தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:30‏

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
‘’சுமேரிய இலக்கியம்"
இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட முன்னைய சுமேரியன் நாகரிகம் அமைந்த மெசொப்பொத்தேமியாவில் இருந்து உலகின்  மிகப் பழமையான எழுத்து வடிவிலான பதிவேடுகள்  கிடைத்துள்ளது.அங்கு கி மு 3100 ஆண்டு அளவிலான ஆப்பு வடிவான [கியூனிபார்ம்] ஆவணங்கள் கிடைத்து உள்ளன.இதன் மூலம் அங்கு வளமான இலக்கியம் தோன்றி கி மு 2000 ஆண்டு அளவில்  உச்சத்தை அடைந்தது  தெரிய வருகிறது.இந்த சுமேரியன் இலக்கியம் பெரும் அளவு எண்ணிக்கையான காதல் பாட்டுகளின் தொகுப்பை கொண்டு உள்ளது.அவை செழுமை வேண்டி வருடாந்தம் நடத்தப்படும் விழாவுடன்[annual fertility festivals] இணைக்கப்பட்டு உள்ளது.அதாவது,உணர்ச்சிமிக்க சொற் றொடரால் கவிதையாக விவரிக்கப்படும் தனிப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலை/காமத்தை  அங்கு வளம் தரும் ஆண்[துமுஸ்],பெண்[ஈனன்ன] தெய்வங்களுக்[ceremonial union of male[Dumuz] and female[Inanna] fertility gods] கிடையிலான ன சடங்கு முறையான சங்கமத்துடன் பெரும் அளவில் இணைக்கப்படுகிறது . பயிர்கள் செழிப்பாக வளரவும் கால்நடைகள் ஏராளமாக பெருகவும் இந்த ஆண் பெண் தெய்வங்களுக் கிடையான காதல் திருமணம் அவசியம் என அங்கு கருதப்படுகிறது.

லுகுல்பண்டா[Lugulbanda] என்ற சுமேரியன் மன்னனை தொடர்ந்து அதன் பின்  உருக்[ Erech, Sumerian Uruk] நகரத்தை  கி மு 3000 ஆண்டு அளவில் ஆண்ட சுமேரியன் புராண மன்னன் துமுழி" (Dumu Zi) தான்  துமுஸ்/தம்முஸ்(Dumuz /Tammuz) என்ற ஆண் தெய்வம் ஆகும்.வசந்தக் காலத்தை வரவழைக்கும் பொருட்டும் விவசாயம் அதிக பயன் தரும் பொருட்டும்,மேலும் இவையை உறுதி படுத்தும் பொருட்டும்  உள்ளூர் மன்னன் துமுஸ் ஆகவும் பெண் மதகுரு ஈனன்ன ஆகவும் பங்காற்றி விழா நடத்தினார்கள்.புது வருடத்தில் இந்த இருவருக்கும் இடையிலான  திருமணம் அல்லது ஆண் பெண் உறவு தான், இந்த பல நாட்கள் நடை பெரும் விழாவின் உச்சக் கட்டம் ஆகும்.உள்ளூர் மன்னன் பங்கு பற்றும் இந்த நிகழ்ச்சி,பண்டைய  சமுதாய நல வளர்ச்சிக்கு அல்லது செழிப்புக்கு முக்கியமாக கருதப்பட்டது.இங்கு மன்னன் வெளிப்படையாக  பலமாகவும் ஆண்மையாகவும் இருக்க வேண்டும்.ஏனென்றால், அவர் தான் இந்த விழாவின் கதாநாயகன்.அது மட்டும் அல்ல அவரே தான் சடங்கோடு கூடிய தொடர்பை தெய்வத்துடன் வைத்துள்ளவர்.ஆகவே நல்ல அறுவடையை அவரே நிச்சயப்படுத்த முடியும் என்பதால் ஆகும்.

