"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 07


ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின், வாழும் சில வழி முறைகளை [way of life] செய் முறையில் எடுத்து கூறுவது, அந்த குடும்பத்தின் அல்லது அந்த சமுதாயத்தின் அல்லது அந்த நாட்டின் பாரம்பரியம் எனலாம். அதே போல அக்காலத்தில் அவரவர் வாழும் இடத்திற்கேற்ற ஒரு வாழ்க்கை தர்மத்தையும் வாழ்வு முறையையும் கொடுக்க ஒருவராலோ, ஒரு சிலராலோ அவரின் அல்லது அவர்களின் சிந்தனையின் படி, அவர் அல்லது அவர்கள் விரும்பும் ஒழுக்கத்தின் படி அல்லது கட்டுப்பாட்டின் படி, ஏற்படுத்தப் பட்டதே மதம் எனலாம். எனவே பெரும்பாலான பாரம் பரியங்களின் மூலத்தை நாம் இன்று மதத்தில் காணலாம். எனவே எம்முடைய பல பாரம்பரியமும், தமிழர் சமயத்தை மூலமாக கொண்டு உள்ளது ஒன்றும் வியப்பில்லை. எம் தமிழர் மதம் ஆரியர் இந்தியா வருகைக்கு முன்னையது, அது அன்று இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அந்த தமிழர் சமுதாயம். சமூகச் சமத்துவத்தை [egalitarian] தன்னகத்தை கொண்டு இருந்ததுடன், அதிகார வர்க்கம் மற்றும் அடக்குமுறை சாதி முறையால் முடக்கப்பட்டதும் அல்ல. தமிழர்களின் உண்மையான மூல மதமாக அன்று சைவ சமயம் [Shaivism] இருந்தது. இது பிராமண இந்து சமயத்திற்கும் [Sanskritic Hinduism ] மிகவும் முற்பட்டது. என்றாலும் மூன்றாம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு சற்று முன், தமிழகம் குடிபெயர்ந்த, வேத, காவிய பாரம்பரியத்தால் [Vedic and epic traditions] ஈர்க்கப்பட்ட  பிராமணர்களும் மற்றவர்களும் கூட தமிழ் நிலத்தின், வாழ்வின் ஒரு பகுதியானார்கள். அதே போல, முன்-நவீன கால [Pre-Modern Period] தொடக்கத்தில் இருந்து அல்லது 1500 ஆண்டில் இருந்து, ஐரோப்பிய செல்வாக்கு தமிழர் பண்பாட்டிலும் மதத்திலும் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. -பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை எடு என்பதாகும்-அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போக வைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. என்றாலும் இன்னும்  பெரும்பாலான தமிழர் சைவ மதத்தில் இருந்து சைவ சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், மத வெறியர்களாக [religious fanatics] இல்லை. அவர்கள் தங்களுக்கு முடிந்த நேரங்களில் ஆலயம் சென்று தொழுகிறார்கள், ஆனால் கட்டாயம் அல்ல [not compulsory]. உதாரணமாக இஸ்லாத்தில், திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்லா  விட்டாலும், ஐந்து வேளைத் தொழுகை கடமையாக எல்லா முஸ்லிமும் பின்பற்றுகிறார்கள். மேலும், சைவ சமயத்தில் ஆலயம் வருகைக்கு ஒரு கடுமையான மற்றும் வலுவான விதிகள் [no hard and fast rule] இல்லை. உதாரணமாக சைவ சித்தாந்தம் அருளிய திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். அவர் தனது
திருமந்திரம் 1823 பாடலில்: "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றும் சிவவாக்கியார் எனும் சித்தர், தனது பாடலில்: "கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே" என்றும், 'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்று அகத்தியரும், மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்த பூசலார் நாயனாரும் எடுத்துக் காட்டுகளாகும். தமிழர்கள் ஒரு குழந்தையின் முன்னேறுகிற ஒவ்வொரு முக்கியமான படிகளையும் [Every important step in the progressive life of a child] ஒரு பண்டிகை விழாவாக [festive occasion] ஒரு பாரம்பரியத்துடன் கொண்டாடுகிறார்கள்.
 
