நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி
இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு
என்றும், இலக்கிய
வழக்கில் திலகம் என்றும் பொதுவாக கூறுவர். உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக்
காப்பியத்தில்: "கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே" என்று
பாடுகிறார், அதாவது
கதிரவன் கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றியது என்கிறார். ஒருத்தி நெற்றியில்
கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக்கொண்டாள் என பரிபாடல் 11 வரி 99 ,100 இல், "நெற்றி விழியா நிறை திலகம்
இட்டாளே, கொற்றவை
கோலம் கொண்டு, ஓர் பெண்."
என்று கூறுகிறது. முதல் பாடலில் அழகையும் இரண்டாவது பாடலில் அதற்கு ஒரு
புராணத்தையும் காண்கிறோம். ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி
என்பதை அறிந்த ஆதி கால மனிதன், அப்படி தாய்மை அடைந்த பெண்களை
பெருமைபடுத்தி
மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மை யடைந்த பெண் அரவணைத்து
வழி நடத்தி சென்றாள். இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான், அப்பொழுது அவள் கொற்றவையாக ஒரு
சுயாதீனமான தெய்வமாக இருந்தாள். ஆனால் அவள் பின்னர் சிவாவுடன் இணைந்தார் / விவாகம்
செய்யப்பட்டார் அதற்கு ஒரு புராணமும் கற்பித்தார்கள் என்பதே உண்மையாகும். பத்து
பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையும் சூரர மகளிரின் (தெய்வ மகளிரின்) மணம்
கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் தலை மாலை இருக்கும்படிக் கூந்தலின் மேல்
அணிவித்திருந்தனர் என்பதை "பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ
வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் "என்று
பாடுகிறது. இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடத்தை ஆக்ஞா சக்கரம் [Ajna Chakra or third-eye chakra] என்கிறது
யோகக் கலை. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் [seat of memory and thinking] உரிய இடம்
இது வாகும். அதனால் தான்,
எம் மனம்
துக்கம் அடையும் போது,
தலைவலியும்
அதிகரிக்கிறது எனலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக்
குளிர்விக்கிறது, இதனால்
உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது [prevent the loss of "energy"] என்கிறார்கள். அத்துடன் நாம் பொட்டு வைக்கும் பொழுது, அந்த இடம் அழுத்தப் படுகிறது. இது முகம் தசைகளுக்கு [face muscles] இரத்தம் வழங்க உதவுகிறது. எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் பொட்டுவைப் [sticker Pottu/bindi] பயன்படுத்துதல், அழகு படுத்துவதை தவிர வேறு ஒரு பெரும் பயனையும் அளிக்காது. பொட்டு வைக்கும் அந்த இடத்தின் சிறப்பை திருமூலர் அருளிய திருமந்திரம், தனது பாடல் 666 இல்: "ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்",என்று அழகாக கூறுகிறார், அதாவது, உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும் என்கிறார். அதையே தமிழ் ஆய்வாளர், மறைமலையடிகள், தாம் எழுதிய “யோக நித்திரை அல்லது அறிதுயில்” என்ற 1922 ஆண்டு நூலில் :" புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடை வெளியில் உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகிறது” என்கிறார்.
