"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 09



ஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கலித் தொடராக காலம் காலமாக காத்து வரப்படும் ஒரு வாழ்க்கை முறையாக, பாரம்பரியமாக மாறுகிறது. எனவே நாம் தமிழரின் பாரம்பரியத்தின் மூலத்தை பரந்த அளவில் அறிய நாம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியங் களை ஆராயவேண்டும். இவ்வகையில், தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை நிறைய அங்கு காண்கிறோம். அது மட்டும் அல்ல நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் கூட தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில ஆகும். அத்துடன் நீர் குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்'
என்றே அன்றில் இருந்து இன்று வரை தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அப்படியான நீரில் நீராடுவதே [குளித்தலே] ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டது. குளித்தல் என்பதின் பொருள் குளிர்வித்தல், அல்லது வெப்பம் தனித்தல் (to get rid of the accumulated heat within our body to get refreshed), எனவே குளியல் அழுக்கை நீக்க மட்டும் அல்ல உடலை குளிர் விக்கவும் என்றாகிறது. மனிதர்களுக்கு உள்ள பல நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். எனவே ஒரு ஒழுங்கு முறையில் உடலை குளிர்விக்க வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி,வாய் மற்றும் காது வழியாக வெளியேறும் என்று அன்று நம்பினார்கள். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கொஞ்சம் கற்பனை
செய்து பாருங்கள். அன்று குளத்திலோ ஆற்றிலோ பொதுவாக குளித்தார்கள். உதாரணமாக குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நனையத் தொடங்கும். அப்ப வெப்பமும் கீழிருந்து மேல் எழும்பி வெளியே போகும். குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்குவார்கள். இது உச்சந்தலைக்கு கீழ் இருந்து மோலாக எழும் வெப்பத்தால் அதிக சூடு ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கை ஆகும். என்றாலும் அறிவியல் ரீதியாக உடல் வெப்பம் இலகுவாக தோலினூடாக வெளியேறலாம் என்பதுடன்
, காலில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, இல்லை உச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, எந்த காரணத்தையும் அறிய முடியவில்லை. எனினும் குளிக்க தொடங்கும் பொழுது, அதன் குளிர் அல்லது வெப்ப தன்மையை அறிய, முதலில் காலை  நனைப்பது அல்லது அல்லது தலை உச்சியை நனைப்பது அல்லது கையை அலம்புவது ஒரு வழமையாக இருப்பதை காண்கிறோம்.



கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ஔவையாரும் “சனி நீராடு” என்று ஆத்திசூடிப் பாடலில் கூறுகிறார். இதை பெரும் பாலோர் " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என பொருள் கொள்கின்றனர், எனினும் சனித்தல் என்னும் தொழிற் பெயரின் அடியாக சனி என்னும் சொல் வருவதால், அதற்கு உண்டாதல், பிறத்தல், தோன்றுதல் என அகராதியில் பொருள் இருப்பதால், சனி நீராடு என்னும் சொல் புதிதாகத் தோன்றும் நீரில் நீராடு எனவும் சிலர் பொருள் கற்பிக்கிறார்கள். எனவே அது ஊற்றுநீர் மற்றும் கிணற்றுநீரைக் குறிக்கலாம். மேலும் சிலர் அதன் பொருளை விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு, "வைகறையில் [dawn] நீராடு " என்றும் உரை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இனி தமிழ் இலக்கியம் நீராடலை எப்படி கூறுகிறது என்று இரு பாடல்கள் மூலம் பார்ப்போம். முதலாவதாக நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழந்ததைக் கூறும் பரிபாடல் என்ற சங்க பாடலில், பாடல் 16  இல், இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின் மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பை போல் விளங்கிய அப் பரத்தையின் மார்பகத்தின் மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக் கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான் என்பதை  "சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள், பெருந்தகை மீளி வருவானைக் கண்டே, இருந்துகில் தானையின் ஒற்றி" என்ற வரியில் காண்கிறோம். இந்த, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது என்பது இங்கு புலப்படுகிறது. பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடை பெறுகிறது. ஆனால், "கோழி அழைப்பதன் முன்னம் ,குடைந்து நீராடுவான் போந்தோம்" என்கிறாள் ஆண்டாள், அதாவது  கோழி கூவும்முன் – அதாவது இன்னும் இருள் பிரியாத நேரத்தில், அதி காலையில்  குளத்தில் நீராட என்கிறது. இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுகிறது எனலாம். ஆண்டாள் பாடலில் சுட்டிக்காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.

பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது என கூறுவார்கள் நாமும் அதை கேட்டு நடந்திருப்போம். அதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் உண்டு. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது போகலாம். இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கலாம் என்பதே அந்த காரணம் ஆகும்
 [ஆரம்பத்திலிருந்து வாசிக்க , கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.]


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 10 தொடரும்......

No comments:

Post a Comment