தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:38


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]    
நாம் நூற்றுக்கணக்கான தெய்வங்களை சுமேரியர்களின் வழிபாட்டில் அல்லது மயத்தில் காண்கிறோம்.அங்கு பல,சுமேரியர்களின் செல்வாக்கு உள்ள தெய்வங்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள், ஊழியர்கள் ஆகியோரையும் சிறு தெய்வங்களாக காண்கிறோம்.இந்த தெய்வங்கள் ஒரு படி நிலையில் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளது.இந்த ஒழுங்கில் உச்சியில் இருப்பது அரசன் அல்லது அதியுயர் ஆட்சியாளர் ஆகும்.அந்த உயர் இடத்தை மிகவும் செல்வாக்கு உள்ள,பலம் வாய்ந்த நாலு கடவுள்கள் நிரப்புகிறார்கள். அவை  நீர் கடவுள்-என்கி[water-god Enki],காற்று கடவுள்,அதாவது வாயுபகவான்-என்லில்[air-god Enlil],விண்/வான் கடவுள்-அன்/அனு[“an” means “heaven.”][heaven-god An/Anu],தாய் கடவுள், அதாவது மலையைக் குறிக்கும் பெண் தெய்வம்-நின்-
ஹர்சக்[great mother goddess Ninhursang] ஆகும்.[சுமேரிய மொழியில் நின் என்பது பெண்ணையும் ஹர்சக் என்பது புனித மலையை அல்லது மலையடிவாரக் குன்றையும் குறிக்கும்/from Sumerian NIN "lady" and ḪAR.SAG "sacred mountain, foothill"].நின்-ஹர்சக் எல்லா உயிர் இனங்களினதும் தாயாக கருதப் படுகிறார்.இவர் அன்,நம்மு[An and Nammu] இருவரினதும் மகள் ஆவார்.மேலும் அடிக்கடி இவரை என்லில்லின்  சகோதரியாகவும் ஆனால் சிலவேளை மனைவியாகவும் அழைக்கப்படுகிறார் இதில் முதல் மூன்று கடவுளும் பண்டைய சுமேரிய காலப்பகுதியில் முக்கியம் பெற்று, மும்மூர்த்திகளாக இருந்தன.இதனால், பண்டைய சுமேரியாவில், மூன்று கடவுட் கோட்பாடு முக்கியமாக அமைந்தன.இந்தக் கடவுளரின் மூலத்தை அறிவது கடினமானது.சுமேரிய மொழியில் அன் என்பது வானத்தைக் குறிக்கிறது. அனு வான் கடவுளாகும். அனு சுமேரியரின் படைத்தல் தெய்வம்! அண்டவெளி, ஆகாயம் அனைத்துக்கும்
கடவுளான அனு தான் உயிர்களை படைப்பதாக சுமேரியர்கள் நம்பினார்கள்.அனுவை மனிதர் மட்டுமல்ல வானத்துப் பறவைகளும் நிலத்தில் ஊர்வனவும், மரம், மலை யாவும் வணங்குவதாகக் கொள்ளப் பட்டது. அடுத்ததாக என்கி அல்லது எயா என்ற காக்கும் கடவுள் ஆவார்.என்கி[Enki/Ea][En=lord, ki=earth] என்பது பூமி. பூமி  ஆண்தெய்வம். தூய நீருடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பாதாள உலகில் உள்ள நீரும் அதாவது நிலத்தடி நீர் கூடஎன்கிதான்! அதாவது,என்கி தூய நீருடன் அதன் மூலம், ஆக்கச் சக்தியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. எல்லா வற்றையும் விட அது ஆற்றல் மிக்கதாக விளங்கியது.அறிவு புத்தி என்பவற்றுடனும் என்கி குறிப்பிடப்படுகிறது.மேலும் கரையோர மீனவர்கள் என்கியை  தமது பாதுகாப்புக் கடவுளாகக் கொண்டனர்.அதே போல மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில்[En=lord, lil=air] ஆவார்.என்லில் காற்றுக் கடவுளாகும்.சுமேரிய மொழியில்லில்’’ என்பதற்கு  காற்றுசுவாசித்தல், ஆவி என்று பொருள் கொள்வர்.மலைக் காற்றுடனும், வெள்ளத்துடனும் இத் தெய்வத்தின் பெயர் தொடர்புபடுகிறது.என்லில் சக்தி மிக்கது. என்கி  புத்தியும் புனிதமும் கொண்டது. இந்த நாலு தெய்வங்களுமே மற்ற தெய்வங்களை படைத்தவர்கள் ஆவார்கள்.தொடக்கத்தில் அனு தெய்வமே சுமேரியர்களின் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் தலைமை தெய்வமாக இருந்தது.என்றாலும் கி மு 2500 ஆண்டு அளவில் என்லில் அந்த பதவியை தனதாக்கி கொண்டார்.என்லில் எல்லாரிலும் மேலான தெய்வமானார்.மக்களை தண்டிக்கும்,பாது காக்கும்   நல்வாழ்வை கொடுக்கும் தெய்வம் ஆனார்.இவர்  விண்ணினதும் மண்ணினதும்  அரசன் என அழைக்கப்பட்டார். மேலும் கடவுளின் தந்தை என்றும் எல்லா கடவுளின் அரசன் எனவும் போற்றப்பட்டார்.என்லில் அண்டத்திற்கான பரந்த அளவிலான திட்டம் ஒன்றை விருத்தி செய்தார். எனினும் அதை மேலும் மேம்படுத்தி அந்த திட்டத்தை நிறை வேற்றியவர் என்கி ஆகும்.

ஆரம்பகாலத்தில் மிக அதிக அளவிலான கடவுளின் உருவங்கள் மனித
வடிவிலமைந்திருந்தன.பாதி மீனும் பாதி மனிதனும் கொண்ட என்கி அல்லது எயா தெய்வத்தைவிட மெசொப்பொத்தேமியா தெய்வங்கள் மனித உருவினையே பெற்றிருந்தன. ஏனைய மெசொப்பொத்தேமியா தெய்வங்கள் பல சந்திரன், நட்சத்திரம், தூயநீர் போன்ற பல்வேறு பொருட்களின் தோற்றத்தை விளக்கும் மனிதத் தேவையினடியாக எழுந்தனவாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடவுள் படைத்ததாக அவர்கள் நம்பினர்.

மெசொப்பொத்தேமியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக 2500 க்கு மேற்பட்ட தெய்வங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. சுமேரியர் எண்ணிறந்த கடவுளரை வணங்கி வந்த போதும் அவர்களின் பிரதான கடவுள்களில்[Anu,Enlil,Enki, Ereshkigal,Inanna,Nammu,Ninhursag,Nanna,Ningal,Ninlil,Ninurta & Utu] ஒருவர்  சூரியனாகும். இதை அவர்கள்ஷமாஷ்’’ [Shamash]எனவும்  அழைத்தனர். இது நீதிக்கும் பாதுகாப்புக்குமுரிய கடவுளாகக் கருதப்பட்டது.மேலும் சுமேரிய புராண கதை படி  பபிலோனியன் அரசன் ஹம்முராபி சட்ட விதித் தொகுப்பை சூரிய கடவுள் ஷமாஷ் இடம் இருந்து பெற்றதாக அறிகிறோம்  சந்திரனையும் அவர்கள் வழிபட்டனர்.இதை நன்னா[Nanna] என அழைத்தனர் இது அறிவுக் கடவுளாகவும் இரவின் நீதிபதியாகவும் கருதப்பட்டது. இதுகாரன்’’[ Harran] மற்றும்ஊர்’’[Ur] போன்ற நகர்களில் சிறப்பாக வழிபடப்பட்டது.

சுமேரிய/பபிலோனிய சமயம் கடவுளுக்குச் சேவை செய்வதே மனிதனின் பிரதான கடமை எனப் பணித்தது. இதற்காக மக்கள் சடங்குகளிலும் தெய்வங்களுக்குப் படைப்பதிலும் ஈடுபட்டனர். ஆயினும் பொதுமக்கள் தெய்வங்களை  அணுக முடியாதிருந்தது. இச் செயல்களை புரோகிதர்களும் குருக்களும் செய்து வந்தனர்.

தெய்வங்கள் சில வேலை இரக்கமாக இருந்தார்கள்,சில வேலை கொடூரமாக இருந்தார்கள்.இதில் எதனிலும் கடவுள் செய்வதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என சுமேரியர் நம்பினார்கள்.உண்மையில் தாம் கடவுளின் அடிமைகள் என்று சுமேரியர் நம்பினர்.மேலும் தாம் பூமியில் பிறந்தது ,கடவுளுக்கு பணி புரியவும் கடவுளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என கருதினர்.அது மட்டும் அல்ல,கடவுள் மகிழ்ச்சியாய் இருந்தால் எல்லாம் நல்லபடி அமையும் எனவும் நம்பினார்கள்.அதாவது நிறைய உணவு உற்பத்தியும் ,ஆற்றின் வெள்ளப் பெருக்கு சீராகவும் முன்கூட்டியே அறியக் கூடியதாகவும், பூமி நடுக்கம் இன்றியும்,கடும் மணல் புயல் இன்றியும்,மற்றும் இயற்கை அனர்த்தங்கள் இன்றியும், வாழ்வு மிக இன்பகரமாக அமையும் எனவும் கருதினார்கள்.சில நேரங்களில் வாழ்வு மிக மகிழ்ச்சியாகவும் மற்றும் சில நேரங்களில் துக்கமாகவும் அமைகிறது என்று எமக்கு நன்றாக தெரியும்.சுமேரியாவில் அப்படி வாழ்வு ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது,அவர்கள் தங்களை தாங்களே பழிசுமத்தி கொண்டார்கள். அதாவது தாமே கடவுளை எரிச்சலடைய வைத்ததாக தம் மேல் பழியை  சுமத்துகிறார்கள்.கடவுள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால்,அவர் இலகுவாக கோபம் அல்லது எரிச்சல் அடைகிறார் அதனால் அவர் அதை மக்களிடம் காட்டுகிறார் என நம்பினர். சுமேரியர்களின் படைத்தல்  புராணம் இது ஏன் என விளக்கமாக சொல்கிறது.

