தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:40

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
விவசாயம் மக்களின் தொகையை பெரும் அளவில் பெருக்கியது.ஏனென்றால் மக்கள் ஒரு கூட்டமாக, இடம் விட்டு இடம் போய், வேட்டையாடி உணவு சேர்த்து வாழ்பவராக இருந்த நிலை  நின்று விட்டதாலும் ,தமது பயிர்களையும் மிருகங்களையும் பராமரிக்கும் பொருட்டு ஓர் இடத்தில் நிலையான குடியிருப்பை அமைத்ததாலும் ஆகும்.அப்படியாக ஒரே இடத்தில் குடியேறி அதை மேம்படுத்தி ஒரு சமுக கட்டமைப்புக்குள் ஒரே மாதிரியான மொழியை பேசி,ஒரே மாதிரியான நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் தமக்கிடையில் கையாள தொடங்கும் போது வீடு,தாய் நாடு போன்ற கோட்பாடுகளும் அங்கு உதயம் ஆகின,அதனால் முதலில் அவர்கள் கிராமத்தை மேம்படுத்தினார்கள்.அதன் பின் நகரத்தை மேம்படுத்தினார்கள்.அதை தொடர்ந்து நாகரிகத்தை மேம்படுத்தினார்கள்.விவசாயம் இல்லாமல் மக்களிடையே ஒரு வர்க்கப் பிரிவு இல்லை,விவசாயம் இல்லாமல் அரசனோ அல்லது சமய குருவோ ஒரு உயர் நிலைக்கு அல்லது உயர் பதவிக்கு, மிகவும் செல்வாக்கு உள்ளவர்களாக, ஏற்றி வைக்கப் படவில்லை ,ஏனென்றால் மேல் அதிகமான உணவு உற்பத்தியே,இவர்களை அதில்,அந்த விவசாயத்தில்,நேரடியாக ஈடு படாமல் முழு நேர தலைவர்களாக,மத குருவாக மாற்றியது என்பதால் ஆகும்.விவசாயம் இல்லாமல் ஒரு இராணுவம் இல்லை.அது மட்டும் இல்லை பிரான்சு புரட்சியும் இல்லை,சந்திரனில் காலடி வைக்கவும் இல்லை.ஆனால்,விவசாயிகளின் வேர்வையில் இருந்தும் வெற்றியில் இருந்தும் ஆதிக்கங்கள் வளர்ச்சி அடைந்து,மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஒன்றை அங்கு கொடுத்தது.அந்த ஏழை விவசாயிகள் மெல்ல மெல்ல நாளடைவில் இந்த ஆதிக்கங்களுக்கே அடிமையானார்கள்.இது கடவுள் ,சமயம் என்ற பெயர்களால் ஆதிக்கங்கள் அவர்களின் மேல் இந்த நிலையை,திணித்தது எனலாம்.ஆண்டவனின் அடிமையாக இருப்பது அவ்வளவு இலகுவல்ல.தங்கள்  ஆண்டவனை குதுகலமாக வைத்திருக்க சுமேரியர்கள் மிக கடுமையாக  உழைக்க வேண்டி இருந்தது.கடவுளை எது திருப்தியடைச் செய்யும் என்பது எப்படி அவர்களுக்கு தெரியும் என நீங்கள் கேட்கலாம்? மத குருவே அதை அவர்களுக்கு சொன்னார்கள்.கடவுளின் விருப்பத்தையும் அவரின் செய்தியையும்-கடவுளுக்கும் சாதாரண மனிதனுக்கும்  இடையில் தன்னை இடைத்தரகராக அவர்களை நம்ப வைத்து-மத குரு அதை அவர்களுக்கு விளக்கினார்.எது முன்பு கடவுளை திருப்தி படுத்தியது ,எது கடவுளை ஆத்திரப் படுத்தியது என்பதை தேடி அறிந்தார்கள்.இப்படியான சிறப்பு அறிவால்,சமுதாயத்தில் மத குரு மிக வல்லமை உள்ளவர் ஆகவும் மிக முக்கியம் ஆனவராகவும் மாறினார்.மத குரு தங்களுக்கு கூறிய படியே அவர்கள் நடந்தார்கள்.ஏனென்றால்,மது குருவுக்கு கீழ்படிதல் ,கடவுளுக்கு கீழ்படிதலுக்கு ஒப்பானது என நம்பினார்கள். இதனால் மத குரு மக்களை நீண்ட நேரத்திற்கும் மிக கடுமையாகவும் உழைக்க வைக்க முடிந்தது.இது ஒரு மிகவும் கடுமையான வாழ்வு.தொடக்க சுமேரிய விவசாயிகள்  மரங்களை வெட்ட வேண்டி இருந்தது,வயலுக்கு நீர் பாசனம் செய்ய வேண்டி இருந்தது,மரக் கிளைகளால் வயலை உழுவ வேண்டி இருந்தது,அதே போல அறுவடை  கற்பலகையாலும் கல் அரிவாள்களாலும்[slate and stone. sickles]  செய்ய வேண்டி இருந்தது.அத்துடன் மிருகங்கள் தமது பயிர்களை அழித்து விடும் அல்லது உண்டு விடும் என்ற பயமும் அவர்களை ஆட்டி படைத்தது.இவை அனைத்தாலும் தொடக்க சுமேரிய  விவசாயிகளின் ஆரோக்கியம் பொதுவாக மோசமாக இருந்தது.அதனால்,அவர்கள் தங்களது முன்னைய மக்களான வேட்டையாடி சேரப்பவர்களை விட குறைந்த காலமே வாழ்ந்தார்கள். உதாரணமாக,5000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த விவசாய புரட்சியின் போது இவர்கள் ஆக சராசரியாக 33 வருடங்களே வாழ்ந்தார்கள். எப்பொழுது பயிர் நாட்டுதல் எப்பொழுது அதை அறுவடை செய்தல் என்பதை மத குரு அவர்களுக்கு
ஆலோசனை வழங்கினார்.அது போலவே எப்பொழுது வாய்க்கால் வெட்டுவது எப்பொழுது மண் அணை கட்டுவது என்பதையும் மக்களுக்கு கூறினார்கள். அது மட்டும் அல்ல எப்பொழுது போரிடுவது, எப்பொழுது சமாதனம் ஏற்படுத்துவது போன்றவற்றையும் மத குரு தீர்மானித்தார்.ஒரு காலத்தில் சுமேரிய மத குரு மக்களுடன் மக்களாக   வேலை செய்தார்கள்.ஆனால் நாளடைவில் பொது மக்களிடம் இருந்து விலகி விட்டார்கள்.பெரிய நில சொந்த காரர்களாக மத குரு மாறினார். கடவுளே நிலத்தின் அதிபதி என கூறி,தங்கள் நிலத்தில் வேலை
செய்ய  வறுமையான மக்களை கூலிக்கு அமர்த்தினார்கள்.மத குரு எழுத்தாளராக தேர்ச்சி பெற்றார்.மேலும் சில நகரங்களில் மூத்தோர் அவையில் அங்கம்  வகித்தார்கள் . என்றாலும் உலகின்  இந்த முதலாவது நாகரிகத்தை கட்டி எழுப்புவதில் மத குரு மிக முக்கிய பங்கு ஆற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது  

