கொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்

டெங்கு காய்ச்சல் பரவலுக்கு கொசுக்கள் காரணமாக உள்ள நிலையில், கொசுக்கள் மூலமாகவே ஒரு நகரம் முழுதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

இயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களை உடைய, ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட கொசுக்கள் டௌன்ஸ்வைல் நகரத்தில் வெளியிடப்பட்டன. அந்தக் கொசுக்கள் அந்நகரின் பொது வெளியில் உள்ள கொசுக்களுடன் உறவு கொண்டன.
இதன் மூலம் டெங்கு காய்ச்சல் தொற்றாமல் தடுக்கும் வோல்பாசியா (Wolbachia) எனும் பேக்டீரியா அந்நகரில் பரவியது. இதனால் 2014ஆம் ஆண்டு முதல் டௌன்ஸ்வைல் நகரத்தில் டெங்கு தொற்று யாருக்கும் இல்லை.

டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா மற்றும் மலேரியா போன்ற நோய்களையும் இதே வழிமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"நம்மிடம் ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் எதுவும் இந்த நோய்களை கட்டுப்படுத்தவில்லை," என்று கூறியுள்ள உலக கொசுக்கள் திட்டத்தின் இயக்குநர் ஸ்காட் ஓ'நீல், "இந்த வழிமுறை கொசுக்களால் பரவும் நோய்கள் மீது பெரிய தாக்கத்தை உண்டாக்கப்போகிறது. மிகவும் நம்பிக்கை தருவதற்கான முதல் அறிகுறியாக இந்த ஆய்வு உள்ளது," என கார்டியன் இதழிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நான்கு மழைக் காலங்களில் வோல்பாசியா பாக்டீரியாக்களைக் கொண்டுள்ள கொசுக்களை, சுமார் 1,87,000 மக்கள் வசிக்கும் 66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள அந்த நகரில் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்துக்கு அங்குள்ள மக்கள் பெரும் ஆதரவளித்தனர். இந்த சிறப்பு வாய்ந்த கொசுக்களை, உள்ளூர் கொசுக்கள் இருக்கும் பகுதிகளில் பள்ளி மாணவர்களும் வெளியிட்டனர்.

"ஒரு நபருக்கு 15 ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் இந்தத் திட்டம் மூலம், மிகவும் வேகமாகவும், குறைந்த செலவிலும், திறன் மிக்க வகையில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று டௌன்ஸ்வைல் நகரில் நிகழ்த்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது," என்று பேராசிரியர் ஓ'நீல் கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் தற்போது 11 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வோல்பாசியா பாக்டீரியாக்களை உலகின் மிகவும் ஏழ்மை நிலவும் பகுதிகளில், நபர் ஒருவருக்கு தலா ஒரு அமெரிக்க டாலர் எனும் குறைந்த செலவில் பரப்பி நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 3,90,000 பேர் வசிக்கும் இந்தோனீசியாவின் யோக்யகர்தா நகரில் இப்போது இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment