"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 03

மனிதனுக்கும் மட்டும் அல்ல, சராசரி அறிவு கொண்ட மிருகங்களுக்கும் [Average intellect animals] பாரம்பரியம் அல்லது மரபு உண்டு என இன்று விஞ்ஞானிகள் நிறுவி உள்ளனர். உதாரணமாக கீரி [mongooses] ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு பாரம்பரியத்தை கடத்துகிறது என கண்டு பிடித்து உள்ளனர். எனவே இது மனிதனதோ அல்லது உயர் அறிவு கொண்ட மிருகங்களான மனித-குரங்கு உள்ளிட்ட உச்ச உயர்பாலூட்டி உயிரினத் தொகுதி மற்றும் டால்பின்கள் [Is not the sole purview of humans and intellectually advanced animals such as primates and dolphins] ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தில் அல்லது வரம்பிற்கு உட்பட்டவை அல்ல என்கிறது. இது இன்னும் ஒன்றையும் வலியுறுத்துகிறது, அதாவது எம்மிலும் அறிவு குறைந்த மிருகங்கள் கூட தமது அடையாளத்தை, தமக்கான சிறப்பு இயல்புகளை தக்க வைக்க, தமது பண்பாடடை அடுத்த தலை முறைக்கு கடத்துகிறது என்பது தான்!, அப்படி என்றால் நாம் எம்மட்டு?  நாமும், அது எமது ஒரு கட்டாய கடமையாக இல்ல விட்டாலும், அது எமக்கு குழந்தை பருவத்தில் இருந்து பழக்கப் பட்டதால், அது ஒரு வாழ்க்கை முறையாக பெற்றோரால் அறிமுகம் செய்யப் பட்டதால், அதை இன்னும் எதோ ஒரு வழியில் பின்பற்றுகிறோம்.

என்றாலும் சிலவேளை உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல பாரம்பரிய முறைகளை நாம் தற்போதைய சூழலில் கைவிடுவதும் உண்டு.

 உதாரணமாக, எண்ணெய் ஆட்டுவதற்கு மரத்திலான செக்கை பயன்படுத்தி, அதன் பெருமையை பாரம்பரியமாக கடைபிடித்த  தமிழர், இன்று இயந்திரங்களால் அதிவேகத்தில் பிழிந்தெடுக்கப்படும் நவீன முறைக்கு மாற்றம் அடைந்துள்ளனர். மேலும்,உடற்பயிற்சி அல்லது கடும் உடல் வேலைக்கு பின் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் பழக்கமும் இருந்தது. உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்சினையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்குப் பதிலாக, நல்ல எண்ணெய் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

நவீன முறையில் இயந்திரத்தால் எண்ணெய் பிழியும் பொழுது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்துவிடுவதால், அதில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட  எண்ணெய் சூடாகவும் ஊட்டச்சத்து மதிப்பு குறை வாகவும் உள்ளது. மேலும் வர்த்தக ரீதியாக, நீண்ட பாவனைக்கு உகந்ததாக இருப்பதற்காக தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளையும் அறிமுகப் படுத்து கிறது. [“refining degrades nutritional value, and more significantly, introduces harmful trans fats in an attempt to improve shelf life for commercial reasons”] ஆனால், பாரம்பரிய முறையில் மர செக்கில் மெதுவாக எண்ணெய் பிழிவதால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், குளிராகவும் இருக்கும். [“Cold-pressed oils have all their nutrients intact, retaining the natural properties of the oil-seeds, unlike refined oil,”] மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளும் அதிகமிருக்கும்.[“It’s a bit like atta and maida; the source is the same, but atta is far superior to maida, nutritionally]  இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும் உயிர்ச் சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. இப்படி பெருமை வாய்ந்த பாரம்பரிய முறை இன்று பல காரணங்களால்  மறைந்து போய் புது நவீன முறை பழக்கத்திற்கு வந்துள்ளது

