தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:33‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பிரசித்தி பெற்ற "நின்-டட"[Nin-dada] வழக்கை விட,இன்னும் ஒரு வழக்கையும் அங்கு காணுகிறோம்.இதுவும் அதே சம காலத்தில் நடை பெற்று உள்ளது.இர்ரா-மலிக்[Irra-malik] என்ற ஒரு ஆண் தனது வீட்டிற்கு வந்த போது, அங்கே அவரது மனைவி இஷ்தார்-உம்மி[Ishtar-Ummi] வேறு ஒரு ஆடவனுடன் காதல் புரிந்து கொண்டு இருப்பதை கண்டான்.அவன்,அந்த இடத்தில் எந்த வித வன்முறையிலும் ஈடுபடாமல்,தனது மூளையை பாவித்தான்.அவன் தனது சோரம் போன மனைவி இஷ்தார்-உம்மியையும் அவளது கள்ளக் காதலனையும் அதே கட்டிலில் ஒரு கயிற்றினால் சுற்றி கட்டி, அவர்கள் இரு வரையும் இழுத்துக் கொண்டு வழக்குக்காக சட்டசபைக்கு போனான்.இந்த வழக்கின் விபரம் மிக குறுகியதாக குறிக்கப்பட்டு இருந்தாலும்,இது,அந்த அவை தனக்கு முன்னாள் சாட்சியாக வைக்கப்பட்ட, கட்டிலுக்கு மேல் கட்டப்பட்ட இரு காதலரையும்  அங்கு அவர்களின் நெளிதலையும்,ஒரு  கள்ள உடலுறவு நடைபெற்றதற்கான அல்லது அவன் மனைவி சோரம் போனதற்கான போதுமான ஆதாரமாக எடுத்து கொண்டதால் இருக்கலாம்.இந்த அவை முதலாவதாக அவன் மனைவியின்  அந்தரங்க முடியை[pubic hair] முற்றாக சவரம் செய்யும் படி கட்டளை இட்டது.இது அவளை அவமானம் படுத்துவதற்கு அல்லது வாழ் நாள் முழுவதும் அடிமையாக  ஆக்குவதற்கான தயார் படுத்தலாக இருக்கலாம்?என்றாலும் எமக்கு சரியாக தெரியாது.எப்படியாயினும்  மனைவி சோரம் போவதை தடை செய்யப்படுவது
ஏன் என்பது எமக்கு புரிகிறது.ஏனென்றால் எந்த கணவனும் பிள்ளைகளை தன் பிள்ளைகள் தான் என உறுதிப்படுத்த விரும்புவதால் ஆகும். சுமேரியர்களின்  எசுன்னா அரசு[kingdom of Eshnunna] வரை,அதாவது கி மு .1770 வரை,சோரம் போன மனைவிக்கு மன்னிப்பு என்பதற்கு இடமே இல்லை.ஒரு மனைவி வேறு ஒரு ஆடவனின் மடியில் இருக்கையில் பிடிபட்டால்,அவளுக்கு மரணமே தண்டனை.என்றாலும் அதற்கு பிந்திய காலத்தில் கணவனுக்கு தன்னிச்சையாக நடக்கும் அல்லது சொற் கேளாத மனைவியை மன்னிக்க முடியும்.