ஞாயிற்றுக்  கிழமையில் தேவாலயம் அல்லது வெள்ளிக் கிழமையில் ஆலயம்
என்பது போல சுமேரியர்களுக்கு சமயம் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் எல்லா நேரமும் இறை வழிபாடு செய்தார்கள்.அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அல்லது செயலையும் அவர்களின் கடவுளே  கட்டுப் படுத்தியது.இதனால் கடவுளுக்கு பணியாற்றுவதே இந்த அண்டத்தில் அவர்களின் பங்கு என சுமேரியர்கள் நம்பினார்கள்.கடவுள் நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ இருக்கவில்லை.கடவுள் வெறுமனே மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார்.அத்துடன் அவரை இடைவிடாது  சாந்தப்படுத்த வேண்டியும் இருந்தது.இதன் பொருட்டு,பண்டைய சுமேரியர்,கடவுளின் கருணையை  உறுதி செய்ய,தமது கூடிய நேரங்களை வழிபாட்டிற்கும், பிரார்த்தணைக்கும் ,தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தலுக்கும்
ஒதிக்கினார்கள்.தெய்வங்களுக்கு உணவு படைத்தலும் மிருகங்கள் பலியிடுதலும்  வழமையாக இருந்தன.பக்தர்கள் ஆலயத்திற்கு  தானம் கொடுத்தார்கள்.மத குருவே ஆண்டவ னுடன் கதைத்து தமது கொடையை ஆண்டவனுக்கு வழங்குவார் என நம்பினர்.அதனால் தானத்தை மத குருவிடம் கொடுத்தனர்.  "உருவ சிலைகள்,தாயத்துக்கள்,மந்திரங்கள்" அங்கு முக்கியமாக இருந்தன. பொது
மக்களின் நாளாந்த பிரார்த்தணைக்கு செவி சாய்ப்பதை விட வேறு முக்கிய வேலைகள் தலைமை கடவுள்களுக்கு இருக்கிறது என் நம்பினர்.ஆகவே   தனிப்பட்ட கடவுள்கள் ஏற்படுத்தப்பட்டு அவரை தலைமை கடவுள்களுக்கும் மக்களுக்கும்  இடையில் இடைத்தரகர்களாக பாவித்தார்கள்.அதாவது  தனிப்பட்ட கடவுள்கள் மக்களின் பிரார்த்தணையை கேட்டு அதை தலைமை கடவுள்களுக்கு அஞ்சல் செய்வதாக கருதினார்கள்.

