எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஈச்சமொட்டை] போலாகுமா?


ஈச்சமொட்டை [Echchamaddi]
யாழ் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பல ஊர்களில் ஈச்சமொட்டையும் ஒன்றாகும்.இவ்வூரானது ஈச்சமோட்டை எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வூரானது யாழ் நகரிலிருந்து ஏறத்தாழ 5 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரானது யாழ் நகரை அண்மித்துக் காணப்படுவதனாலும் இதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்ததன் காரணமாகவும் இவ்வூரும் பிரதேச ரீதியில் அபிவிருத்தி அடைந்து காணப்படுகின்றது. சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், கொழும்புத்துறை, பாசையூர் போன்ற ஊர்களுக்கு மத்தியில் இவ்வூரானது அமைந்து காணப்படுகிறது.

தரைத்தோற்றம்
இப்பிரதேசத்தின் தரைத்தோற்றத்தை அவதானிக்கும் போது இப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ஏறத்தாழ 1.5 கிலோமீற்றர்கள் தொலைவில் கடல் காணப்படுவதால் இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் மணல் நிறைந்த பிரதேசங்களாகக் காணப்படுவதுடன் ஆங்காங்கே வண்டல் நிறைந்த களிமண்ணைக்கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் 3 பிரதான தரைத்தோற்ற வேறுபாடுகளில் ஒன்றான கரையோரச் சமவெளியிலே இப்பிரதேசம் அமைந்து காணப்படுவது இப்பிரதேச தரைத்தோற்றத்தை இலகுவாக பிரதிபலிக்கின்றது.

நீர் வளம்
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்கும் முக்கியமானதொரு வளமாக நீர் வளம் காணப்படுகிறது. அந்த வகையில் இப்பிரதேசத்தின் நீர் வளத்தை எடுத்து நோக்குமானால் இப்பிரதேசம் கடற்கரையை அண்மித்த பிரதேசமாகக் காணப்படுவதால் உவர் தன்மை கொண்ட நீர் இப்பிரதேசம் முழுவதும் காணப்படுகிறது. இப்பிரதேச வாழ் மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக இப்பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர்குழாய்களைப் பயன்படுத்துகின்றனர், ஏனைய தேவைகளுக்காக தங்கள் வீடுகளின் கிணற்றிலுள்ள உள்ள உவர் நீரைப் பயன்படுத்துகின்றனர். ஆண்டு முழுவதும் இப்பிரதேசத்திலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறையாத தன்மை காணப்படுகிறது, இதற்குக் காரணம் இப்பிரதேசத்திற்கு அண்மையில் கடற்கரை காணப்படுவதேயாகும்.

மண் வளம்
இப்பிரதேசமானது கடற்கரையை அண்மித்த பிரதேசமாகக்காணப்படுவதனால் இப்பிரதேசம் மணல் சூழ்ந்த பகுதியாகக் காணப்படுகிறது. ஆனால் இப்பிரதேசம் முழுவதும் மணலால் சூழப்பட்டதாகக் காணப்படாமல் ஆங்காங்கே சில பகுதிகளில் வளமான மண்ணைக் கொண்ட பகுதியாகவும் காணப்படுகிறது. இம்மண்ணானது இயற்கையாகவோ அல்லது மனித செயற்பாடுகளின் விளைவாகவோ இப்பகுதியில் உருவாகியிருக்கலாம்.

காலநிலை
இலங்கையானது அயனக்காலநிலை வலயத்தினுள் அமைந்துள்ளதனால் இப்பிரதேசமானது அக்காலநிலைக்குள் உள்ளடங்குகின்றது, மேலும் இப்பிரதேசம் இலங்கையின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளமையினால் வடகீழ்ப்பருவக்காற்றுக் காலநிலை இங்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. இக்காலநிலை மூலமே இப்பிரதேசத்திற்கு மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
வீதிகள்
இப்பிரதேசம் போக்குவரத்தில் நல்லதொரு அபிவிருத்தியினைக் கண்டுள்ளது. இப்பிரதேசமானது ஒரேயொரு [ஈச்சமொட்டை வீதி] பிரதான வீதியை மட்டும் கொண்டுள்ளதோடு ஏனைய வீதிகள் அனைத்தும் அதிலிருந்து உட்செல்லும் சிறு வீதிகளாகக் காணப்படுகின்றன.

