நேபாளத்தின் 'வாழும் தெய்வம்'

 - குமாரி தேவி- 

உலகிலேயே ஒரே ஓர் இந்து நாடாகக் கருத்தப்பட்ட  நேபாளத்தில் வாழும் 280 இலட்சம் மக்களின் 81 வீதத்தினர் இந்துக்களும், 9  வீதத்தினர்  பௌத்தர்களும் ஆவார். 

தற்சமயம், மன்னர் ஆடசி அற்றுப்போய், ஜன நாயக ஆடசி வந்து, அடிக்கடி அரசுகள், கொள்கைகள், மாறிக்கொண்டிருப்பதால், இந்து மதக் கோட்ப்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள் தொகை குறைந்துகொண்டுதான் போகின்றது. என்றாலும், இரு சமயத்தவர்களும், ஒரே சமயத்தவர்கள் போல, மாறி மாறி இரு வணக்க ஸ்தலங்களுக்குப் சென்று ஒற்றுமையாக வணங்குவது சாதாரணமாக இருக்கின்றது.

இங்கு பல இன மக்கள் வாழ்ந்தாலும், நாடு முழுவதும் பல 'குமாரி தேவி' எனப்படும் வாழும் தெய்வத்தினை வணங்கும் வழக்கம் பொதுவாக இருக்கின்றது.
நவராத்திரி  விசேட காலங்களில், ஊரில் உள்ள எல்லாப் பருவம் எய்திருக்காத பெண் குழந்தைகளையும் அவதானித்து, வரையறுக்கப் பட்டிருக்கும் ஒரு 32 குணாதிசயங்கள் உள்ள பெண்ணைக் கண்டு பிடித்து, அப் பெண்ணை நன்றாக (அதிகமாகவே) அலங்காரம் செய்து, அது தேவியின் ஓர் அவதாரமாக மதித்து, அவருக்கான கோவிலில்  பூஜைகள், சடங்குகள் என்றும், வெளியே[வருடம் 13 தடவைகள் மட்டும்] ஊர்வலங்கள் என்றும் அமர்க்களப் படுத்துவார்கள். இத்தெய்வத்தைக் காண, தரிசிக்க, ஆசீர்வாதம் பெற நூற்றுக் கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் செல்வார்கள்.

இப்படியான குமாரி தேவிகள் ஊருக்கு ஊர் பலர் இருந்தாலும், தலைநகர் கத்மண்டுவில் இருக்கும்  குமாரி பிரபலம் ஆனவர். தற்போதய குமாரி தேவி, செப்டம்பர் 2018 இல் நியமிக்கப் பட்டு, தற்போது நான்கே வயசாகி, விசேடமான 'தேவி அரச மனை' ஒன்றில் அமர்த்தப் பட்டு இருக்கும் இவரைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கும் கிடைத்தது. 

ஒரு குமாரி தேவியானவர் பருவம் எய்துமட்டும் தேவியாய் இருக்கலாம்.   
அதுவரை, வெளியில் செல்லவோ, பாடசாலை போகவோ, மற்றும் பிள்ளைகளுடன் விளையாடவோ அனுமதி இல்லை. சகல பாடங்களும் ஆசிரியர் அங்கு வந்தே சொல்லிக் கொடுப்பார். அவரின் கால்களை நிலத்தில் தொட அனுமதிக்க மாடடார்கள். அவரின் 'தேவி' காலம் முடிந்ததும் (அ-து: பூப்பெய்தியதும்)) சாதாரண பிரஜையாக வாழலாம்; வேறு பெண்பிள்ளைகளுடன் பாடசாலை போகலாம்.
அவர் வதிவிடத்தில், வெளியில் காத்துக்கொண்டிருக்கும் மக்களுக்காக எப்போதாவது, இடைக்கிடை ஒரு தடவை மேலே உள்ள ஜன்னலின் ஊடாக குமாரியின் முகத்தை தூக்கிக் காட்டுவார்கள். அத்தரிசனம் ஒரு 30 நிம்டங்களாக நின்றும் முதலில் எங்களுக்கு கிடைக்கவில்லை.