வீடு,தாயகம் என்ற கோட்பாடு மேலும் வளர்ச்சி அடைய, முதன்மையான
இயற்கை கடவுளை தவிர ஒவ்வொரு நகரமும் தமக்கு என  சிறப்பு தனிப்பட்ட கடவுளை வைத்திருக்க தொடங்கினார்கள்.இந்த சிறப்பு மிக்க கடவுளே தமது நகரம்,நிலம்,மக்களின் அதாவது தமது தாயகத்தின் தலைவர் அல்லது ஆள்பவர் என நம்பினர்.அங்கு இந்த கடவுளின் இடத்தில் மத குருவே  ஆட்சி நடத்தினார்.இந்த சிறப்பு மிக்க கடவுளுக்கு மரியாதை கொடுக்கும் முகமாக அல்லது கௌரவம் படுத்த,மத குரு மக்களை ஆலயம் கட்ட செய்தார்.இது சுமேரியன் நகரத்தில் பெரியதாகவும் சிறப்பு மிக்கதாகவும் இருந்தது.இந்த கட்டிடம் குன்று மாதிரி அங்கு எழும்பியது.இந்த ஆலயம் சிகுரத்[ ziggurat] என அழைக்கப்பட்டது.மெசொப்பொத்தேமியா சேற்று நிலமாகவும்,தண்ணீரால் நிரந்த நிலமாகவும்,மேலும் வறண்ட சம மட்டமான தரையாகவும் இருந்தது. இதனால்,ஆண்டவனை வணங்குவதற்காக  உயரமாக எழுப்பப்பட்ட சிகுரத் எமக்கு வியப்பை தரவில்லை.அது மட்டும் அல்ல,உலகம் முழுவதும் ஆண்டவன் உயரத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.ஆகவே மலை அல்லது குன்றுகள் இல்லாத இந்த மெசொப்பொத்தேமி யாவில் இதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை நகரத்தின் சிறப்பு தெய்வத்தை விட அங்கு மற்ற தெய்வங்களும் சிறு உருவ சிலையில் இருந்தன.இந்த சிகுரத் கைவினைஞர்களின்[craftsmen] வேலைத் தலத்தையும் வழிபாட்டிற்கான ஆலயத்தையும் கொண்டிருந்தது.சிற்பம் வடிப்பவனும் மாணிக்க கல் வெட்டு பவனும் நெய்த கம்பளியை படுவேகமாக காலால் மிதித்து மென்மையாக்கிறவனும் [fullers]ஆயுதங்கள் செய்யும் உலோக தொழில் நிபுணர்களும் அங்கு இருந்தனர்.சில சிகுரத் 70 அடி உயரம் வரை இருந்தன.சிகுரத்தின் மேல் கடவுள் வாழ்வதாக சுமேரியர் நம்பினர். அங்கு  கடவுளுக்கு தினமும் உணவு, மிருகங்கள் என நிவேதனம் [மது,பியர்,பால்,இறைச்சி போன்ற படையல்]செய்தார்கள்.அது மட்டும் அல்ல பல நாட்கள் நீடிக்கும் திரு விழாக்கள் நடத்தினார்கள்.அமாவாசை, 7ஆவது,15 ஆவது நாள்,மாதக் கடைசி போன்ற நாட்களில் சிறப்பு  விருந்து படைத்தனர்.எப்படி ஆயினும் மிக முக்கிய நாள் புது வருடப் பிறப்பாகும்.ஒரு நாளில் மூன்று தரம் மத குரு ஆண்டவனுக்கு உணவும் பானமும் படைத்தார்.கடவுள் இருக்கும் மூலத்தானத்திற்கு மத குரு மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.ஆலயத்தின் தலைமையை சங்க[sanga/சங்கம்?] என அழைத்தார்கள்.ஆலயத்தின் கணக்கு வழக்குகள்,கட்டிடங்கள்,நாளாந்த நடவடிக்கைகள்,போன்றவை எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை  இந்த "சங்க" கவனித்தது .ஆலயத்தின் ஆன்மிக தலைவரை "என்"[en] என அழைத்தனர்.இந்த "என்" ஆணாகவோ பெண்ணாகவோ அந்த நகர தெய்வத்தை பொறுத்து இருந்தது.இந்த "என்" இன் கீழ்,வேறு பல மத குரு நிலைகள் இருந்தன.உதாரணமாக,குட , மக , கல, நின்டின்கிர், இஸ்ஹிப் [guda, mah, gala, nindingir, and ishib]போன்றவை ஆகும்.இவர்களின் சரியான பங்கு தெரியவில்லை. என்றாலும் தெய்வத்துக்குப் படைக்கப்படும் பானத்திற்கு பொறுப்பாக  "இஸ்ஹிப்"பும் ஆலய கவிஞர் அல்லது பாடகராக "கல"வும் இருந்தனர்.