மனித வாழ்வின் தொடர்ச்சிக்கு முக்கியமாக ஆண் பெண் உறவு காரணியாக உள்ளது.அது மட்டும் அல்ல இதுவே இலக்கியத்தின் தோற்றத்திற்கும் பெரும் பாலும் பொறுப்பாய் உள்ளது.இது,இந்த காம காதல்-ஆண்டவன் மேல் ஏற்படும் பக்தி காதலை தவிர -மற்ற எந்த காதலையும்  விட முன்னணியில் இருக்கிறது.இதனால் சுமேரியாவின் வருடாந்த புது வருட கொண்டாட்டம் மிகவும் புகழ் வாய்ந்த இரு தொகுதி இலக்கியங்களை தோற்றுவித்தது. ஒன்று காதல் தெய்வம், ஈனன்னா, திருமணம் நாடி துமுழி என்ற இடையனுடன்[sex goddess Inanna & her shepherd-lover Dumuzi] காதலாடும் நிகழ்ச்சி அல்லது அகவாழ்வான களவொழுக்கம் ஆகும்.களவொழுக்கம் என்பது காதலர்கள் தங்கள் திருமணத்திற்கு முன்பாகத் தனியிடத்திற் கூடிக் காதற் களவு நிகழ்த்துவதாகும்.மற்றது துமுழியின் மரண வீட்டிற்கு வந்தவர்களின் ஒப்பாரி ஆகும்.இரண்டாவது  ஊர் நகரின் ஷு-சின்[King Shu-Si] மன்னனின் அழகிய வடிவையும்  அவனின் கடமைதவறாத அவனின் அரசியையும்  ஆடம்பரமாக புகழ்தல் ஆகும்.இந்த இரண்டு இலக்கிய தொகுதிகளும் மேலே குறிக்கப் பட்ட அந்த வருடாந்த கொண்டாட்டதுடன் தொடர்பு உடையவை ஆகும். ஆகவே பெரும் பாலான சுமேரியன் பாடல்கள் பாலுணர்வெழுப்பும் வரிகளை கொண்டு இருக்கின்றன.சில பாடல்கள் வெளிப்படையாகவே தாய் தந்தை சொல்லித் தராதவைகளை மிக நுணுக்கமாக சொல்கின்றன.எனினும் சில தாலாட்டுப் பாட்டாகவும் சில புகழ்ச்சி பாட்டாகவும் உள்ளன

தம்முஸ்[Tammuz] என்ற சொல்லுக்கும் தம்முழ்[Tammuzh] என்ற சொல்லுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை கவனிக்கவும்.அது மட்டும் அல்ல ஆரம்ப கால பாண்டிய மன்னர்களின் பெயர்ப் பட்டியலை எடுத்துப் பார்த்தால்,அதில் ஒரு பெயர் "தம்முழ்" என்றிருப்பது ஆச்சரியத்திற்கு எம்மை ஆழ்த்துகிறது.மேலும் தம்முஸ் கடவுளின் சரிதத்தை பாடி ஒப்பாரி வைப்பது போன்று, தமிழர்களின் செத்த வீடுகளிலும், இறந்தவரின் நற் பண்புகளை, செயல்களை குறிப்பிட்டு ஒப்பாரி வைப்பது வழக்கம் ஆக இன்றும் தமிழர்களிடம் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

இப்படியான காதல் பாடல்கள் எல்லா பண்பாட்டிலும் காண முடியும். மேலும் ஈனன்னா துமுழி இருவரினதும் காதற் களவின் போது அவர்களுக்கிடையில் இடையில் மாறி மாறி  நடைபெறும் உரையாடல் அமைப்பிலான பாடல் போன்று நாம் சங்க  பாடலிலும் காண்கிறோம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தமது பெரும் நெருங்கிய நட்பை அல்லது பிரியத்தை காட்ட காதலர்கள் தம்மை சகோதரன்,சகோதரி[brother and sister] என அழைப்பதையும் சுமேரியன்  பாடல்களில் காண்கிறோம்.மேலும் சுமேரியன் பாடல்களுக்கும் தென் கிழக்கு ஆசிய,இந்திய பாடல்களுக்கும்  உள்ள ஒற்றுமைகள்,அவை கி மு 2000 ஆண்டு அளவில் அவைகளுக் கிடையில் நடை பெற்ற வர்த்தகத்தின் போது இரு சமூகமும் தமக் கிடையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட வாய்வழி பண்பாடாக[oral culture] இருக்கலாம் என கருதப்படுகிறது.இங்கு சங்க பாடல்கள் நல்ல உதாரணமாக உள்ளன.

