இந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (Subhash Chandra Bose, ). இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர். உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.
1897ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர். பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ் தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.எஸ் என்பது அப்போது மிகப்பெரிய பதவி. அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம், அரசியல், உலக நாடுகளின் வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில் நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வென்றார்.
ஆனால், 1921 மே மாதம் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஐ.சி.எஸ் என்ற பதவியை தூக்கி எறிந்து விட்டு லண்டனில் இருந்து இந்தியா வந்து காந்தியை சந்தித்தார். அவர் கல்கத்தாவின் தலைவர் சித்ரன்தாஸ்குப்தாவிடம் அனுப்பி வைத்தார். தாஸ் காந்தியை போன்றே செல்வாக்கு உடையவர். அவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். 25 வயதில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.
போஸ் காங்கிரஸில் இணைந்த நேரம், முதல் உலக போரில் பிரிட்டிஷுக்கு ஆதரவாக கலந்து கொண்ட இந்திய வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியா வருவதாக அறிவித்தார். இதனை முறியடிக்கும் பணி போஸிடம் வந்தது. 1921 நவம்பர் 17ஆம் தேதி இளவரசர் கப்பல் மூலம் பம்பாய் வந்து இறங்கினார். பம்பாய் நகரம் வெறிச்சோடியிருந்தது. கல்கத்தாவில் காக்கா, குருவிக்கூட அவரை வரவேற்க வரவில்லை. வெள்ளைத் தோல்களுக்கு ஏமாற்றம், அவமானம். சாதித்து காட்டியது போஸ். இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்களிடம் ஆதரவு பெற்ற போஸ் சொன்னால் கல்கத்தாவில் துரும்புக்கூட அசையாது. இதில் கடுப்பான ஆங்கில அரசு போஸை கைது செய்து சிறையில் அடைத்து வைத்தது. முதல் சிறை வாசம். போஸ் மட்டுமல்ல தாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த தாஸுக்கும்-காந்திக்கும் கருத்து வேறுபாடு. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயராஜ்ய கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர ஃபார்வர்ட் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார். கல்கத்தா கார்ப்பரேஷன் தேர்தலில் சுயராஜ்ய கட்சி வென்றது. போஸ் மேயராக பதவியேற்றார். 1925 ல் தாஸ் காலமான போது சிறையில் இருந்த போஸ் நொறுங்கிப் போனார். தனக்கு எல்லாம் முடிந்து போய்விட்டது என எண்ணினார். 1926 ல் நடந்த வங்க சட்டசபை தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றார். மக்கள் செய்த போராட்டத்தின் விளைவாக 1927 மே 17ல் விடுதலை செய்யப்பட்டவர். எலும்பும் தோலுமாக சிறையை விட்டு வெளியே வந்தார்.
முன்பை விட தீவிரமாக செயல்பட்டார். 1928 ல் கல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்து பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். தன்னை எதிர்க்க ஒருவனா என கோபமான காந்தி இது மாநாடேயில்லை என விமர்சனம் செய்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து விடுதலை சங்கம் என்ற பெயரில் காங்கிரஸில் இருந்தபடி இயக்கம் நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனுவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது, அங்கு எங்களுக்கு வேலையில்லை என காங்கிரஸ் ஜனநாயக கட்சியை சீனுவாச அய்யரை தலைவராக கொண்டு தொடங்கி காந்திக்கு புளிப்பு தந்தார்.
1930 ல் நடந்த கல்கத்தா மாநகர மேயர் தேர்தலில் நின்று சுபாஷ் வெற்றி பெற்று மேயரானார். 1931ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ஆரம்பித்தபோது போஸ் சிறையில் இருந்தார். காந்தி உட்பட பலர் உள்ளே இருந்தனர். வெளியே வந்து காந்தியின் தீவிர போராட்டத்தை ஆதரித்தார். கடைசியில் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி போரட்டம் புஸ்ஸானது. அதைப் பற்றி காந்தியிடம் விவாதிக்க போன போஸ், அப்படியே கராச்சியில் நடந்த மாநாட்டுக்கு ரயிலில் சென்றார். மாநாட்டின்போது, மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்வை தூக்கில் ஏற்றியது பிரிட்டிஷ் அரசு. அதை மாநாட்டில் காந்தி கண்டிக்கவில்லை. இதை எதிர்த்தார் நேதாஜி.
