் தனி அடையாளமாகும். நம் முன்னோர்கள், இடுப்பில் ஒரு துண்டும், தோளில் துண்டும் அணிந்தவர்கள். அப்புறம் ஆண்கள் முழு வேட்டி ,சால்வை அதனுடன் மேல் சட்டை. பெண்கள் சேலை ரவிக்கை. இன்று நவீன தொழில் நுட்பத்தாலும், நூற்பாலைகள் (பஞ்சாலைகள்) மற்றும் செயற்கை நூல் இழைகளின் வருகையாலும், ஆடைகளின் உபயோகமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறி விட்டன. இச்சூழலில் உதாரணமாக, தமிழன் என்றால் வேட்டி, சட்டை, சேலை என்ற தனித்த ஆடை அடையாளம் சாத்தியமா? என்ற ஒரு கேள்வி வரலாம். பொதுவாக உடைகள் என்பது தேவை, வசதி சார்ந்த ஒரு பார்வையிலும், மற்றும் இன அடையாளம் சார்ந்த ஒரு பார்வையிலும் கருதப் படுகிறது. இவ்விரண்டுமே நாம் வாழும் அந்தந்த சூழலுடன் சம்பந்தப்பட்டவையே ஒழிய நிரந்தரமானவை அல்ல. எனவே இன்றைய தேவைக்காகவும் வசதிக்காகவும் நாம் நம் உடைகளைத் தேர்வுசெய்வது ஒன்றும் வியப்பில்லை. என்றாலும் இன்னொருபக்கம் உடை என்பது அடையாளம். எனவே திருமணங்கள் மற்றும் இது போன்ற தமிழர் சடங்குகளில் கட்டாயமாகவும், மற்றும் நாம் எம் தாயகத்தில் பல பொருத்தமான வேலை இடங்களிலும் அல்லது பொருத்தமான அன்றாட வாழ்க்கையிலும்  நாம் நம் தனியடையாளத்தை பேணக்கூடியதாக உடைகளை அணிவோம்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் -ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
பகுதி: 24 தொடரும்..
அடுத்த பகுதி அல்லது ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே அழுத்துக...

Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 24
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]

1 comment:

  1. I am sure this post has touched all the internet users, its really
    really fastidious paragraph on building up new web site. I couldn’t resist commenting.
    Perfectly written! I visited various web pages except
    the audio feature for audio songs current at this website is truly marvelous.
    http://foxnews.net/

    ReplyDelete