நம் வழிகாட்டிக்கு  நான் கொடுத்த நச்சரிப்பினால், மீண்டும் எங்களை அங்கு கூட்டிக் கொண்டு போனார். இம்முறை, அவர் மேலே நம்மை அழைத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெற்று வந்தார். அச்சமயம், மேலே இருந்து சாரை, சாரையாகப் பக்தர்கள் வந்துகொண்டே இருந்தனர். பார்த்தால் 'பெரிய' இடங்களாய்த் தெரிந்தது.  அவர்களில் சிலர் பூவோடும், பொட்டோடும்,  சிலர் ஒரு பூ மாலையுடனும், முன்ன சென்றவர் இரண்டு மாலைகளும் அணிந்த வண்ணம் வெளியேறிக் கொண்டு இருந்தனர். அத்தோடு, சில பழைய 'குமாரி தேவி' களும் வந்து போய்க் கொண்டு இருந்தார்கள்

எம்மையும் அவர் உள்ளே அழைத்துச் சென்றார். தேவியைக் காணவில்லை. காத்திருக்கும் போது அவரை கேட்டோம் நாம் என்ன செய்ய வேண்டும் என்று. அவர் சொன்னார்  முன்னுக்குள்ள பெண் என்ன செய்கின்றாரோ அதேபோல செய்யும்படி. எம்மிடம் நேபாள பணம் இருக்காத படியால் ஆளுக்கு நூறு ரூபாவைத் தந்தார் கொடுக்கும்படி. நாம் காத்துக் கொண்டிருந்தோம்.

திடீரென, தேவி குழந்தை ஓடி வந்து தனது படுக்கை அறைக்கு உள்ளே புகுந்தது. உடனே, தகப்பனார் அவரைப் பிடித்துத் தூக்கி வந்து எம்முன்னே தேவியின் கால்களை நீட்டினார். பணத்தை மடியில் வைத்ததும், உடனே அதை எடுத்து தகப்பனாரிடம் கொடுக்கப் பழக்கி வைத்து இருக்கின்றார்கள். ஆனால், வந்தவர்களை ஆசீர்வதிக்கவோ அல்லது ஒரு அருட் பார்வை பார்க்கவோ, ஒரு புன் முறுவல் செய்யவோ இன்னமும் பழக்கவில்லை. பாவம் அது ஒரு விளையாடித் திரிய வேண்டிய பால் குடிப் பாலகி  தானே. நாமும் வணங்கிவிட்டு (சற்று கூடுதலாகவே), கீழே இருந்த  பூக்களை நாமாக எடுத்து (குமாரியின் காலில் பூவைத் தொட்டு எடுத்துக்) கொண்டு வந்து விட்டொம். பின்னர்தான் விளங்கியது ஒரு மாலையோ, இரண்டு மாலைகளோ, அல்லது மூன்று மாலைகளோ கிடைக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று!

ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய இயற்கையான சுதந்திரங்கள் எல்லாவற்றையும் மறுத்து, அறியாத வயசில் இப்படிக்கு கட்டி வைப்பது குழந்தைக்குச் செய்யும் துரோகம் இல்லையா என்று கேட்டபோது  அப்படித்தான் மேல் நாடுகள் சொன்னாலும், இது வழி, வழியாக வந்த இந்து கலாச்சாரம், அதை கை விடுவது முடியாத விடயம் என்று விசனப் பட்டார்.

இறுதியில், ஓர் இந்துக் கடவுளை நேரில் தரிசித்த மனத் திருப்தியுடன் இமய மலைச் சாரலில் அழகினை இரசித்திடப்  புறப்பட்டோம். 
சந்திப்பு: செல்வதுரை,சந்திரகாசன்.
குறிப்பு: அவர்கள் வாழும் தெய்வமாக இருக்கும் காலத்தில் அவர்களுக்கான கல்வி, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாக எழுந்த முறைப்பாட்டை அடுத்து நேபாளத்தின் சுப்ரீம் நீதிமன்றம் இச்சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படி அரசுக்கு உத்தரவிட்டது.
வாழும் தெய்வமாக இருக்கும் காலத்தில் அனைவராலும் மதிக்கபட்டும், கவனிக்கப்பட்டு வரும் இச்சிறுமிகள் பருவமெய்திய பின்னர் அநாதரவாக விடப்பட்டுவிடுவதாகவும், அவர்களை திருமணம் செய்துகொள்ள எவரும் முன்வருவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில பெற்றோரால் தமது பிள்ளைகளைவாழும் தெய்வமாகதேர்ந்தெடுக்கப்படும் படி ஆலய நிர்வாகத்தினர்க்கு பெருமளவில் அன்பளிப்பு பணம் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
곧곧 곧곧 곧곧 곧곧 곧곧 곧곧 곧곧 곧곧

No comments:

Post a Comment