சங்கம் இலக்கியத்திலும் பல தெய்வங்கள் அங்கீகாரம் படுத்தப்பட்டுள்ளதை காண்கிறோம்.உதாரணமாக  பழந்தமிழ்ப் பேரிலக்கணம்,தொல்காப்பியம் தமிழ் தெய்வங்களுக்கு நிலப்பாகுபாடு காட்டுகிறது. மாயோன்[திருமால்], சேயோன் [முருகன்],வேந்தன் [இந்திரன்], வருணன்,கொற்றவை ஆகிய தெய்வங்களை  குறிப்பிடுகிறது.மேலும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.இங்கு சிவனை தலைமையான கடவுளாகவும் முருகனை மக்களால் கொண்டாட்டப்படும் கடவுளாகும் குறிக்கிறது.அது மட்டும் அல்ல,முருகனின் தலைமை பணி வேட்டையாடுதலும் தேன் சேகரிப்பும் ஆகும்.அப்படியே  மாயோனின் பணி கால்நடை வளர்ப்பும்   பால் சம்பந்தமான பொருட்களுடன் கையாளுவதும் ஆகும்.

ஆரம்பத்தில் முருகன் உருவமில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே/சத்தியாகவே  வழி பட்டார்கள்.பின் மரத்திலும் கல்லிலும், இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள்.சிந்துவெளி நாகரிகத்தில், குறிப்பாக ஹரப்பா,மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்" என்ற மரக் கடவுளாக வழிபடப் பட்டுள்ளார்.அது மட்டும் அல்ல சிவனை "பசுபதி"யாகவும் அங்கு காண்கிறோம்.அப்படியே பெரும் தாய் தெய்வத்தையும் அங்கு காண்கிறோம்.

மேலும் பண்டைய தமிழரிடம் காவல் தெய்வங்களையும் காண்கிறோம். உதாரணமாக அமைதியான அல்லது சாதுவான தெய்வமாக மாரி அம்மனையும் போர் தெய்வமாக ஐயனார் அல்லது கருப்பசாமியையும் காண்கிறோம்.மாரி என்பது மழையை குறிக்கிறது.அது போல அம்மன் என்பது தாயை குறிக்கிறது.என்றாலும் இங்கு தாய் பண்பை அல்லது இயல்பையே அது சுட்டிக்காட்டுகிறது எனலாம்."மழை","கருவுறு தன்மை" ஆகிய செழிப்பு  வேண்டியும் நோயை குணப்படுத்தவும் அவளை வழி பட்டார்கள்.அது போலவே  கருப்பசாமி நீதிக்கான தெய்வமாகவும் ஐயனார் தமது கிராமத்தின் பாதுகாப்பு தெய்வமாகவும் வழி பட்டார்கள்.

மேலும் தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்த வழிபாடு நடுகல் வணக்கமாகும்.போரில் துணிவு காட்டி வீரச் சாவு அடைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் எழுப்பப் பட்டன.இந்த வீரச் சாவு அடைந்த தலைவர்களை மற்றும் தியாகிகளை சங்க பாட்பால்கள் போற்றுகின்றன. உதாரணமாக மறக்குடி பிறந்த மக்கள், விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும்[பெருமையும் வலிமையையும்] எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை என்று  புறம் 335 கூறுகிறது

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."--புறநானூறு 335

மேலே கூறிய கடவுளாரில் மிகவும்  போற்றிப் பாராட்டி  வணங்கிய தமிழரின் தெய்வமாக  சேயோன் ,முருகன் ஆதி காலம் தொடங்கி  இருக்கிறார். தமிழ் அகராதியில் சேய் =மகவு : சிவப்பு: இளமை  என்று குறிக்கிறது.மேலும் புறநானுறு  56ம்  முருகனை சேயோன் என்று அழைக்கிறது.இயற்கை வழிபாட்டின் படி, சேயோன்முருகன்குறிஞ்சிக் கடவுள் அல்லது  குறிஞ்சி நிலத்  தலைவன் ஆனான்!. ஆகவே,திருமால்/ முருகன் = இவர்கள் நிலத்தின் தலைமக்கள்.இவர்கள் பூர்வகுடி-இயற்கை வடிவினர் ஆகும்?அது போல தொல்காப்பியர் குறிப்பிடும் மற்ற  நிலத் தெய்வங்களும் [ வேந்தன், வருணன், கொற்றவை ]அந்த அந்த நிலங்களுக்குரிய வீரர் வீராங்கனை ஆக இருந்திருக்கலாம்?.என நாம் கருதலாம்.



[ஆரம்பத்திலிருந்து வாசிக்க→
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:
பகுதி:39  வாசிக்க கீழேயுள்ள தலைப்பில் அழுத்தவும் →→Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி/39.