பழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01


🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவோ, ஒரு செயலுக்கு விளக்கம் தரவோ சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து, அறிவுரையும் சொல்லும். 

வழக்காற்றில் இருக்கும் பல பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அவ்வாறு சொல்லப்படும் சில பழமொழிகளின் சரியான விளக்கங்களை இணையத்தில் பல பதிவுகளை தேடி படித்து இங்கு பகிர்ந்துள்ளேன்.

பழமொழிகள் :

1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பொருள்:
மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள்:
ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொருள்:
கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்:
'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள்:
ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4.) களவும் கற்று மற.
பொருள்:
தீய பழக்கமான களவு (திருட்டை)  நாம் கற்று கொண்டு,  மறந்து விட வேண்டும்
உண்மையான பொருள்:
களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!
பொருள்:
சேலை கட்டும் பெண்களை நம்பாதே!
உண்மையான பொருள்:
சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!
சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.

6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
பொருள்:
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.
உண்மையான பொருள்:
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.

7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
பொருள்:
மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.

8.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம்.
பொருள்:
அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி  நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.
உண்மையான பொருள்:
வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.

9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்:
ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

10.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
பொருள்:
மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.
உண்மையான பொருள்:
வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.

இன்னும் நம் வழக்கில் உபயோகப்படுத்தும் பழமொழிகள் நிறையவே இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த பதிவுகளில்  விமல்ராஜ்  அவர்களின் தொகுப்பில் படிக்க கீழே யுள்ள தலைப்பினை சொடுக்கவும்.
🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

No comments:

Post a Comment