எனவே, நாம் எமது ஒவ்வொரு பாரம்பரியத்தின் மூலத்தையும் அது உரைக்கும் காரணத்தையும், அதன் உண்மைத் தன்மையையும் அறிவியல் விளக்கத்தையும் அறிவது மிகவும் சாலச் சிறந்தது, அப்படியாயின் தேவையற்ற, அறிவியலுக்கு ஒவ்வாததை நாம் தவிர்த்து, எமது பாரம்பரியத்தை பெருமையடைய  செய்து, எமது அடையாளத்தையும் பெருமை அடையச்  செய்யலாம். இது சாத்தியமான ஒன்று, ஏனென்றால், பாரம்பரியத்திற்கு ஒரு கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் [Since traditions are not strict rules and regulations ] கிடையாது, எனவே சில அம்சங்கள் அங்கு மாற்றக் கூடியவை, உண்மையில், நாம் இன்று பின் பற்றும் பாரம் பரியம் ,அதன் அசல் பாரம்பரியத்தின் மாறுபாடுகளே [variations of an original tradition] ஆகும் . உதாரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிறிஸ்துமஸ் மரங்கள் [Christmas trees] சாப்பிடக் கூடிய ஆப்பிள்கள் மற்றும் கொட்டைகள் மூலம் அலங்கரிக்கப் பட்டன, அதுவே கிறிஸ்துமஸ் பாரம்பரியமாக அன்று இருந்தது. அதன் பின் [illuminated by candles] மெழுகுவர்த்தியால் வெளிச்சம் கொடுக்கப்பட்டு, இன்று [electric lights and  various ornaments] மின் விளக்குகள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது  

பொதுவாக, பாரம்பரியம் நமது கலாச்சாரத்தின் முக்கியமான பகுதி எனலாம். அவை எமது குடும்பம், எமது சமுதாயம் ஆகியவற்றின் அத்திவாரம் மட்டும் இன்றி அதனை கட்டி எழுப்பும் கட்டுமானமாகவும் உள்ளன. அது எமது கடந்த காலத்தை வரையறைக்கும் வரலாற்றின் ஒரு பகுதி நாம் என்பதை, எமக்கு ஞாபகம் ஊட்டுகிறது. அது மட்டும் அல்ல, நாம் இன்று யார் என்பதையும், நாளை எப்படி நாம் இருப்போம் என்பதையும் வடிவமைக்கிறது. நாம் பாரம்பரியத்தின் உண்மையான செயலை, கருத்தை புறக்கணித்தால், நாம் எமது அடையாளத்தை தொலைத்து விடுவோம் அல்லது எமது அடையாளத்திற்கு ஆபத்து ஏற்படும். உதாரணமாக, இல‌ங்கையின் க‌ரையோர‌ங்க‌ளில், குறிப்பாக புத்த‌ள‌ம்,  சிலாப‌ம், நீர்கொழும்பு, மாத்த‌றை வ‌ரை வாழ்ந்த‌ த‌மிழ்ப்பர‌த‌வ‌ர்க‌ள் போத்துக்கேய‌ரின் வ‌ருகையுடன் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்திற்கு மாறி, மெல்ல, மெல்ல தமது பாரம்பரியத்தை இழந்து, அடையாளம் தொலைத்து, நாள‌டைவில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாயின‌ர் என்பதே வரலாறு உரைக்கும் கசப்பான உண்மையாகும்.

 பாரம்பரியம் எமக்கு ஒரு ஆறுதலையும் சமுதாயத்தில் ஒரு பங்கையும் பங்களிக்கிறது. இது குடும்பத்தை இணைக்கிறது, நண்பர்களுடன் மீண்டும் இணைக்க துணை புரிகிறது. மேலும் சுதந்திரம், நம்பிக்கை, ஒற்றுமை, நேர்மை, நல்ல கல்வி, தனிப்பட்ட பொறுப்பு, ஒரு வலுவான பணி நெறிமுறை, மற்றும் தன்னலமற்ற இருப்பு [freedom, faith, integrity, a good education, personal responsibility, a strong work ethic, and the value of being selfless] போன்றவற்றை வலிவூட்டுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான முக்கிய விடயங்களை கொண்டாட இது இடமளிக்கிறது. உதாரணமாக, இது ஒருவர் பங்களித்த நற்செயலுக்கு நன்றி செலுத்த சந்தர்ப்பம் கொடுக்கிறது, எங்கள் சமுதாயத்தின், குடும்பத்தின் உயர்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தவும், எங்கள் பன்முகத்தன்மையை [diversity] காட்டவும், ஒரு நாடாக, ஒரு இனமாக ஐக்கியப்படவும்  வழிவகுக்கிறது. அது மட்டும் அல்ல பாரம்பரியம் எங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஒரு நீடித்த நினைவுகளை உருவாக்குவதுடன், எம்மை மற்றவர்களுக்கு அர்த்தமுடன் பிரதிபலிக்க ஒரு சிறந்த சூழலையையும் வழங்குகிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 04 வாசிக்க கீழே உள்ள தலைப்பினைச் சொடுக்கவும்.

No comments:

Post a Comment