குடியிருப்புக்கள்
ஈச்சமொட்டைப் பிரதேசமானது யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளதனால் இப்பிரதேசத்தில் அதிகமான மக்கள் வாழ்கின்றமை பிரதான காரணமாக விளங்குகிறது. இப்பிரதேசத்திலும் இதனைச்சூழவுள்ள பிரதேசத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் காணப்படுவதால் இப்பகுதியில் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றனர். இப்பிரதேசத்திலுள்ள பிரதான வீதியின் இருமருங்கிலும் அதிகமான குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. யாழ்பெரு நகரில் மருத்துவசுகாதார.போக்குவரத்து,தொடர்பாடல் போன்ற அடிப்படை வசதிகள் விருத்தியுற்ற நிலையில் காணப்படுவதினால் மக்கள் தமது வாழிடத்தை அதற்கு அண்மித்த பிரதேசமாகிய இப்பிரதேசத்தைத் தெரிவு செய்து வாழ்ந்து வருகின்றனர். இப்பிரதேசத்தை அண்மித்த பிரதேசமான சுண்டிக்குளியில் யாழ் நகரின் பிரதான பாடசாலைகளானயாழ் பரி யோவான் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி போன்றன காணப்படுவதனால் இப்பிரதேசத்திலுள்ள அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைகளிலே கல்வி கற்கின்றனர். மேலும் யாழ் பிரதேச செயலகம், இலங்கை மின்சார சபை,யாழ்ப்பாணம் போன்ற நிர்வாக நிலையங்கள் அமைந்துள்ளதனால் தமது தேவைகளை இலகுவில் பூர்த்தி செய்யக்கூடிய தன்மை காணப்படுவதனால் இப்பிரதேசத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர், இதனால் அதிகமான குடியிருப்புக்களைக் கொண்ட பிரதேசமாக அப்பிரதேசம் காணப்படுகின்றது

சனசமூக நிலையம்
இப்பிரதேசத்தில் காணப்படும் சமூக தொடர்புடைய நிலையங்களில் ஈச்சமொட்டை சனசமூக நிலையம் காணப்படுகிறது.
இச்சனசமூக நிலையமானது மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. மாதாந்த அங்கத்தவர் கூட்டம் கூடுதல், பிரதேச மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நாள் தோறும் பத்திரிக்கைகளைக் காட்சிப்படுத்துதல், வருடாந்த விளையாட்டப் போட்டிகளை நடாத்துதல், வறிய மக்களுக்கான உதவித்திட்டங்களை அரச நிறுவனங்களுடன் இணைந்து நடாத்துதல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

வழிபாட்டுத்தலங்கள்
இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் இந்து, கிறிஸ்தவம் போன்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களை நோக்கும் போது இங்கு இந்து ஆலயமாகிய ஈச்சமொட்டை ஞான வைரவர் ஆலயம் காணப்படுகின்றது.
குளங்கள்
இப்பிரதேசத்தில் காணப்படும் குளங்களானது மாரிகாலங்களில் மழை நீரானது இப்பிரதேசத்தினுள் தேங்கி நிற்காதவாறு பாதுகாக்கிறது. இப்பிரதேசத்தில் காணப்படும் வாய்க்கால்கள் ஊடாக மழை நீரானது இக்குளங்களைச் சென்றடைவதால் வெள்ளப்பெருக்கு என்பன ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இக்குளங்கள் இப்பிரதேசத்தின் கிழக்குப்பக்கமாகவும், மேற்குப்பக்கமாகவும் சிறிய குளங்களாகக் காணப்படுகின்றன. ஈச்சமொட்டைக்குளம்
அதிகளவில் ஆளமற்றுக்காணப்பட்டாலும் இவற்றின் பயன்பாடுகள் அதிகளவில் இப்பிரதேசத்திற்குத் தேவைப்படுகின்றன. இவை மாரி காலங்களில் அதிகளவு நீர் மட்டத்தினையும் கோடை காலங்களில் குறைந்தளவு நீர் மட்டத்தினையும் கொண்டு காணப்படுகின்றன. இக்குளத்தினை மேலும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விளையாட்டு மைதானம்
இப்பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு மைதானமானது இப்பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும்
பொழுதுபோக்குமிடமாகக் காணப்படுகிறது. இப்பிரதேசத்திலுள்ள மைதானமானது இதனை அண்மித்துள்ள பிரதேசங்களிலுள்ள மைதானங்களை விட பரப்பில் பெரிய மைதானமாகக் காணப்படுவது இம்மைதானத்திற்குரிய சிறப்பியல்பாகும். ஏனைய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு அணிகள் தங்கள் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்காக இம்மைதானத்தையே தெரிவு செய்கின்றார்கள். இம்மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள், உதைபந்தாட்டப்போட்டிகள் போன்றன அதிகமாக இடம்பெறுகின்றன.

குறிப்பு: ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு நாள் உங்கள் ஊரும் தீபத்தில் இடம்பெறும். காத்திருங்கள்.நன்றி.

                                                        தொகுப்பு; கயல்விழி,பரந்தாமன்.

0 comments:

Post a Comment