"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 20


விடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம். ஆங்கில பழமொழி ஒன்று நேரத்துடன் உறங்கி நேரத்துடன் விழித்தெழுவது ஒரு மனிதனை ஆரோக்கியமான, செல்வந்தனாக, ஞானமுள்ளவனாக [Early to bed and Early to rise, makes a man healthy, wealthy, and wise] மாற்றுகிறது என்கிறது. இப்படி அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்து நலமுடன் வாழ்ந்து வந்த நம் மூதாதையர்களின் பழக்கத்தை நாம் இன்று, இந்த மாறிவரும் நவீன உலகில் கைவிட்டு விட்டோம், அது இன்று பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழி அமைத்து விட்டது. அதிகாலை விழிப்பின்
பின்னணியில், நோய்களைப் போக்கி ஆரோக்கியம் தரும் மிகப்பெரிய அறிவியல் புதைந்து இருக்கிறது. ஆங்கில பழ மொழிக்கு பல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதிகாலை விழிப்பின் குணத்தை தேரையர் சித்தர் தனது பாடலில் விளக்கமாக தந்துள்ளார்.

"புத்தி யதற்கு பொருந்து தெளிவளிக்கும்
சுத்த நரம்பினறல் தூய்மையுறும்; -- பித்தொழியும்
தாலவழி டாதபித்தம் தத்தம் நிலை மன்னும்; அதி
காலை விழிப் பின் குணத்தைக் காண்"

என்கிறார் அன்றே, அதாவது, அதிகாலை விழிப்பதினால் புத்தி தெளிவு உண்டாகும். இரத்தம் சுத்தமாகும். அதிக பித்தம் இருந்தால் அது நீங்கும், எனவே நோய்கள் வராது. என விடியற்காலையில் விழிப்பதன் நன்மைகளை விளக்குகிறார். ஆசாரக்கோவை.தனது வைகறை இலக்கிய பாடல் [41] இல் :

"வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையார் கண்ட முறை"

என மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை நீதி நூலாக கூறுகிறது, இவை எல்லாவற்றையும் ஒரு வரியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் "வைகறைத் துயில் எழு " என ஆத்திசூடியில் கூறியிருப்பதையும் கவனிக்க. முன்பு இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைவின் போது, படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வேலை நிமித்தம் மற்றும் பல காரணங்களால் அவை தொலைந்து வருகின்றன. நாம் வழி வழியாக கடைபிடித்த நடை முறையும் மாறுகின்றன. இன்று, இரவில் நீண்ட நேரம் விழிப்பதும் பகலில் நெடுநேரம் கழித்து எழுவதும் இயலப்பாகி விட்டது. அதனால், உடலும் மனமும் புத்துணர்ச்சியாகவும், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் ஒரு கட்டுப்பாட்டிலும் [The body and mind will stay fresh, Constipation and indigestion will remain under control and etc ] இருக்கக் கூடிய பல நன்மைகளை நாம் தொலைத்து விட்டோம். வைகறை என்ற விடியற்காலையில் துயில் எழுவது தமிழர்களின் மரபாக இருந்ததை சிலப்பதிகாரம்,  ஊர் காண் காதையில்,

 "புலரி வைகறைப் பொய்கைத் தாமரை, மலர்பொதி யவிழ்த்த வுலகுதொழு மண்டிலம், வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப"

என்ற வரி உறுதி படுத்துகிறது. அதாவது புலர்கின்றதாகிய வைகறைப் பொழுதின்கண், குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்த உலகினுள்ளார் யாவரும் வணங்கும் ஞாயிறு, பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம், வாளினை ஏந்திய பாண்டியனது, வீரத்தான் மேம்பட்ட வண்மையான் உயர்ந்த மதுரை நகரத்தினைத் துயிலினின்றும் எழுப்ப என்கிறது. இன்னும் ஒரு காலை நிகழ்வையும், அவை இன்று குறைந்து கொண்டு வந்தாலும், சொல்லுவது அவசியம் என்று எண்கிறேன். பெரும்பாலும் தமிழ் கிராமப் புறங்களில், காலையில் சாப்பாடு
செய்ததும், ஒரு கவளம் எடுத்து 'கா கா' என்று கூவி அழைத்து, அந்த உணவை காகத்திற்கு படைக்கும் மரபை இன்றும் காணக் கூடியதாக உள்ளது. பழம் பாடல் ஒன்று காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில குணங்களை வரிசையில் கூறும் பொழுது முதலாவதாக 'காலை எழுந்திரு' என வலியுறுத்துவதையும் காண்க.

"காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல்சால
உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்"

பாதணி என்ன கேவலமா? அதை வெளியே ஒதுக்குவதென்ன தர்மமா? என்று சிலர் கேட்கலாம், உண்மையில் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் நாம் அழைக்கும் எமது காலணியை நாம் சுத்தம் கருதியே கழட்டி வைத்து விட்டு வீட்டினுள், ஆலயத்தினுள்  நுழைகின்றோம். யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலான விவிலியத்தில் [Bible], மோசஸ் [Moses] என்ற சமயத்தலைவர், எரியும் புதர் [“burning bush”] ஒன்றை அணுகும் பொழுது, அந்த எரியும் புதரில் இருந்து ஆண்டவனின் குரல் [“voice of God”], அவரை பாதணியை கழட்டுமாறு கட்டளை பிறப்பித்து, அவருக்கு இது ஒரு புனித நிலம் [“holy ground”] என்று சொன்னது. இன்றும் பெரும்பாலான மதங்களில், புனித தளத்திற்குள் போகும் முன் காலணியை கழட்டி வைத்து விட்டு செல்வது வழமையாக உள்ளது. உதாரணமாக, பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப் பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை முழுக்க முழுக்க சுத்தம் கருதியே கழட்டி விடுகிறோம், மற்றும்படி கடவுள் பாதணியை கழட்டி வந்தால் தான் தனக்கு மரியாதை என்று என்றும் சொல்லவில்லை, ஏன் ஒரு பாரதத்தையே ஆண்ட பாதணியின் காவியம் தெரியாதா ? 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]

பகுதி: 21 வாசிக்க கீழேயுள்ள தலைப்பில் அழுத்துங்கள் 


0 comments:

Post a Comment