பண்டைய காலத்தில் ஆண்கள் வெளி வேலையும் பெண்கள் வீட்டு வேலையும் செய்தனர், அது மட்டும் அல்ல ஆண்களின் வேலை கடுமையானதாகவும் நிறைய தசை வேலையாகவும் இருந்தன [on field work which involved lots of muscle work], ஆனால் பெண்களின் வேலை அதிக உடல் வேலையற்று இருந்தது, இதனால், குறைந்த உடற்பயிற்சி மற்றும் செயல்பாடுகளால் பெண்களின் இரத்த அழுத்தம் கூட வாய்ப்பு இருந்தது. அவர்கள் ஒரு பொறுமையின்மை [impatience] நிலையை
அடைந்தார்கள்.
ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டு பழமைவாய்ந்த உலகின் முதலாவது படைத்தல் கதை கொண்ட சுமேரியன் முத்திரை ஒன்று பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும், அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு ஆண் தெய்வங்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என பதிந்து உள்ளது. அந்த பழம் முத்திரை: "மனிதனைப் போன்ற கடவுளர்கள் வேலையில் மனச்சலிப்பு அடைந்து உடல் வேதனை அடையும் போது, அவர்களின் உழைப்பு கடுமையாயிற்று, வேலை கனமாயிற்று, துன்பம் அதிகரித்தது" [ "When the gods like men bore the work
and suffered the toil, the toil of the gods was great, the work was heavy, the
distress was much"] என கூறுகிறது. இது சங்க காலத்திற்கு முன்பே ஆண்கள் கடும் வெளி வேலை செய்து கொண்டு பெண்களை வீட்டில் அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வைத்திருந்தனர் என்பதை சுட்டி காட்டுகிறது எனலாம். அந்த அழகை இருபாலாருக்கும் நகைகள், உடைகள் கொடுத்து இருக்கும், எனினும் சுமேரியன் பெண்கள் மிகவும் பரந்த அளவில், உதாரணமாக தங்கத்தினால் சித்தரிக்கப்பட்ட இலைகள் மலர்கள் கொண்ட தலை பாகை, பெரிய பிறை வடிவ மூக்குத்தி, முறைப்பான கழுத்துப்பட்டை, பெரிய கழுத்தணிகள், ஒட்டியாணம், ஆடை முள், மோதிரம் போன்ற [Sumerian women wore a much wider variety of jewelry
such as golden head dresses made of sheet gold in the form of foliage and
flowers, huge crescent shaped earrings, chokers, large necklaces, belts, dress
pins and finger-rings] பல்வேறு நகைகளை அணிந்திருந்தார்கள் என அறிய முடிகிறது,
கி. மு. முதல் நூற்றாண்டில் அதிகமாக எழுதப்பட்ட மனு ஸ்மிருதி அல்லது மனு நீதி, தனது மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுளில் மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது என்று அர்த்தத்தில்,"ஒரு மனைவி அழகாக மகிழ்வோடு அலங்கரித்தால், அவளுடைய வீடு முழுவதும் அழகுபடுத்தப்படும், மகிழ்ச்சி அடையும்; ஆனால், அவள் ஆபரணத்தை கைவிட்டால், அனைவரும் அழகை இழப்பர்,மகிழ்வை துறப்பர் என்கிறது
["A wife being gaily adorned, her whole house is embellished; but, if she
be destitute of ornament, all will be deprived of decoration."- The Laws
of Manu ,chapter III, Verse 62] ,பண்டைய
சங்க பாடலும் ஆணின் அறிவையும் பெண்ணின் அழகையுமே முதன்மை படுத்துகிறது. பூவையரின் அங்கங்களில் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது
போலத் தோன்றுவதாலோ என்னவோ நம் முன்னோர்கள் அந்த அணிகளுக்கு ‘நகை’ என்னும் பொருத்தமான பெயரை சூட்டினர் எனலாம். அந்த அழகு மகிழ்வுதான் மனு நீதி சொன்னமாதிரி குடும்பத்தில் ஒரு மகிழ்வை கொடுத்தது. உதாரணமாக, கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்கிறான்.
'உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்று புறநானூறு: 189 இல் நக்கீரர் கூறுகிறார். அதாவது இடுப்பை
சுற்ற ஒரு துண்டும் மேலே போட ஒரு தூண்டும் என்கிறது. முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரையில்
மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் பொதுவாக வெற்றுடம்பாகத் தான் இருந்தார்கள். அந்த மேலே போடும் துண்டு தோளிலோ அல்லது தலைப்பாகையாக தலையிலோ அதிகமாக இருந்தன. மார்பை மறைக்கும் உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக, சிறுபாணாற்றுப்படை, வரி 26 இல் : 'பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என' -அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையும், முலையைப் போன்ற, என்று கூறுகிறது. திருஞான சம்பந்தர் கூட தனது தேவாரத்தில் 'மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்' -பெரிய கொங்கை களையுடையவளாய், ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான் மகள் பாட என்கிறார்.
எனவே பாரம்பரியமாகவே அன்றில் இருந்து இன்றுவரை நகைகள் அணிவது தமிழர் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. தங்கம், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டிவிடப்பட்டு உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கவும் இது உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது. வர்மம் அல்லது அழுத்துமிடம் அல்லது உயிர் நிலைகளின் ஓட்டம் என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். மனித உடலில் 108 வர்மங்கள் உள்ளன என அகத்தியர் கூறுகிறார். சித்தர்கள் அன்று நோய்களை களைய வர்ம புள்ளிகளை அதன் பயன்பாட்டை பொறுத்து கையாண்டனர் என அறிகிறோம். பொதுவாக அணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எனவே மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, புறநானுறு 398 இல்: 'வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு'-மலை போன்ற தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் வியக்கும், பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும் என்கிறது. மேலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு புலம் பெயர்ந்தோரின் நாட்டுப் பாடல் ஒன்றில் காதில் ஆண்கள் அணியும் கடுக்கண் பற்றி ஒரு செய்தி உள்ளது. அதில் சில வரியை மட்டும் கீழே தருகிறேன்;
“கலகலண்ணு மழை பெய்ய
கம்பளித் தண்ணி அலை மோத
காரியக்காரராம் நம்பய்யா கங்காணி
கடுக்கன் மின்னலைப் பாருங்கடி’’
இலங்கையில் 1958ம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களின் தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் தமிழரிடம் இருந்தது), காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
ஆயுர்வேதத்தின் படி, வெள்ளி தங்கம் என்பன குளிரூட்டும் பண்புகளை கொண்டு இருப்பதுடன் நமது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மையையும் கொண்டு உள்ளது. [metals like silver and copper have cooling
properties which directly affect our nervous system]. வெள்ளி நகைகள் உடலின் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி
சருமத்தை ஆரோக்கியமாக்குமாம்.
பொதுவாக தமிழர் உடலின் மேல் பகுதியில் தங்க நகைகளையும், உடலின் கீழ் பகுதியில் வெள்ளி நகைகளையும் பாரம்பரியமாக அணிகிறார்கள். உதாரணமாக காலில் அணியும் வெள்ளி கொலுசுவையும் கழுத்தில் அணியும் தங்க சங்கிலியையும் சொல்லலாம். மேலும்,பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படுகின்றது என்றும், இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம் என்றும், அதனாலே தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு அணிவிக்கப்படுகிறது
என்றும் கூறுகிறார்கள்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk
]
பகுதி: 18 வாசிக்க அல்லது ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே அழுத்துக..
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 18
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 18
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]
0 comments:
Post a Comment