வழிபாட்டினை கேலிசெய்யும் கலியுகத்தார்

உலகம் விரைவாக மாறிக்கொண்டு இருக்கிறது.இதற்கு கனமான காரணம் என்னவெனில் அசுரவேகம் கொண்டு வளர்ந்துகொண்டிருக்கும் தொழி நுட்பமும் ஒன்று என்பது மறுக்கமுடியாததே!
தாய்மொழி ,கலாச்சாரம்  மட்டுமல்ல ஆன்மீகமும் முற்றாக அழிக்கப்பட்டு கொண்டிருப்பது பலரும் உணராத ஒன்று.
ஆன்மீக சிகரத்தினை அடைய மனிதனைத் தயார்படுத்த  வழிபாடு என்ற தேவை ஒன்று மனிதனுக்கு தேவைப்பட்ட்டபோது அது கோவில் வழிபாடாக பரிணாமம் அடைய அதை நம்பி மக்களும் பின் செல்ல ,அதன் பாதை இன்று அர்த்தம் அற்றதாகி மக்களையும் பயப்படுத்தி தம் வாடிக்கையாளராக்கி பலனடைந்த பெருமை கோவில் முதலாளிகளையே சாரும்.
கடவுளுக்கு கொடுக்கிறோம் என்று [பொய்] கூறி  மேற்படி முதலாளிகளுக்கு  அள்ளிக்கொடுக்கும் கூட்டம் இருக்கும் வரையில் இந்த வியாபாரம் வளர்ந்துகொண்டே செல்லும் என்பது இவர்கள் உணராத  ஒன்று என்பதனாலேயே அள்ளிக் கொடுப்பதுவும் பின்னர்  முதலாளி வளர்வதனைக் கண்டு திட்டுவதுவும் நகைப்புக்கு இடமாகவே தோன்றுகிறது, தொடர்கிறது.
இது போதாதென்று இவர்கள் கடவுள் என கண்டுபிடித்த படங்களை முகநூலில் இடுவதும் , இதனைப் 100 பேருக்கு பகிர்ந்து கொள்வதினால் சில மணி நேரத்தில் நற்பலன் கிடைக்குமென்று புளுகுவதும் நடவாத ஒன்றைக்கூறி கடவுளையும், மதத்தினையும் கேலி பண்ணி எதனை சாதிக்கிறாக்கள் என்று புரியவில்லை.
மேலும், விநாயக சதுர்த்தி என்றதும் அவன் படத்தினை முகநூலில் இட்டு வினைகள் தீர்ப்பான், அது செய்வான்,இது செய்வான் என நடவாத புழுகுகளை இட்டு மேலும் வழிபாட்டினை கேலி செய்யும் கூட்டமும் போட்டி போட்டு வளர்த்துக்கொண்டு இருப்பது மிகவும் கேவலமாகே தெரிகிறது.

அன்று வாழ்ந்த சித்தர்கள் செய்த சித்து விளையாட்டுக்கள் கண்டு அன்றய மக்கள் அவர்களை கடவுளாக வணங்கவில்லை.. ஏனெனில் அன்றய மக்கள் ஆன்மீகத்தினை புரிந்து வைத்திருந்தனர். ஆனால் சித்தர்களை மதித்தனர்.
ஆனால் இன்றோ கடவுள் என்றால் அற்புதம் செய்யவேண்டும் ,ஓடி வந்து நோயினை நீக்க வேண்டும், என்று பெரும் தப்புக் கணக்கு வைத்து கடவுள் வழிபாட்டுக்கே  களங்கம் கற்பித்துவிட்டனர் கலியுக மக்கள்.

பேராசையும், பயமும் , அவனை அறியாமலேயே  அவநம்பிக்கையும் மனிதனிடம் வளர்ந்துக்கொண்டு இருப்பதினாலேயே  பலனை இலகுவானமுறையில் பெறலாம் என்ற கற்பனையில் புதிய யுக்திகளையும், கூடவே மேற்படி கேலிக் கூத்துக்களும்  கையாளப்படுகின்றன. 
மொத்தத்தில் நம்பிக்கை என்ற நினைப்பில் உண்மையில்  அவநம்பிக்கை உடைய நாஸ்திகர்களாகவே  மாறிவிட்டார்கள் என்பது  இவர்கள்அறியாத ஒன்றாகும் என்பது கவலைக்குரியதே!.


ஆக்கம் : செ .மனுவேந்தன்.

No comments:

Post a Comment