"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 16



முன்னைய, பண்டைய நாட்களில், வீட்டின், சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக இருந்தன. ஆகவே எறும்புகள் இலகுவாக சாப்பாட்டு இலைக்கு ஊர்ந்து வரக்கூடியதாக இருந்தன. எனவே அவையை தடுக்கும் பொருட்டு அன்றைய நாட்களில் இலையை சுற்றி, சாப்பிட தொடங்கும் முன்பு நீர் தூவப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6]கொலைக்களக் காதை, 41-43,  கண்ணகி கணவனுக்கு, வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை,

"தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக்
கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,
தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு,
அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;"

என்று குறிக்கிறது.அதாவது, தாழை மரத்தின் வெண்ணிற மடல்களைக் கிழித்துக் கைத்திறன் மிக்க பெண் செய்து தந்த தடுக்கு இருக்கையில் கோவலன் அமர்ந்தான். கண்ணகி சுட்ட மண்ணால் செய்த மொந்தை ஒன்றில் தண்ணீர் கொண்டுவந்து மணக்கும் மலர் போன்ற தன் கைகளால் அவன் கால்களைத் தடவி விட்டாள். பின் மண்ணக மடந்தையின் உறக்கத்தை எழுப்புபவள் போல, தரையில் தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவினாள். வாழைக் கன்றில் அறுத்து வந்த  வாழை இலைக் குருத்தை விரித்து உணவு பரிமாறி "அடிகள்! அமுதம் உண்க" என்றாள் என்கிறது.  இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல்,வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது.இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி "PoemHunter.com"என்ற வலைதளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார். "Gleaming, green and live Like a tailless fish alive Neatly cut and placed Gemming sheen of water sprinkled ...",அதாவது உயிர் உள்ள வாலில்லா மீன் போன்று நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும் வாழை இலையில் படைத்து, மாணிக்கம் போல் பிரகாசிக்கும் நீரை தெளித்து, என்று பாடுகிறது. ஆனால் இந்த பழக்கம் பொதுவாக சாப்பாட்டை மேசையில் வைத்து நாம் கதிரையில் இருந்து சாப்பிட  தொடங்கியதும் பொருத்தம் அற்ற ஒன்றாக இருந்தாலும், சிலர், இன்னும் அதன் உண்மை பொருளை சரியாக புரிந்து கொள்ளாமல், அந்த பாரம்பரியத்தை கண்மூடித்த தனமாக இன்றும் பின்பற்று கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

தமிழரின் மிகவும் பெருமைக்கு உரிய மதம் சாரா பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலுடன் மிகவும் நெருக்கிய தொடர்புடைய ஒரு பாரம்பரிய வீரம் செறிந்த, இன்றும் தொடரும் விளையாட்டு ஏறு தழுவலாகும். அவர்கள் வாள் சண்டை, மல்யுத்தம், குதிரையேற்றம், மல்லர் விளையாட்டு போன்ற வேறு பல வீர விளையாட்டுகளையும் பாரம்பரியமாக அன்று கொண்டிருந்தனர். இந்த தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மிகவும் தொன்மையானது.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக கல்முத்திரையில் ஜல்லிக்கட்டிற்க்கான ஆதாரம் கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த
பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். சிந்துவெளி நாகரிகம், பண்டைய  தமிழர் நாகரிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

அதே போல,கொம்புகள் கூர் சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் திருவிழா சங்க தமிழகத்திலும் தனித்தன்மையுடன் விளங்கியது. இதை தமிழர் இலக்கியத்தில்கொல்லேறு தழுவல்என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கலித்தொகை-103:63-64 என்ற அடிகள், "கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என, காளையின் கொம்பு கண்டு
பயப்படுகின்ற எவனோ அவனை ஆயர் மகளிர் அடுத்த பிறவியிலும் கூட தழுவ மாட்டாள் என்று கூறுகிறது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது. உதாரணமாக, காளையின் கொண்டை(இமில்) முறியும்படி தழுவி, அதன் மேல் ஏறி, முடிவில் தனது இருகைகளாலும் இரு கொம்புகளையும் இறுக பிடித்தவாறு, அவன் தன் முகம் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் முன்னோக்கி பார்த்தவாறு அதன் மேனி தம்
மார்பில் பொருந்தும்படி தழுவினான் என்றும், இது அவன் அவளின் இரு மார்பகங்களையும் மென்மையாக தழுவது போல் இருந்தது என்றும் பல சங்க கால பாடல்களில் மீண்டும் மீண்டும் வர்ணிக்கப் படுவது இதை உறுதி படுத்துகிறது. இந்த ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு இதுவாகும். இந்த மற்போர் அல்லது எதிரெதிராக மனிதர் விலங்கு போராட்டம் உண்மையில், ஒரு காளை மாட்டை வேட்டையாடுவது அல்ல, இது ஒரு ஏறு தழுவுதல் ஆகும். இங்கு காளை மாட்டுக்கு எந்த தீங்கும் வரவிடுவதும் இல்லை, அந்த மாடுகளைத் துன்புறுத்துவது இல்லை. இன்றைய பெயரான ஜல்லிக்கட்டு,உண்மையில் பழமை யானதும் அல்ல, மூல பெயரும் அல்ல, பண்டைய தமிழ் ஆயர் சமுதாயத்தில் திறமையுள்ள, தகுதியுள்ள ஒரு மணமகனை தேர்ந்து எடுக்கும் பலப் பரிட்சையாகவும் இது அன்று இருந்தது. ஆயர் குலப்பெண்கள் தம்மை பின் தொடரும் ஆடவருக்கு தம்மை மணக்க வேண்டின் தமது காளையை பிடித்து அடக்கும்மாறு சவால் விடுவர். அப்படி அதை பிடித்து ஏறு தழுவிய ஆடவனை அவள் இன்முகத்துடன் விரும்பி மணப்பாள். இந்த ஏறு
தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம். இந்த வீர விளையாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம். ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம். எனினும் அதன் வடிவமும் நோக்கமும் இன்று மாறியுள்ளன. இது இக்காலத்தில் திருமணம் சம்பந்தப்பட்டது அல்ல, பணம் சம்பந்தப்பட்டது ஆகும். அது பிந்திய பெயரான சல்லிக்கட்டு என்ற பெயரிலேயே தெரிகிறது.
 [பகுதி:17வாசிக்க அல்லது ஆரம்பத்திலிருந்து வாசிக்கக் கீழேயுள்ள [பகுதி:01] தலைப்பினில் அழுத்தவும்.]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
பகுதி: 17 தொடரும்..

No comments:

Post a Comment