ஒருவரின் தனிப்பட்ட சுகாதாரம் [Personal hygiene], மதம், பண்பாடு, மற்றும் இடம் சார்ந்ததாக, பொதுவாக இல்லது இருந்தாலும், சில குழுக்களில், சில மக்கள்களில், கலாச்சார மற்றும் மத காரணிகள் [cultural and religious factors] ஆழ்ந்த தாக்கத்தை இவைகளில் ஏற்படுத்துகின்றன. தமிழர் பாரம்பரியத்திலும் கை சுகாதார நடைமுறைகள் சிலவற்றை காண்கிறோம். முன்னைய காலங்களில் இடது கை அதிகமாக சுத்தம் செய்ய பாவிப்பதால் [primarily used for personal hygiene purposes], இடது கையால் கொடுப்பதோ வாங்குவதோ ஒரு கௌரவமான செயல் அல்ல என்றும் அது மற்றவரை அவமதிப்பதாகவும் கருதப் பட்டது. ஒரு செத்த வீட்டிற்கு சென்றவர்கள் அல்லது பங்கு பற்றியவர்கள் தம் வீடு சென்றதும், வீட்டிற்குள் புகு முன் முதலில் குளித்து, தம் உடைகளை தோய்த்து தம்மை துப்பரவு செய்து கொள்கிறார்கள். அந்த கால சூழ்நிலையில், எந்த ஒரு தொற்று நோயும் சவ அடக்கத்திலிருந்து பரவாமல் இருக்க, இந்த முறை அன்று பின்பற்ற பட்டது. இவைகள் எல்லாம் ஒரு மரபாக மதம் கலந்து இன்னும் பெரும்பாலும் கிராமப் புறங்களில் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஒரு மனிதன் இறந்ததும், உடல் பாக்டீரியாவிற்கு [bacteria] எதிராக போராடும் ஆற்றலை
இழந்து விடுவதுடன். உடல் சிதையத் [அழுகுதல்] தொடங்குகிறது. முன்னைய காலத்தில் இறந்த உடலை பதப்படுத்துவது [embalming /எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு] கிடையாது, எனவே சவ அடக்கத்தில் பங்கு பற்றியவர்கள் ஒரு பாது காப்பு அற்ற நிலையில் இறந்த உடலுடன் சடங்கில் ஈடுபடுகிறார்கள். இதனால் தான் அன்று மரண வீட்டிற்கு போனவர்கள் முதலில் குளித்து பின் மற்ற காரியங்கள் ஆற்றும் மரபு ஏற்பட்டது எனலாம். இது அந்த கால சூழ்நிலைக்கு வசதிக்கு ஏற்ப ஏற்பட்டவை ஆகும். இன்று நிலைமை வேறு, அன்று அந்த சகாப்தத்தில், அதில் ஒரு பயன் இருந்தது, ஆனால் இப்பொழுது அது பொருந்துமா என்பது ஒரு கேள்விக் குறியே, ஏனென்றால் இப்ப சுத்திகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் நடைமுறைகள் [sanitation and cleanliness practices] முன்னேற்றம் அடைந்து விட்டன.

அத்துடன் யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி இரத்த சம்பந்தமுள்ள வர்களுக்கும் தீட்டு / துடக்கு [unclean] ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில் சில நாட்களுக்கு சமையல் கிடையாது. பொதுவாக உறவினர்கள், அயலவர்கள் உணவு அவர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த ஆழ்ந்த துக்க காலத்தில், அவர் களுக்கு ஒரு ஓய்வு கொடுத்து ஒரு ஆறுதல் அளிக்க இந்த மரபு அந்த கால கூட்டு குடும்ப சூழலில் ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த துடக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட [quarantine] நிலை போல் எனக்கு
தோன்றுகிறது? ஏனென்றால், அந்த முன்னைய காலத்தில் இறப்பிற்க்கான காரணம் சரியாக அவர்களுக்கு தெரியாது, அன்றைய சூழ் நிலையில் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, காசநோய், மற்றும் சளிக்காய்ச்சல் [Meningitis, Chicken pox .Tuberculosis (TB), Influenza] இவை போன்ற காற்றால், நீரால், உணவால் பரவக் கூடிய நோயாலும் இறந்து இருக்கலாம். எனவே ஒரு பாதுகாப்பிற்காக அவர்களை தனிமை படுத்த இந்த துடக்கு என்ற நம்பிக்கை மரபு ஏற்பட்டு இருக்கலாம். தானாக நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற [to let the place become sterile itself] ஒரு காலம் தேவை, அதையே துடக்கு காலம் என அன்று வரையறுத்து இருக்கலாம் என நம்புகிறேன்.

அது போலவே ஒருவர் சின்னம்மை போன்ற தொற்று நோய்களால் பீடிக்கப் பட்டு இருந்தால், வேப்பிலை கட்டு ஒன்று [a bundle of Neem or margosa leaves] வீட்டின் படலையில், அதை மற்றவர்களுக்கு எடுத்து கூற தொங்க விடுவார்கள். அந்த காலத்திற்கு ஏற்ற தனிமை படுத்துவதற்கான ஒரு புத்திசாலித்தனமான முறை [a brilliant method of isolation] என்று நம்புகிறேன். அது மட்டும் அல்ல வேப்பிலை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணிய ஓரணு உயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு [anti bacterial, anti parasitic, anti fungal, anti protozoal and anti viral] சத்தியாகவும் தொழிற்படுகிறது. மேலும் சின்னம்மை நோயால் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிப்பதற்கும், விரைவாக சின்னம்மை நோயில் இருந்து குணமாகவும் உதவுகிறது. இதனால் தானோ என்னவோ அகநானுறு 309 இல் வரி 4 "தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்"  என்கிறதோ, யார் அறிவார் பராபரமே ! 
 (ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே உள்ள தலையங்கத்தினில் அழுத்தவும்)
[பகுதி: 08 வாசிப்பதற்கு கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்.]

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 08 தொடரும்

No comments:

Post a Comment