சங்க காலத்து மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
ஆண்களும் பெண்களும் அன்று இடுப்பிற்கு மேல் ஆடை ஒன்றும் அணிவதில்லை. ஆனால்
அதற்குப் பதிலாக பல்வேறு வண்ணங்களில் நறுமணச் சாந்துகள் கொண்டு பொதுவாக மகளீர் தமது
நெற்றியிலும், தோளிலும், மார்பகங்களிலும் அழகிய ஓவியங்களை
வரைந்து கொண்டார்கள். அதை தொய்யில் எனவும் அழைப்பர். பச்சை குத்துதல், மருதாணிச் சித்திரங்கள் போன்ற
உடலோவியம் அதுவாகும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை - 276 இல், நான் இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய
முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப்பவர்கள் முற்றிலும்
அறியார் என்ற "உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும்
அறியார்" வரியும்,
அகநானூறு 239 இல், மகளிர் மார்பகத்தில் புள்ளியுடன்
கூடிய தொய்யில் எழுதிக் கொண்டிருப்பர். அது அவர்கள் மேனியில்
பொறிக்கப்பட்டிருக்கும் சுணங்கு [மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு அல்லது
மேனிநிற மாற்றம்]. அணிகலன் களுடன் திகழ்வர். அவர்கள் வளரும் பிறை நிலாவைத் தொழும்
மாலை நேரம். நான் இங்கே இருக்கிறேன் என்ற "புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை
தொழூஉம், புல்லென்
மாலை, யாம் இவண்
ஒழிய" வரியும் இதை உறுதி படுத்துகிறது. அதே போல அழகுறப் பூங்கொடி வடிவில்
எழுதி யதை சோழர் காலத்தைச் சேர்ந்த
பெருங்கதையில்:“பழுதற அழகொடு புனைநலம் புனையாக்
குங்குமம் எழுதிக் கோலம் புனைந்த“ என்ற வரி மூலம் காண்கிறோம். எனவே இன்று மக்கள்
தங்கள் உடலில் தற்காலிக அல்லது நிரந்தர பச்சை குத்திக் கொள்வதும் மருதாணி [Henna] இட்டுக் கொள்வதும், உடலில் தொய்யில் இடும் அல்லது
ஓவியம் வரையும் பண்டைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும். இன்று கைவிரல்களிலும், கால்களிலும் மருதாணி பூசுவது ஒரு
சிறப்பான பழக்கமாக திகழ்கிறது. இலையின் சாறினால் சிவந்த மரு [மச்சம் மாதிரியான
சிறு புள்ளி / Skin
Tag] தோன்றுவதால்
மருதாணிக்கு பழைய பெயர் மருதோன்றி ஆகும். என்றாலும் இலக்கியங்களில் சுருக்கமாக
தோன்றி என்றே அழைத்தார் கள். எனவே, இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும்
வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி
இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில்
மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம்
பயன்படுத்தினார்கள். இது எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டதும் ஆகும். சங்க
காலத்தில் மருதாணியைப் பற்றிய குறிப்பு ஒன்றை பதினென்கீழ்க்கணக்கு நூல்களில்
ஒன்றான மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் காண்கிறோம்.அதில்
"றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை, முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து" என்ற வரிகளில் எறிகின்ற காட்டைப்போல செக்கச்
சிவந்திருக்கிறது மருதாணி பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டது தலைவியின் கைகள்
என்கிறது. ஆனால் இதற்கு இன்னும் ஒரு பொருளாக,எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த
மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன எனவும் சிலர் கூறுவார். எனவே
மெஹந்தி [mehandi] என்ற சொல்
வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல.
மிகமிகப் பழையது என்பதே சரியாகும்.
மேலும் தமிழர்களுக்கு இடையில் எந்த விழா நடந்தாலும் அது
மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை
பெரும் வழக்கம் பாரம்பரியமாக இன்னும் தொடர்கிறது. ஒரு உதாரணமாக பெண்கள் கூந்தலில்
மலர் சூட்டும் பழம் பழக்கத்தை பார்ப்போம். ஐங்குறுநூறு 93, பல மலர்கள் சூடிய ஒரு பெண்ணின்
கூந்தலை சூழ்ந்து கொண்டு வண்டு மொய்ப்பதை, "பல் பொழில் தாது உண் வெறுக்கைய ஆகி, இவள் போது அவிழ் முச்சி ஊதும்
வண்டே" என்று கூறுகிறது. அதே போல புறநானுறு 61, "கொண்டைக் கூழைத் தண்டழைக்
கடைசியர்" என்ற வரிகளால் கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழைபோடு கூடிய
பூவைச்செருகியிருக்கும் உழத்தியர் என்கிறார். ஆனால் கணவன் இறந்து விட்டால் கைம்மை
அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள். அந்த மரபு இன்னும் கிராமப்புறங்களில்
அப்படியே காணப்படுகிறது. கைம்பெண் மட்டும் அல்ல அன்று கணவன் விலகி இருந்தாலும்
மனைவி புது மலர் சூடாமல் இருப்பதை புறநானூறு 147 ,உன் மனைவி தலையில் எண்ணெய்
வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர்
குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம்
செல்வதுதான் என பொருள்பட " அம் மா அரிவை, நெய்யொடு துறந்த மை இரும்
கூந்தல், மண்ணூறு
மணியின் மாசு அற மண்ணிப்,
புது மலர்
கஞல இன்று பெயரின், அது மன்
எம் பரிசில் ஆவியர் கோவே" என்கிறார் புலவர்.
இத்தொடரினை ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பில் click செய்யவும்.
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
பகுதி: 09 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை சொடுக்கவும்.
No comments:
Post a Comment