இனி மேலும் சில சுமேரியன் பாடல்களை தமிழ் மொழி பெயர்ப்புடன் கிழே தருகிறோம்.முன்பு பகுதி 15 இல்,உலகின் மிகப்  பழைய காதல் பாட்டு என கருதப்படும் பாடல் ஒன்று தமிழ் மொழிபெயர்ப்புடன் தரப்பட்டு உள்ளது.இந்த பாடல் உலக பிரசித்தி பெற்ற "அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது!! " என்ற பாடல் ஆகும்.

சுமேரியன் புலவனின் மிகவிரும்பிய அடிக்கருத்தாக கல்யாணத்திற்கு முன்பு  ஈனன்னவுடன் துமுழியின் குலாவுதலும் கெஞ்சுதாலும் காதல் புரிதலும் இருந்து உள்ளது.இதைத் தான் சங்க பாடல்களும் களவியலில் தருகின்றன.அப்படியான கவர்ச்சி ஆற்றல் வாய்ந்த வாசகம் ஒன்று, இரண்டு நிரல்கள் கொண்ட  ஒரு வில்லையில் காணப்படுகிறது.அந்த வில்லை இப்பொழுது கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஜென பல்கலைக் கழகத்தில்[University of Jena] உள்ளது.இது "காதல் எப்படியும் ஒரு வழியை காணும்" அல்லது "தாயை ஏமாற்றுதல்" [“Love Finds A Way” or “Fooling Mother.”]என  பெயரிடப்பட்டு உள்ளது.இந்த பாடலில் உள்ள முக்கிய கதாபாத்திரம் சொர்க்கத்தின் தேவதை என அழைக்கப்படும் அரசி ஈனன்னவும் அவளின் நிலையற்ற[சாவுக்குரிய] ஆசை நாயகன் அல்லது நிச்சயிக்கப்பட்ட கணவன்  துமுழியும் ஆகும்.துமுழி பல பெயர்களில்(known also by names Kulianna, Amaushumgalanna, and Kulienlil) அழைக்கப்படுகிறான்.இந்த பாடல் தொகுதியின் முதல் பாட்டு/வரி ஈனன்னா தனக்குத்தானே பேசி கொள்ளும் பாணியில் ஆரம்பிக்கிறது.இதோ அந்த பாடல்:

"நான் அரசி,நேற்று இரவு,வெளிச்சமாக ஒளி வீசும் போது,
நான் தேவதை,நேற்று இரவு,ஒளிமயமாக பிரகாசிக்கும் போது,
நான் அப்படி,பளபளத்து ஒளிர்ந்து ஆட முற்படும் போது,
நான் என்பாட்டில் பாடுகையில்,வெளிச்சம் இரவை வெல்லும் போது 
நாயகன் என்னை சந்தித்தான் காதலன் என்னை சந்தித்தான்.
நாதன் குலியன்ன என்னை சந்தித்தான்
நாகரிகமாக தன் கையை என் கையுடன் பிணைத்தான்.
நான் நாணி கோணி நிற்கையில்,அமஉசும்கலன்ன கட்டித்தழுவினான்"

இதை அடுத்து இருவருக்கும் இடையிலான தனி சரச சல்லாபம் ஈனன்னவின் மன்றாடலுடன் தொடர்கிறது.
"நான் வீட்டிற்கு போக வேண்டும்,என்னை விடுதலை செய்
நான் வீட்டிற்கு போக வேண்டும்,குலி -என்லில்,என்னை விடு 
நான் தாயை ஏமாற்ற என்ன நான் சொல்லவேண்டும்?
நான் நிங்கல்லை நம்ப வைக்க என்ன கூற வேண்டும்?"

