மழை மேகம் -குட்டிக்கதை



மழை மகளை நம்பி போக பயிர் செய்கைக்கு அனைவரும் ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். ராமுவும் தன் தோழர்களுடன் இணைந்து அந்திப்பொழுதை போக்கிக் கொண்டிருந்தான்.
அப்போது
ராமுவின் வீட்டுக்காரி தேநீருடன் வருகை தந்து இருந்ததால் அதை பகிர்ந்து குடிப்பதற்காக அனைவரும் ஆயத்தமாகினர்.அந்த நேரம் ரவி "" இந்த முறையும் மழை வராமல் போனால் என்னுடைய குடும்பம் நடு ரோட்டில தானடா" என்று கூறி வருத்தப்பட ,
ராமுவோ "அப்படி எல்லாம் நடக்காது, கடவுள் கைவிட மாட்டார் "எனக் கூறி அவனுக்கு ஆறுதல் சொல்லிச் சமாளித்துப் விட்டு, எனக்கு கொஞ்சம் களைப்பாய் இருக்கு மச்சான், நாளை சந்திப்போமட எனக் கூறி
விடைபெற்றுக் கொண்டான். இறந்த கால நிகழ்வுகள் கண்களில் தோன்றவும் அதைப்பற்றி எண்ணியவாறு வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.

ராமுவின் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். காலபோக மழையை நம்பியே அவர்களின் விவசாயம் .சென்ற ஆண்டு மழை பொய்த்துப் போய்விட தொடர் கடுமையான வறட்சி . வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாமால் போக, கடன் தந்த நிறுவனமும் சொத்துக்களைப் பறி முதல் செய்ய அதை தாங்க முடியாமல், தந்தை இறந்து போன சம்பவத்தை எண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ராமு. அங்கே அவன் மனைவி சாப்பிட அழைக்க உணவில் நாட்டம் இல்லாதவனாய் வெறுப்பு கலந்த உணர்வோடு ,"நான் சாப்பிட்டு விட்டேன் ,நீ போய் சாப்பிட்டிட்டு படு" எனக் கூறி , அமைதி இழந்தவனாய் தனது படுக்கை விரிப்பில் மெல்லச் சாய்ந்து கொண்டான் .

மாலைப் பொழுது கமல் அவசரம் அவசரமாக ராமு வீட்டுக்கு சென்று "ராமு ராமு" என அழைத்தான். அப்போ ராமு சாப்பிட்ட கையுடன் வாசலுக்கு வந்து" என்னடா என்ன நடந்துட்டுது, என்று இப்படி கத்திக் கொண்டு வாராய்" என வினவ, கமலோ "ரவி தூக்குப் போட்டுவிட்டான்"  எனக் கூறவும்,அதிர்ந்து போனவனாய் , "என்னடா .. என்ன சொல்லுறாய் ,சரி சரி, வாடா போய்ப் பார்ப்போம் "என கண்கலங்கியபடி விரைந்து சென்றனர்.. அங்கே அவன் மனைவி சகுந்தலா ஒரு பக்கமும், அவன் செல்ல மகள் மறு பக்கமும் மூச்சு விடாது அழுத வண்ணம் நிற்க, மறுபக்கம் கிராம மக்கள் அவன் குணநலன்களை பற்றி உரையாடிக் கொண்டு நின்றனர்.. ராமு ரவியின் உயிர் அற்ற உடலைப் பார்த்து புலம்பத் தொடங்கினான்.
உடலையும் பார்த்து விட்டு பின் வானத்தையும் அண்ணாந்து பார்த்தான். மழைக்காலம் ஆனாலும் மேகமோ இரங்காமல் விட்டு விட்டதால் மீண்டும்
ஒரு உயிரை குடித்து ஏப்பம் விட்டபடி இருந்தது. "உனக்கு இரக்கமே இல்லையா? பாசம் தெரியுமா? , இல்லை வலி தான் என்னவென்று தெரியுமா ?இன்னும் எத்தனை உயிரைக் காவு கொள்ளப் போகிறாய்?"
என புலம்பியபடி நித்திரையால் திடுக்கிட்டு எழவும், அவளுடைய மகள் "அப்பா, அப்பா" என அழைத்து "வெளியில நிறைய மழை பெய்யுது அப்பா , என்னை எப்படி அத்தை வீட்டை கூட்டி கொண்டு போக போகுறாய்" என தன் ஆதங்கத்தை கொட்டினாள்.
வருணதேவன் இரங்கி விட்டான் ,இதோ வானம் பொழிகிறது,பூமி நனைகிறது, என ஆனந்தம்
பொங்க குதூகளிப்புடன் குழந்தையை கட்டிபிடித்தவாறு "நாளை கண்டிப்பாக அத்தை வீட்டை போவோம் "எனக் கூறி மகளை அன்புடன் முத்தமிட்டான்.
- காலையடி, அகிலன் 
☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔

No comments:

Post a Comment