"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 06



இது வரை பாரம்பரியத்தை பற்றி பொதுவாகவும் மேலோட்டமாகவும் அதன் அறிமுகத்தை, உள்ளடக்கத்தை பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் சில முக்கிய தமிழர்களின் மரபையும் பாரம்பரியத்தையும் நான் சரி என நம்பும் அறிவியல் காரணங்களுடன் தர முயற்சிக்கிறேன். நான் இவ்வற்றை என்னால் முடிந்த அளவில் கவனமாக கையாண்டாலும், சிலவேளை தவிர்க்க முடியாத சில பிழைகள் மற்றும் குறைபாடுகள் [some errors and omissions] ஏற்படலாம். அதற்கு நான் இப்பவே வருத்தம் தெரிவிக்கிறேன். என்றாலும் விபரமாக நான் அவைகளை அலசமுன்பு, இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது பாரம்பரியம் எமக்கு எதை தரவல்லது? இது அதன் கருத்தின் படி, நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட குழு அல்லது குடும்பம் அல்லது சமுதாயம் முதலியன எப்படி சிந்தித்தனை, நடந்து கொண்டன அல்லது ஏதாவது செய்தனர் [a way of thinking, behaving, or doing something] என்பதை குறிக்கிறது எனலாம். அது அன்று அங்கு பரம்பரை பரம்பரையாக வேரூண்டி இருந்தது. ஆனால் இன்று புது வழியில், சிறந்த வழியில் நாம் ஒன்றை செய்யக் கூடியதாக இருக்கையில், அந்த பழம் வழியை ஏன் பின்பற்ற வேண்டும்? எப்படி நாம் இன்னும் பாரம்பரிய வழியில் ஒழுகினால் வளர அல்லது முன்னேற அல்லது அபிவிருத்தி அடைய முடியும்? உலகம் மாற்றம் அடைகிறது என்னவோ உண்மைதான், ஆனால், நாம் மனிதர்களாக இருப்பதற்கான சாரமான -எங்கள்
போராட்டங்கள், எங்கள் அச்சங்கள், எங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் [our struggles, our fears, our needs and desires] - ஆகியவை, பெருபாலும்  மனித இயல்பை தீர்மானிக்கும் உள்ளார்ந்த பண்புகளால் [inherent characteristics] அப்படியே மாறாமல் இருக்கின்றன. -பாரம்பரியம் சில பண்புகளை, உதாரணமாக எம் மேலும் மற்றவர்கள் மேலும் ஒரு விழிப்புணர்வை, உடன் இருக்கும் உணர்வை, உறுதிப்பாட்டை [heightening our awareness of self and others, cultivating a sense of belonging and stability] எமக்கு ரகசியமாக நினைவூட்டுவதுடன் அது  நம் வாழ்விலும் சமுதாயத்திலும் ஒரு வழிகாட்டி சக்தியாகவும் இருக்கிறது. எனவே இந்த அர்த்தத்தில் பாரம்பரியம் எப்போதும் மேம்படுகிறது, வளர்கிறது எனலாம். இது எம்மை பார்த்து, என்னை பெறுங்கள், என்னை செம்மைப் படுத்துங்கள், என்னை மனிதத்தன்மையூட்டுங்கள் என்கிறது. ஆகவே இது தன் வளர்ச்சியை, மாற்றத்தை நிறுத்து அல்லது கேள்வி கேட்க வேண்டாம் என்று ஒரு பொழுதும் சொல்லவில்லை .

ஒருமுறை சீன யாத்ரிகர் ஹியூன்-ஸங் [Hiuen -Tsiang] என்பவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் [Harsha, c. 590–647 CE, also known as Harshavardhana] என்ற ஒருவன் பேரரசனாக இருந்தான். அந்த பேரரசன் தனது செல்வத்தை தனது மக்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து இருக்கும் அந்த மரபை கண்டு அவன் வியந்தான். அது போலவே தஞ்சாவூர் அரசன் வழிப்போக்கர்கள் மற்றும் யாத்திரீகர்கள் இளைப்பாறிச் செல்ல சத்திரம் [shelter] அமைக்கும் மரபில் புகழ் பெற்று திகழ்ந்தான். இது வறியவர்களையும் நோயாளிகளையும், தங்கள் கவனிப்பில் இருந்து இறந்தவர்களையும் கவனித்தது. ஆனால் இந்த மரபு பின்நாளில் ,காலனித்துவத்தின் வருகையால் வழக்கொழிந்து போய்விட்டது. தஞ்சை மாமன்னர் சரபோஜி [Raja Sarfoji],1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அளவில் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் தனது அரசுக்கு என்ன நடந்தாலும், இந்த விருந்தோம்பல் பாரம்பரியம் நிறுத்தப் படக் கூடாது என்று அந்த தமிழரின் பாரம்பரியத்தின் பெருமையை சுட்டிக் காட்டினான். ஆனாலும் வளங்கள் வீணாக பயன்படுகிறது என கூறி நிறுத்தி விட்டார்கள். ஒரு சிறந்த பாரம்பரியம் அங்கு இறந்து விட்டது. அப்படியான ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்திலும் முன்பு இருந்தது. சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்ட முறை ஒன்று இருந்தது. நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச்
சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம். அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும் வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப் பட்டு இருக்கும். இப்படி தமிழ் ஒரு காலத்தே தனக்கென தனி அடையாளம் கொண்டிருந்தது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள், முக்கியமாக  7 - 8 நூற்றாண்டளவில் தமிழகத்தில் கால் பதித்த பின், தூய தமிழ் மரபு மெல்ல மெல்ல ஒழிந்து கலப்பு மரபு வேரூன்றி விட்டது. சங்க காலத் தமிழகத்தில் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் மக்களைப் புரிந்துகொண்டு புலவர்கள் பண்பாட்டு மையங்களாக இருந்தனர். அவர்கள் பாடல்களில் பழம் தமிழ்ப் பண்பாடு இன்று எமக்கு தெரிய வருகின்றது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது ஒரு பாடலின் கருத்து மட்டும் அல்ல, அதைப் பாடிய புலவர் உள்நாட்டு அமைப்பைப் பற்றிக் கூறிய கருத்தாகவும் நாம் எடுக்கலாம். மேலும் புறநானுறு 239  இல், நட்டோரை உயர்பு கூறினன் [நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்], வலியர் என வழிமொழியலன் [வலிமை யுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்], மெலியர் என மீக்கூறலன் [தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்], பிறரைத் தான் இரப்பு அறியலன்[பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்], இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் [தன்னிடம் இரப்பவர்களுக்கு
இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்], பசி தீர்த்தனன் [அவர்கள் பசியைத் தீர்த்தான், மயக்குடைய மொழி விடுத்தனன் [பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்], போன்ற வரிகள் அன்றைய தமிழர்கள் போற்றி புகழ்ந்த பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. அந்த பாடலை முடிக்கும் பொழுது இப்படி அவன் எல்லா பாரம்பரியத்தையும் முழுமையாக செய்ததால், அவனை  புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும் என்று முடிக்கிறது. இனி நாம் சில தமிழரின் பாரம்பரியங்களை ஒன்று ஒன்றாக  விரிவாக பார்ப்போம்.
பகுதி: 07 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை சொடுக்கவும்
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]


ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினைச் சொடுக்கவும்.



 

0 comments:

Post a Comment