"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 04


நாம் எம் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது, சாட்சியங்களுடன் காட்சி அளிக்கும் மிகப் பண்டைய பாரம்பரியத்தில் ஒன்றாக யோகா [Yoga] இருப்பதை காண்கிறோம். இது இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன் இருந்துள்ளது. இதை அத்தாட்சி படுத்துவதாக மொஹெஞ்சதாரோ தொல்லியல் தளம் அமைகிறது. அங்கு சித்தசானா காட்சியில் [Siddhasana posture] பல முத்திரைகள், கல்வெட்டுகள் [inscriptions] கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. எப்படி என்றாலும் முனி பாரம்பரியத்தில் தோன்றிய யோகா, பிற்காலத்தில் ரிஷி பாரம்பரியத்தில் வேத பண்பாட்டால் பிரபலப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது மனித குலம் உருவாக்கிய மிகப் பெரியதொரு சிறப்பு வாய்ந்த பழக்கமாகும், இது உடல் மற்றும் மனப்பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான நல்ல ஒரு பயிற்சியாகும்.

நாகரிகம் முன்னேற முன்னேற பாரம்பரியமும் அதனுடன்
சேர்ந்து பொதுவாக மாறுகிறது, ஏனென்றால் நாகரிகத்துடன் அறிவு மற்றும் அனுபவத்தின் எல்லைகள் விரிவு படுவதே இதற்க்கான காரணம் ஆகும். எனவே பாரம்பரியமும் அந்தந்த சூழ்நிலைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது எனலாம். ஒவ்வொரு நாகரிகமும் அந்தந்த கால கட்டத்தின் தேவையை பொறுத்து பாரம்பரியத்தை அதற்கு ஏற்றவாறு சரிப்படுத்துகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எது சிறப்பாகவும் தேவைப் பட்டதாகவும் இருந்ததோ, அது இன்று அப்படி இல்லாமல் போகலாம். எனவே, குருட்டு மரபுசார்ந்த அல்லது பழமைவாதவாதத்தால் [blind orthodoxy or conservatism ] அப்படியே பாரம்பரிய பாரம்பரியம் தொடர்வதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எம் அனைத்து முன்னேற்றத்திற்கும் ஒரு பெரிய பின்னடைவு [drawback] ஆகும். நாம் இன்றைய கால ஓட்டத்துடன் ஒவ்வாதவைகளை இறுக்க பற்றிக்கொண்டு இருக்காமல், சூழ்நிலைக்கு அறிவு
வளர்ச்சிக்கு ஏற்ப விட்டுக்கொடுப்புகளுடன் அவ்வற்றை மாற்றி அமைக்க வேண்டும். நாம் எப்படி வாழ்ந்தோம் என பெருமை படுவது மட்டும் போதாது, எங்கள் முன்னோடிகள் தங்கள் விலைமதிப்பற்ற வம்சமாக விட்டு விட்டு சென்ற நாமும், பெருமைக்கு உரியவராக இன்றைய உலகில் இருந்து அவர்களுக்கு பெருமை தேட வேண்டும்.

ஒரு உதாரணமாக துடக்கு என்ற மரபை எடுப்போம், ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு ஒரு விதி விலக்கு அளிக்கப்படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது மகிழ்ச்சியைக்
கொண்டாடும் காலம் என்பதால், ஒரு தற்காலிகமாக அளிக்கப்படும் விடுமுறையே, ஆசௌச அல்லது துடக்கு காலம் ஆகும். சௌசம் என்றால் சுத்தி எனப்படும்.எனவே, ஆசௌசம் என்றால் சுத்தியற்ற அல்லது 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை' என்று பொருள்படும். மரணம் என்றால் மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும் ,பிறப்பு என்றால் அந்த மகிழ்வை கொண்டாட, தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக் கொள்ள, பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாக ஒன்றாக கழிக்க, இந்த துடக்கு காலம் வழி செய்கின்றது எனலாம். இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய சமுதாயத்தின் தேவையில் தோன்றிய மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது. எனினும்  இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே! ஏன், அந்த காலத்திலேயே, பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக முதன் முதலில் கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என்பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு  என்கிறார் திருமூலர்

"ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே."

இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உணர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார்.

"ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே."

அதே போல,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திருமூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில்,

வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள்
ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு
ஈரம் இன்றே என்றானே!”

அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 05 படிக்க கீழே உள்ள தலைப்பினை சொடுக்கவும்..
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினைச் சொடுக்கவும்.

No comments:

Post a Comment