ஆடி மாதம் என்பது பொதுவாக இந்து சமயம் கலந்த தமிழர் மரபில் போற்றுதலுக்குரிய, வணக்கத்திற்குரிய ஒரு புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. எனினும் கல்யாணம் போன்ற மகிழ்வான சடங்குகளுக்கு அதையே அமங்கலமான [an inauspicious month] மாதமாக அவர்கள் கருதுகிறார்கள். தை மாதம் அறுவடைக்கு பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் என கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா மகளிர்,ஆடவர் [விடலை/a male child]. திருப்ப திருப்ப சொல்லும் கூற்று:"தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். ஆனால் இதற்கு எதிராக இந்து மரபில் ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக சில பல காரணங்களால் அன்று கருதப்பட்டு அது அவர்களின் பாரம்பரியமாக இன்றும் தொடர்கிறது.
"ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!" என்ற ஈழ கவிஞர்
நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் அந்த ஆனந்த கொண்டாட்டத்தில் கல்யாணம் எனோ விலக்கப் படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்று என கருதப் படுகிறது. ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஆடி பிறப்பில், சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும், கொழுக்கட்டையும்,ஆடி கூழும் பகிர்ந்து உண்டு, மகிழ்வாக கொண்டாடும் மரபு இன்னும் தமிழரிடம் தொடர்கிறது. இந்த ஆடி மாதத்தில், மணமாகா இளம் பெண்கள் குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை /சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் /வாழ்க்கை துணைவர் அமைய அம்மனின் திருவருள்/பாக்கியம் வேண்டுவதும் உண்டு. அப்படி ஒரு பாக்கியம் அம்மன் உடனடியாக அங்கு அருளினாலும், பூசாரியார் அல்லது நம்பிக்கைகள் ஆடி மாதம் முடியும் மட்டும் வழிவிட மாட்டார்கள்? அது மட்டும் அல்ல, வழிபாட்டை தவிர, 'வேறு எந்த நல்ல செயல்களும் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது'களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது': ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.என்ற நம்பிக்கை! 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப்
படைக்கும் என்றும் ,'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் அதற்கு சொல்லி வைத்து அதற்கு ஏற்றவாறு தமது பாரம்பரியத்தை வளர்த்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள்.
ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை,ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசே ட வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு/ஆடிப்பெருக்கு எனக்கூறுவர். மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள்
கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால் தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறார்கள். ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது-அப்படி இப்படின்னு சொல்லி கடத்தி விடுகிறார்கள் !. இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை,வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது /குறைக்கிறது .இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள். மற்றும் படி அங்கு ஒரு விசேடம் ஒன்றும் இல்லை. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை, குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் ஒரு மூடநம்பிக்கை. நல்லதை சொன்னால்தான் நாம கேட்க மாட்டோமே. அதனால்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொன்னார்கள்!. அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான்! வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சங்கடமாக [அசௌகரியமாக] இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப் பிடித்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும்
நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அது இன்று ஆடி கூழாக, பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த காலத்தில், நம்மை எந்த அளவிற்கு, குளிராக வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு நன்றாக தெரியும், அந்த அளவுக்கு எமக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கூடி இருக்கின்றன. ஆனால் இன்றும் இதை காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது எனக்கு. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய மக்கள் அதிகமாக சென்று, நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. உதாரணமாக, புது வீடு செல்ல கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ண கூடாது போன்றெல்லாம் இன்னும் நடை முறை படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது மட்டும் எனக்கு தெளிவாக புரிகிறது .
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk
]
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]
No comments:
Post a Comment