"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 18


பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் ஒரு தோப்புக்கரணம் மூலம் அனுபவித்தவர்கள் எம் மூதாதையர்கள். இவர்கள் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சி ஒன்றை எதோ ஒரு கால கட்டத்தில் எமக்கு தந்துள்ளார்கள். இந்த தோப்புக்கரணம் பிள்ளையார் வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. இங்கு வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு
தோப்புக்கரணம் [உக்கி போடுதல்] ஆகும். தோர்பி என்றால்இரண்டு கைகளினால்என்றும், ‘கர்ணம்என்றால்காதைப் பிடித்துக் கொள்வதுஎன்றும் பொருள் என சிலரும், தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் தப்புக்கரணம் என்றும், அந்த தமிழ்ச் சொல் வழக்காற்றில் திரிந்துதோப்புக் கரணம்என்றாயிற்று என்று சிலரும் விளக்கம் கொடுக்கின்றனர். இது தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறலாம்.

எது எப்படியாயினும் இந்த தோப்புக்கரண பழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டு அல்லது சற்று முன்னும் பின்னும் பழமை வாய்ந்தது என ஊகிக்கலாம், என் என்றால், இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே போல, சங்கமருவிய கால ஐம்பெரும்காப்பியமான சிலம்பிலும் மணிமேகலையிலும் சீவகச் சிந்தாமணியிலும் கூட இல்லை. கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில், பிள்ளையார் ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், வாதாபியில், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். மேலும் பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே ஆகும், எனினும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பு காணக் கூடியதாக உள்ளது. அந்த குறிப்புகளிலும் கூட எங்கும் தோப்புக்கரணம் பற்றி எதுவும் காண முடியவில்லை.

இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான பிள்ளையாரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்தாலும், இது ஒரு தண்டனை முறையாகும். பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் இருந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இவைகள் எல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள், எனினும் இன்று இவை அருகிவிட்டன. தோப்புக்கரணம், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது என்றும், மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது என்றும் தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மனம் ஒருமுகப்பட்டு, ஞாபகசக்தி அதிகரித்து, படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து பொதுவாக உள்ளது.

ஆனால் இன்று இந்த தோப்புக்கரணம், 'சூப்பர்
பிரெய்ன் யோகா' என்ற பெயரில், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? [is now being researched and enthusiastically promoted in the West as "Super Brain Yoga."] லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார் [Dr. Eric Robins, a medical doctor in Los Angeles, calls it "a fast, simple, drug-free method of increasing mental energy"]. மேலும் பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் அவர் உறுதிப்படுத்தி கூறுகிறார் [He speaks of one student who raised his grades from C's to A's in
the space of one semester]. காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றது என்றும், அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்றும் அவர் சொல்கிறார். 

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன், புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் செய்யும் பொழுது தமிழரின் தற்காப்புக் கலையையும் எடுத்து சென்று அங்கு அறிமுகப் படுத்தினார், ஆனால் இன்றோ நாம் தற்காப்பு கலையினை நினைக்கும் பொழுது அது சீனா அல்லது ஜப்பான் என்று கருதுகிறோம், அது போலத் தான் இந்த தோப்பு கரணமும் ஒரு காலத்தில் அமெரிக்காவினதாக மாறலாமோ என்று ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றுகிறது ?  

எனவே இந்த எமது பழம் பழக்கமான தோப்புக்கரணத்தின் பெருமையை உணருங்கள், மற்றவர்கள் அதை சொந்தம் கொண்டாட முன்பு இது தமிழரின் பாரம்பரியம் என்பதை எடுத்து கூறுங்கள். இது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டும் அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று இன்று நாம் அறிவியல் அடிப்படையிலும் அறிகிறோம். எனவே தமிழர்கள் அறியாத தமிழனிடத்தில் உள்ள நல்ல பழக்கவழக்கம் இதுவாகிறது.  'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற வடிவில் பிறருக்கு நம்மிடத்தில் உள்ளவற்றின் அருமை- பெருமை இன்று புரிகிறது. ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். எம்மிடம் உள்ள நல்ல பாரம்பரியங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் எமக்கு எனோ புரிவதில்லை? எனவே இனியாவது சிந்தியுங்கள், அறிய முயலுங்கள் !! இதனாலோ என்னவோ முன்பு பாடசாலைகளில் குழப்படி செய்யும் அல்லது பிந்தி வரும் அல்லது குறைந்த புள்ளி பெரும் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்தார்களோ என இன்று அறிவியல் பூர்வமாக மீளாய்வு செய்ய என் மனம் ஏங்குகிறது ? 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 19 தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே அழுத்துக..

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]

No comments:

Post a Comment