சோரம் போனதற்கான போதுமான ஆதாரம் இல்லாமல் மனைவியை குற்றம் சாட்டும் போது,அங்கு "ஆறு" [river] இப்படியான பிரச்சனையை தீர்க்க பயன் படுத்தப் படுவதை சுமேரியாவில் காண்கிறோம்.இங்கு இப்படி குற்றம் சாட்டப்பட்ட பெண்,இந்த குற்றத்தில் இருந்து விடுபட, தன்னை ஆற்றுக்குள்  தூக்கியெறிகிறாள்.அவள் மூழ்கி இறக்காமல்,அதில் இருந்து தப்பினால்,அவள் அப்பாவி,குற்றம் இல்லாதவள் என முடிவு எடுக்கிறார்கள் .அப்படி மூழ்கி இறந்தால் அவள் குற்றவாளி என முடிவு எடுக்கிறார்கள்.இப்படியான ஒரு சம்பவம் சுமேரியரின் மாரி அரசில்[sumerian kingdom of Mari] நடை பெற்று உள்ளது. அங்கே பெயர் தெரியாத ஒரு பெண்,தனது "ஆற்றில் பாயும் கடும் சோதனை" க்கு ["River Ordeal"] முன் ஒரு பொது அறிக்கை வெளியிட்டு உள்ளாள்.தான் நிஜமாக தந்தையுடனும் அவரின் மகனுடனும், அந்த தந்தையை தான் மணக்கும் முன்பு ஆண்-பெண்  உறவு வைத்து கொண்டதாக ஒத்து கொள்கிறாள்.அவளின் அந்த கல்யாணத்தின் பின்,அவளின் கணவன் வெளியே சென்றபோது,அவளின் கணவனின் மகன் அவளிடம் வந்து,முன்பு போல மீண்டும் அவளை தனது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்யும் படி [ஆண்-பெண் உறவை வேண்டி] வற்புறுத்தினான்.

"அவன் என் உதட்டில் முத்தம் இட்டான்" என கூறியதுடன் "அவன் என் அந்தரங்க இடத்தை தொட்டான்" எனவும் கூறி,ஆனால்,தாம் இருவரும் கொஞ்சிக் குலாவும் நிலைக்கு[petting stage] அப்பால் போகவில்லை என வலியுறுத் தினாள்.மேலும் தன்னை மீண்டும் அவன்  சொந்தமாக்கிக் கொள்ள விடுவதன் மூலம் தான் தனது கணவனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என கூறி,ஆக்ரோஷமாக தன்னை அணுகிய தனது கணவனின் முன்னைய மனைவியின்  புதல்வனை அவள் திட்டினாள்.அவளின் இந்த அறிவிப்பு,அவள் ஆற்று சோதனையில் இருந்து தான் பிழைப்பாள் என்பதை சந்தேகித்ததால் போல் உள்ளது.எனினும் கடவுள் அவள் கதையை நம்பினார் போலும்.அவள் உயி ருடன் மிதந்தாள்.

இதே போல ஒரு அசாதாரண முறை[Trials by ordeal],பண்டைய தமிழகத்திலும் வழக்குகளை தீர்க்க பாவித்து உள்ளார்கள்.இங்கு வாதி, நாக பாம்பை வைத்திருக்கும்  பானைக்குள் தனது கையை விடவேண்டும்.நாகம் வாதியை கடித்தால், அவன் அல்லது அவள் குற்றவாளி என கருதி அதற்கான தண்டனை கொடுப்பார்கள். ஆனால்,நாகம் அவனை தாக்காவிட்டால்,அவனை அப்பாவி என கருதி,விடுதலை செய்வார்கள்.

மேலும் பக்தி[நாயனார்/ஆழ்வார்] காலத்தில்,அனல் வாதம் ,புனல்வாதம்  என்ற
பதங்களை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதன் பின் வந்த கம்பர் தனது கம்ப இராமாயணத்திலும் இப்படியான சோதனை ஒன்றை  கூறுகிறார்.அங்கே இராமன் சீதையை பார்த்து:"இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை"என்றதுடன் மேலும் அவளை பார்த்து: "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. , ஜனகனின் மகளே! உனக்க விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."என வெறுப்புடன் கேட்கிறான்.

"ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம்தீர்ந்து இவண்
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ" – 9.3954

இறைச்சியின் சுவையை விரும்பினாய். (உன்) கற்புநெறி கெட்டபின்பும் (நீ) இறக்க வில்லை. நீதிநெறி தவறி (வாழ்ந்த) அரக்கனின் (இராவணன்) பெரிய நகரமான (இலங்கையில், அவனுக்கு) அடங்கி வாழ்ந்து வந்தாய். (அவன் அழிந்ததால்) பயம் நீங்கி எந்த நினைப்பில் இங்கு மீண்டும் வந்தாய்? (நான்) உன்னை விரும்பி ஏற்றுக்கொள்வேன் என்பதாலோ?
என்று குற்றம் சாட்டிய ராமனுக்கு ,தான் குற்றம் அற்றவள் என நிருபிக்க சீதை தீ குளித்தால் [Ordeal of fire]  என் கம்ப இராமாயணம் மேலும் கூறுகிறது.

"மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
சினத்தினால் சுடுதிஆல் தீச் செல்வா என்றாள்
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்." – 9.3976

நெருப்புக் கடவுளான அக்னியே! உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், கோபம் கொண்டு (என்னைச்) சுட்டு எரிப்பாயாக!” என்று சொல்லி, துழாய் மாலையை அணிந்திருக்கும் தனது கணவருக்கும் வணக்கம் செலுத்தினாள்.[இங்கு,மனத்தினால் வாக்கினால் என்று சொன்ன சீதை மெய்யினால் என்று சொல்லவில்லை??]

கண்ணகி பாண்டியன் அவையில் வழக்காடியதுபோல் சங்க இலக்கியங்களில் "வழக்கு உரைத்தல்" என்பது பற்றிய குறிப்பு தெளிவாக இல்லை.எனினும் சங்க காலத்தில் திருட்டு, நம்பிக்கை துரோகம் போன்ற குற்றங்களுக்கு  தீர்ப்புக்கள் வழங்கியதை அகநானூற்றிலும்  காணலாம்.அப்படியான இரண்டு காட்சியை இனி பார்ப்போம்.

ஒரு பெண்ணுடன் பழகிப் பல நாட்களைக் கழித்த பின் அந்தப் பெண்ணைத் தனக்குத் தெரியவே தெரியாது என்று ஒருவன் சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது என்ன ஆகும்? அவன் நடத்தையைப் பற்றிக் கேட்பார் இல்லையா? அவன் அந்தப் பெண்ணை ஏமாற்றிய குற்றத்துக்குத் தண்டனை இல்லையா? இப்படி ஒரு சம்பவம் சங்க காலத்தில் கள்ளூர் என்ற ஊரில் நடைபெற்றுள்ளது.அங்கு கரும்புத் தோட்டத்தில் ஒருவன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்கிறான். அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். இதுவரையில் அவளை உயிருக்கு உயிராக நேசித்த அவன் திருமணம் செய்து கொள்ளச் சொன்னதும் வெறுக்க ஆரம்பித்தான். அந்தப் பெண் கலங்கினாள்.இந்த விடயத்தை ஆதி முதல் அந்தம் வரையில் அறிந்தவள் அந்தப் பெண்ணின் தோழி. அவள் தலைவியின் பெண்மை ஒருவனால் களவாடப்பட்டதை ஊர்மக்களிடம் தெரிவித்தாள்.அவையத்தார் வினவியபோது அழகைச் சூறையாடிய அந்தக் கயவன் அவளை அறியேன் என்று சூளுரைத்தான்.அவையத்தார், அறிந்த சாட்சியாளர்களிடம் கேட்டறிந்து உண்மையைத் தெரிந்து கொண்டனர்.கயவனின் சுற்றத்தாரை அழைத்தனர்.கயவனின் சுற்றத்தாரே கயவன் தலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றைக் கொட்டும்படி செய்தனர்.கயவன் உடலெல்லாம் தீக்காயம்.அதனைக் கண்டு ஊரார் நகைத்தனர் என்கிறது அகநானூறு 256:

".................................................காண்தகத்
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும் பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறு மகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி
நீறு தலைப் பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே."

மேலும் ஒருவனின் மாடு அயலான் வயலில் மேய்ந்து விட்டது. வயலுக்குச் சொந்தக்காரன் ஊர்சபையில் வழக்கு தொடுத்தான். அயலான் வயலில் தன் மாடு மேய்வதை கண்கொண்டு காணாத அவன் கண்ணைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று ஊர்சபை தீர்ப்பளித்தது. இதனை அகநானூற்றின் 262 ஆம் பாடல் "பாசிலை அமன்ற பயறு புக்கு என,வாய் மொழித் தந்தையைக் கண் களைந்துஅருளாது,"என்று தெரிவிக்கிறது.

 பகுதி:34 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:34...
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும் 
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:

No comments:

Post a Comment