இது  துமுழியை அவனின் மன்மத லீலையில் இருந்து நிற்பாட்டவில்லை.அவன் அதற்கு பதில் முன்னமே தயாரித்து வைத்திருந்தான்.

" நான் பதில் சொல்கிறேன், நான் பதில் சொல்கிறேன்  .
நான் பதில் சொல்கிறேன்,பேரழகி,ஈனன்னா,"

உன் தாயிடம் நீ இப்படி கூறு.

"நான் பொது சதுக்கத்திற்கு தோழி  அழைத்து போனேன்
நாட்டியத்தால் ஒரு கலைஞர் எங்களை  மகிழ்வித்தான்,
நாம் அவனது இனிய இன்னிசையில் மயங்கினோம்
நாயகன் சொன்னான் இந்த பொய் தாயை ஏமாற்றும்
நாதன், நிலவொளியில் இப்ப காதலை அனுபவிக்க 
நாயகன் எனக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய,
நான் ஒரு தூய இனிய,சிறந்த மஞ்சத்தை கட்டுகிறேன் என்றான்,"

தன் காதலை தாயிடம் இருந்து மறைக்க பொய் சொல்லும் தலைவியை பண்டைய சங்க இலக்கியத்திலும் நாம் காண்கிறோம்.மேலும் இங்கும் அதே தலைப்பு அதாவது "காதல் எப்படியும் ஒரு வழியை காணும்" அல்லது "தாயை ஏமாற்றுதல்" பொருந்துவதாகவும் உள்ளது.அதுமட்டும் அல்ல இதுவும் இருவருக்கிடையில் ஏற்படும் உரையாடல் போல் தொடர்வதையும் காண்க.இதோ அந்த கலித்தொகை-51 பாடல்:
தலைவி : சுடர் தொடீஇ! கேளாய்
[தோழி : ம்.. சொல் கேட்கிறேன்.... ]
தலைவிதெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா,
தலைவன்:'இல்லிரே!உண்ணு நீர் வேட்டேன்'[என வந்தாற்கு,]
அன்னை:'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' [என்றாள்; ]
தலைவி :என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!
[ஒருநாள் நானும் அம்மாவும் தனியாக இருக்கும்போது "தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்றான்.அம்மாஅழகான அணிகலன்களை அணிந்தவளே,தங்கத்தால் ஆன பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துப்போய்க் கொடுஎன்றாள்.விவரம் புரியாமல் நானும் போனேன்.அந்தப் பயல்  தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று வளையல் அணிந்த என் முன் கையைப் பிடித்து இழுத்தான். அதிர்ச்சியடைந்த நான்  "அம்மா! இங்க வந்து பாரும்மா இவன் செயலை " என்று அலறினேன்.அம்மாவும் பதறிப்போய் ஓடி வந்தாள்.  "தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதான் உங்களைக் கூப்பிட்டேன்" என்று  பொய் சொன்னேன்.அம்மா நம்பி விட்டாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா? என்று கேட்டுக்கொண்டே விக்கல நீக்க,அவனின் தலையையும் முதுகையும் தடவி தட்டிக்கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப்பயல் கடைக் கண்ணால் என்னைக் கொல்வது போல் பார்த்துப்  ஒரு புன்னகை செய்தான்!அது என் மனதைக் கொள்ளை யடித்தன!!]


[ஆரம்பத்திலிருந்து வாசிக்கக் கீழேயுள்ள தலைப்பினில் சொடுக்கவும்.]
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:

No comments:

Post a Comment