தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் சுமார் அரை நூற்றாண்டாக பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது மட்டுமின்றி, அவர்களையே அபிஷேகம், பூஜை செய்யவும் வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும் அந்தக் கோயிலுக்குள் சர்வ சுதந்திரத்துடன் வரலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாதவிடாய் என்பதை இந்த ஆன்மிக இயக்கத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் "இயற்கையான ஒன்றாகவும், எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்றாக பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். எல்லாப் பெண்களும் எல்லா நாள்களிலும் கருவறைக்கு சென்று வழிபாடு செய்யலாம் என்று வரவேற்கிறார். அப்படி பெண்கள் இந்தக் கோயிலின் கருவறைக்கு சென்று குங்கும அர்ச்சனை, பாலாபிஷேகம் ஆகியவை செய்கின்றனர். மாதவிடாய் இங்கு தீட்டாக பார்க்கப்படுவதில்லை" என்றார்.
"உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், 56 சக்தி பீடங்கள் ஆகியவை உள்ளன. வழிபாடும் தமிழ் மந்திரங்களை ஓதி நடக்கிறது. மேல் மருவத்தூரில் உள்ள சித்தர் பீடத்தில் சாதி, மத, பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரும் கருவறை வரை சென்று வழிபாடு செய்கிறார்கள்" என்கிறார் ரவிச்சந்திரன்.
குழந்தை பிறப்போடு தொடர்புடைய மாதவிடாய் ரத்தத்தின் அடையாளமாகவே குங்குமம் அணியும் வழக்கம் உண்டானது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆதிபராசக்தி மன்றத்தின் பக்தையாக இருக்கும், தென்காசியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை மீனாகுமாரி கனகராஜ் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும்போது, "முதல் முதலாக இந்தக் கோயிலின் கருவறைக்குள் சென்றபோது பெரிய ஆச்சரியமாக இருந்தது. மிகப்பெரிய சுதந்திரத்தை அனுபவித்தோம். அதுமுதல் இந்தக் கோயிலுக்கு வருவதை தாய்வீட்டுக்கு வருதைப் போலவே உணர்கிறோம்."
"இங்கே, பாலின வேறுபாடு மட்டுமில்லாமல் வேறு எந்த பாகுபாடும் இல்லை. தென்காசியில் உள்ள சலவைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் ஆகியோரும் பேராசியர்களும் ஒரே மன்றத்தில் இருந்தனர். இங்கே வரும்போது அனைவரும் சக்தி என்றே அழைக்கப்படுகின்றனர். சாதி வேறுபாடு இல்லாமல் அவர்களும் கருவறைக்குள் வழிபாடு செய்கின்றனர்" என்றார்.
இந்தக் கோயிலுக்கும் பெண்கள் இருமுடி கட்டி யாத்திரை வருகிறார்கள். இது ஆன்மிகத்தின் மூலம் கிடைத்த "சுகமான சுதந்திரம்" என்கிறார் பேராசிரியர் மீனாகுமாரி.
மாதவிடாய் குறித்த மரபான பார்வை எப்படி இருந்தது என்று எழுத்தாளரும், விமர்சகருமான இரா.முருகவேள் கூறும்போது . "மாதவிடாய் என்பது பழங்குடி சமூகங்களில் குழந்தை பிறப்பு தொடர்பானதாக, அதன் மூலம் வளத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது." என்கிறார்.
"எனவேதான் குழந்தை பிறப்போடு தொடர்புடைய மாதவிடாய் ரத்தத்தின் அடையாளமாகவே குங்குமம் அணியும் வழக்கம் உண்டானது. இந்த ஏதாவது ஒரு மரபில் இருந்து இந்த வழிபாட்டு முறையை பங்காரு அடிகளார் எடுத்திருக்கலாம்.
என்கிறார் முருகவேள்.
இந்த ஆதிபராசக்தி வழிபாட்டு முறைக்கு இந்திய தத்துவ மரபில் ஏதேனும் தொடர்ச்சி உண்டா என்று கேட்டபோது சென்னை பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் ரேவதி, "பெண் தெய்வங்களை வழிபடுவது என்பதே, பெண் தொடர்பான மாதவிடாயை தீட்டாகப் பார்க்காத பார்வையின் அடையாளம்தான்.
பெண் தெய்வங்களின் சிலைகள் கால்களை அகற்றி முழங்காலிட்ட நிலையில் ஆளுமையோடு அமர்வதாகவே அமைந்துள்ளன. சில மரபுகள் மாதவிடாயை பக்தியோடும், சில மரபுகள் அச்சத்தோடும் அணுகின. பிற்காலத்தில் பிராமணிய, வைதீகப் பார்வையின் வளர்ச்சியிலேயே மாதவிடாய் அசுத்தம் என்ற பார்வை உருவானது" என்றார்.
🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞
0 comments:
Post a Comment