தமது முன்னைய காலத்தையும் அது போல இனி வரும் காலத்தையும் கடவுளே கட்டுப்படுத்துகிறார் என சுமேரிய பொது மக்கள் நம்பினார்கள்.எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப்படுத்தியதாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு வழங்கியதாகவும் நம்பினர். தமது ஆற்றலாலும் திறமையாலுமே உலகின் முதலாவது நாகரிகம் மலர்ச்சியுற்றது என்ற அறிவு விளக்கம் அவர்களிடம் இருக்கவில்லை.தமது தொழில் நுட்ப,சமுக வளர்ச்சி பற்றிய ஒரு உள்ளறிவு அவர்களிடம் இல்லை.சுமேரிய மத குரு மார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை  அதற்கு தக்கதாக திரித்து இந்த தொழில் நுட்ப,சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால் ஆற்றலால் அறிவால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து  அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர்.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கம் இலக்கியம் ,தமிழரின் செல்வாக்கு நிறைந்த புகழ் பெற்ற தெய்வம்,முருகன் கூட  மலையில் வாழ்வதாகவும் ,மக்கள் தமது நோயை,குறைகளை போக்க அவருக்கு காணிக்கை, படையல் செய்வதாகவும் கூறுகிறது.அப்படியான பாடல் இரண்டை -ஐங்குறுநூறு 243,அகநானூறு 22-கிழே தருகிறோம்

"கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி எனக் கூறும்
அது மனம் கொள்குவை அனையிவள்
புது மலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே."[ஐங்குறுநூறு 243]

[சிலம்பின் கடவுள் – mountain god (Murukan),பேணி – offerings ,மழைக்கண் – wet eyes, புலம்பிய – in distress, நோய்க்கே – for the disease]
"அணங்குடை நெடு வரை உச்சியின் இழி தரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
...............................................................
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகு ஆற்றுப் படுத்த....................................." [அகநானூறு 22]

வேலனும் (மலை நாட்டுப் பூசாரி) வெறியாடும் களத்தை நன்கு அமைத்து முருகனுடைய வேலுக்கு மாலை சூடினான். சத்தமாகப் பாடிப் பலி கொடுத்தான். அழகிய சிவந்த தினையினை குருதியுடன் கலந்து தூவி முருகனை வருமாறு அழைத்தான் என்கிறது/

[அணங்குடை நெடு வரை – tall mountains with gods , உச்சியின் இழிதரும் – cascading down the summits, கணம் கொள் அருவி – heavy waterfalls, கான் கெழு நாடன் – lord of the land dense with forests, களம் நன்கு இழைத்துக் – grounds well set, கண்ணி சூட்டி – wore garlands, வள நகர் – rice house, சிலம்பப் பாடி – sing loud, பலி கொடுத்து – gave offerings, உருவ செந்தினை – pretty red millet, குருதியொடு தூஉய் – throw with blood, முருகு ஆற்றுப் படுத்த – to appease Murukan, ]

குறிப்பு:அகநானுறு 242:" ...வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்...."[மறி உயிர் வழங்கா அளவை – before a young goat’s life is offered]- அது எதன் இரத்தத்துடன் கலக்கப்பட்டு இருக்கலாம் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.[ஆரம்பத்திலிருந்து வாசிக்க  →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01]  
பகுதி 41 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:41.
பகுதி:41 அடுத்தவாரம் தொடரும்

1 comment:

  1. UNGALADHU VARALATRU POLISAM MIGAVUM SIRAPAGA ULLADHU , MANAMARTHA NANTRIGAL , VARALARU TAMIL PATAIPU THODARATUM

    ReplyDelete