திடீர் திடீரென்று மனிதர்கள் உட்கார்ந்த மாத்திரத்திலேயே இறந்துபோவது, இதுதான் அந்த ஆச்சர்ய செய்தி. செய்தியைச் சொன்னதுமே புருவங்கள் விரிகிறது அல்லவா? அதெப்படி மனிதன் தானாக எரிந்துபோக முடியும்? என்ற நம்முள் எழும் சாதாரண கேள்விகள்தான் விஞ்ஞானிகளுக்கும்... இது போன்ற சம்பவங்கள் கடந்த 300 ஆண்டுகளில் 200 சம்பவங்கள் நடந்துள்ளது. 300 வருஷத்திற்கு இவ்வளவுதானே என்று எளிதாக ஒதுக்கிவிடும் விஷயம் அல்ல இது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதை நாம் படித்திருப்போம். அதேபோல காய்ந்த சருகுகள், உச்சபட்ச வெய்யிலில் தீப்பற்றி எரிவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், சற்றும் நம்ப முடியவே முடியாதபடி மனிதன் எப்படி தானாக எரிய முடியும்?
1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை. இதில் மனைவி தீப்பிடித்து இறந்துவிட்டாள். கொன்றது கணவர் என்பதுதான் வழக்கு. நீண்டநாள் நடந்த பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் இறுதி நாளும் வந்தது. இந்த வழக்கில், கணவர் குற்றமற்றவர்; அவர், மனைவியை தீ வைத்து கொலை செய்யவில்லை. அவர் மனைவி தானாகவே தீப்பற்றி எரிந்துபோனார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு எல்லாருக்கும் திகைப்பாக இருந்தது. மருத்துவ பரிசோதனைக் குழுவும் நீதிபதியின் தீர்ப்பை ஆமோதித்திருந்தது. இப்படி மனிதர்கள் தானாக தீப்பற்றி எரிந்துபோவதை ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் என்று மருத்துவ உலகம் பெயரிட்டது.
இதேபோல ஒரு சம்பவம் 1951ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி வாக்கில் நடந்தது. இம்முறையும் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் மேரி ரீசர் 67 வயதான இந்த மூதாட்டியை பார்க்க அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிற்குள் ஏதோ எரிந்துபோன நெடி வீசியது. பதற்றத்துடன் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு,மேரி ரீசர் நாற்காலியில் அமர்ந்தபடி தீப்பிடித்து இறந்துகிடந்தார். இதைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி. பிரேத பரிசோதனை, தடயவியல் சோதனை இப்படி எல்லா பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் மேரி ரீசர் தானாக எரிந்துபோயுள்ளார். அவர் உடலில் 2500 டிகிரி வெப்பம் தாக்கப்பட்டதால் உடல் கருகி இறந்துள்ளார் என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர்.
இதேபோல 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ஒரு இரவு விடுதியில் மேபல் ஆண்ட்ரூஸ் என்ற இளம்பெண் தன் ஆண் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று, அந்தப் பெண்மணியின் பின்புறம், மார்புப் பகுதி, தோள்பட்டை என்று உடலின் அங்கங்கள் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதைச் சற்றும் எதிர்பாராத அவரது நண்பர் அவளை விட்டு விலகி நின்று அதிர்ச்சியாய் பார்த்திருக்கிறார். ஆனால், அவளின் மேல் படர்ந்த தீ, அறையில் எந்தப் பகுதியையும் பாதிக்கவில்லை. உடனடியாக மேபல் மீது எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மேபல் கூறும்போது, எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் மது அருந்திவிட்டு என் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று இதுவரை நான் உடலில் உணரமுடியாத வெப்பம் என்னுள் இருந்து புறப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் என் உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் பற்றி எரிய ஆரம்பித்தது. நீல நிற ஜூவாலையுடன் அந்த நெருப்பு என்னைப் பற்றிக்கொண்டது. இது எதனால் என்று என்னால் உணர முடியவில்லை என்று இன்னும் அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்.
இந்த மாதிரி சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரி செய்தியை எல்லாரும் ஆச்சர்யமாக படித்தார்களே தவிர இதனுள் மறைந்துகிடந்த விபரீதத்தை யாரும் உணரவில்லை. முதன்முதலில் ஸ்பாண்டேனியஸ் ஹுயூமன் கம்பஷன் என்ற விபத்து குறித்த தொகுப்பை, 1763ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் டூபாண்ட் என்ற அறிஞர் வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையின் தாக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1800ஆம் ஆண்டு, சார்லஸ் டிக்கன் என்பவர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷனை மையக் கருவாகக் கொண்டு பிளீக் ஹவுஸ் என்னும் நாவலை எழுதினார். இந்த நாவல் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதையில் நாயகி தானே தீப்பிடித்து இறந்துபோவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அவள் இறந்த காரணத்தையும் கதையாசிரியர் சொல்லியிருப்பார். அதில் மதுவில் உள்ள ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும்போது, உடல் இம்மாதிரி தானாக தீப்பற்றி எரிந்துவிடும் என்ற காரணத்தை சொல்லியிருப்பார். இந்தக் காரணம் கதைக்காக சொல்லப்பட்ட காரணமாக இருந்தாலும், இதிலும் உண்மை இருப்பதாக மருத்துவ உலகம் இறுதியில் உறுதி செய்தது.
இதுவரை உலகம் முழுவதும் ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் மூலம் எரிந்துபோனவர்களில் 80 சதவீதத்தினர் பெண்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் மிக அதிகமான உடல் எடையும், அதிக அளவு மது அருந்துபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எரிந்துகிடந்த உடல் அருகில் மஞ்சள் நிற எண்ணெய் போன்ற திரவம் கசிந்திருக்கிறது. இறந்தவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மார்புப் பகுதி, இடுப்பு மற்றும் அடிவயிறு பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் எரிந்துபோயிருக்கிறது. ஆல்கஹாலை வினைப்படுத்தும்போது அது ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் மீத்தேன் அல்லது ஈத்தேன் போன்று ஒரு எரிவாயுவையும் வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அருந்திய கட்டுக்கடங்காத ஆல்கஹால்கள் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் எரிவாயுவாகவும் உற்பத்தியாகி, இது முற்றிலும் அதிக தசை கொண்ட உடல் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். உடலில் அளவிற்கு அதிகமான வெப்பமோ அல்லது ஏதோ ஒரு வகையில் லேசான மின்தூண்டலில் உடல் உட்படும்போது, இந்த எரிவாயு பற்றி எரிய ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள், ஆய்வறிக்கையை வெளியிட்டனர். நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ அமானுஷ்யங்கள் கிடையாது. தானாக மனிதன் எரிவது ஆச்சர்யமூட்டும் செய்திதான் என்றாலும், மது உடலை அழிக்கும் என்ற போதனையையும் இந்தக் கட்டுரை உணர்த்தாமல் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைதானே!
No comments:
Post a Comment