13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியட்னா போனவர் அப்படியே ஐரோப்பிய நாடுகளான செக்கஸ்லோவியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
1938 ஜனவரியில் தாயகம் திரும்பினார். அதே ஆண்டு ஹரிபுராவில் காங்கிரஸின் 51வது மாநாடு. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போஸை 51 காளைகள் பூட்டிய வண்டியில் அழைத்து சென்றனர். போஸ் பேரியக்கத்தின் தலைவரானார். நேருவுடன் இணைந்து பல காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சினார். இது காந்தி ஆதரவாளர்களை வெம்ப வைத்தது. 1 ஆண்டு முடிந்து 1939ல் கவுகாத்தியில் நடந்த மாநாட்டில் பேரியகத்தில் மீண்டும் தேர்தல் வந்தது. தலைவர் பதவிக்கு டாக்டர் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளராக நிறுத்தினார் காந்தி. எதிர் வேட்பாளர் போஸ். காந்தியின் ஆதரவாளர்கள் சுபாஷை மண் கவ்வ வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினர். தேர்தலில் நானே நிற்கிறேன் என எண்ணிக்கொள்ளுங்கள் என்றார் காந்தி. ஆயினும், போஸ் தேர்தலில் சீதாராமையாவை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தலைவராக தேர்வானார் . காங்கிரஸ் என்றால் காந்தி என்ற பிம்பத்தை உடைத்தெரிந்து காந்தியின் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியை உருவாக்கினார் சுபாஷ். அப்போதுதான் சுபாஷின் முழு திறமை பற்றி உலகத்திற்கு தெரிந்தது .
பட்டாபி தோற்றது நானே தோற்றது போல இனி எனக்கு இவ்வியக்கத்தில் என்ன வேலை என மிரட்டல் விடுத்தார். காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன சுபாஷ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கியது. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற சரியான சந்தர்ப்பம் என கருதி காந்தியை அணுகி இரண்டாம் உலகபோரில் பிரிட்டிஷாருக்கு உதவக்கூடாது என கேட்டார் சுபாஷ். காந்தியோ மறுத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று பிரிட்டிஷ் படைக்கு உதவ வேண்டுமென வேண்டுக்கோள் விடுத்தார். மக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு, காந்திக்கு கறுப்பு கொடி காட்டினர் மக்கள். காரி துப்பினாலும் அசராதவர்கள் தானே காங்கிரஸார். பிரிட்டிஷ் படைக்கு ஆதரவு தந்தனர்.
துவலவில்லை சுபாஷ்.பிரிட்டிஷ் படைக்கு எதிர்ப்பான நாடுகளை சந்தித்து ஆதரவு கேட்கலாம் என எண்ணி வீட்டு காவலில் இருந்து 1941 ஜனவரி 17 ந் தேதி மாறு வேடத்தில் இந்தியாவில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். ஜெர்மனி ஹிட்லர், இத்தாலி முசோலினி ஆகியோரிடம் உதவி கேட்டார். அங்கு இந்திய சுத்திர போராட்ட தலைவர்கள் சிலரின் நம்பகமான ஆதரவு கிடைக்க 1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு என தனி கொடியை உருவாக்கி ஜனகன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆக்டோபஸ் நாடான பிரிட்டிஸ் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தது. மனம் தளரவில்லை இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்ததாக கொன்று குவித்தது பிரிட்டிஷ் படை. இந்திய தேசிய படை தோல்வியை தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்து விட்டதால் போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை. இதனால் வேதனையின் உச்சிக்கே போனார் சுபாஷ். அவரின் திறமை அறிந்து அவரை காக்க ஜப்பான் முடிவு செய்தது. இரண்டு பேர் செல்லும் விமானத்தில் அவரை அழைத்துக்கொண்டு ரஷ்யா சென்றார்கள்.
1945 ஆகஸ்ட் 12 ந் தேதி விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் நேதாஜி இறந்து விட்டார் என உலகத்திற்கு தகவல் சொன்னது ஜப்பானிய அரசு. எப்படி என்பது இன்று வரை மர்மமாகவேயிருக்கிறது. மர்மத்தை கலைய சுதந்திரத்திற்கு பின் பல கமிட்டிகள், பல ஆய்வுகள் இந்திய அரசு செய்தது. இதுவரை யாராலும் உண்மையை கண்டறிய முடியவில்லை. உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று வரை மர்மம் தொடர்கிறது.
No comments:
Post a Comment