நாம்
அன்றாட வாழ்வில் மிக மிக அசாதாரணமாக கடந்து செல்லும் நிகழ்வுகளில் ஒன்றாகி போனது
பிறரை குறித்தான அவதூறை பரப்புவதும் இட்டுகட்டுவதும். நாம் பழகியவர்களையே குறை கூறி புறம் பேச
தயங்காத நம் கையில், முகம்பாராமல் பழகும் வகையிலான
நட்பினை ஏற்படுத்தி தந்த சமூக
வலைதளங்களில் இத்தகைய அவதூறுகளுக்கும் புறங்களுக்கும் எல்லையே இல்லை ! இத்தகைய செயல் ஒருவகையான மனநோயே என்பதை தவிர
வேறொன்றும் இருக்க முடியாது. காரணம் அவதூறு என்பது என்ன அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்றெல்லாம் தன் வாழ்நாளில் சிந்திக்க தொடங்கினார்கள் என்றால் அத்தகைய இழிவான
செயலை ஒருபோதும் செய்ய துணியவே மாட்டார்கள்.
போகின்ற போக்கில் ஒருவரை
குறித்து அவர் செய்யாத அல்லது செய்தாரோ இல்லையோ என்று கூட தெரியாமல்,அவரின் மீது ஒரு அபாண்டத்தை
ஏற்படுத்தியும் வீண்பழி சொல்லியும் அவதூறுகளையும் பரப்பிவிடுகின்றனர். இரு
ஆண்களுக்குள் நடக்கும் சண்டையென்றால் சொல்லவே தேவையில்லை, நிச்சயம் அங்கே தத்தமது வீட்டுப்பெண்
பற்றி பல அவதூறுகளை கிளப்பிவிடுகிறார்கள். அவை உண்மையா பொய்யா என்பதெல்லாம் யாரும்
கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, அவர்களுக்கு
முக்கியம் எதிராளியை அசிங்கப்படுத்துவது மட்டுமே!
(சந்தேகமான) பல
எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள்
இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்.
சிந்தித்துப்பாருங்கள்
!
இதுபோன்ற அவதூறு
சொல்லும் நபர்கள், தாங்கள் பரப்பும் பொய்யான அல்லது ஆதாரமற்ற
அல்லது செவிவழிச் செய்தி அவதூறுகளால் சம்மந்தப்பட்டவரின்,வாழ்க்கையில் என்ன இடர்களை அவர்கள்
சந்திக்க நேரிடுகிறது என்று எள்ளளவும்
எண்ணி பார்ப்பதில்லை. இத்தகைய அவதூறுகளால் எத்தனையோ பேர் மன உளைச்சலுக்கு
ஆளாக்கப்பட்டும், செய்யாத குற்றத்துக்கு பழிகளை சுமந்தும்
சமூகத்தால் புறக்கணிக்க பட்டு
வாழ்க்கையையே சூனியமாக்கி கொள்ளும் நிலைக்கு கூட தள்ள
படுகிறார்கள்.சிலநேரம் தற்கொலை செய்யக்கூடிய அளவுக்கு கூட அவர்கள்
தள்ளப்படுகிறார்கள். காரணம் கேள்விப்பட்ட அவதூறுகளை யாரும் அது ஒரு நம்பகமான
தகவலாகத்தான் பார்க்கிறார்களே தவிர அது உண்மையோ பொய்யோ என்றெல்லாம்
ஆராய்வதில்லை.அதனால் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கும், ஏச்சு
பேச்சுக்கும் அவர்கள் ஆளாக வேண்டிருக்கிறது.
சமீபத்தில் பேஸ்புக்கில்
ஒரு பிரபலப் பெண்மணி தற்கொலைக்கு முயற்சித்ததாக செய்தி வந்தது. அவரின் பேஸ்புக்
பக்கத்திற்கு சென்றால் அனைத்து பதிவுகளும் அவரின் மனதைரியத்தை வெளிப்படுத்துவதாக
இருந்தது. இப்படியான தைரியமிக்கப் பெண் தற்கொலை
செய்ய முயற்சித்ததன் காரணம் என்னவென்று விசாரித்த போது தான் தெரிந்தது, முன்பகை
காரணமாக அவரைப் பற்றி அவரின் நண்பர்கள்
பரப்பிய அவதூறுகள் தான் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இம்முடிவை எடுக்க
வைத்துள்ளது. இதுபோல் பல சம்பவங்களை நாம் பார்க்க முடியும். இதில் ஆண்கள் பெண்கள் என்று யாரும் விதி
விலக்கு கிடையாது.
இதுபோன்ற அவதூறு எனும்
கோடாரி எவரையும் விட்டு வைப்பதில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விசயங்களை
கேள்விப்படுகிறோம்.தங்களின் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள கங்கணம் கட்டிக்கொண்டு
எத்தனை ஆண்கள் திரிகிறார்கள்.அவர்களின் ஆசை வார்த்தைக்கும் இச்சைக்கும் கட்டுபாடாத
போது ஒரு பெண் எத்தனை சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கபடுகிறாள் என்பது பல சம்பவங்கள் மூலம் நாம் புரிந்துக்கொள்ளலம்.
வெறுமனே போகின்ற போக்கில் அந்த பெண்ணை குறித்தும் சம்மந்தமே இல்லாமல் பிறருடன்
பொய்யாக சம்மந்தப்படுத்தி அவதூறுகளை சொல்லி இட்டுக்கட்டப்படுகிறாள்.இதனால் தான்
செய்யாத தப்புக்கு தண்டனையாக வீட்டிலும் சமூகத்திலும் , திருமணமான பெண்ணாக இருந்தால்
புகுந்தவீட்டிலும் எத்தனை எத்தனை அவமானங்களையெல்லாம் அவள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது
? அவமானம் என்பது அந்த பெண்ணோடு முடிந்து
போகிறதா ? இல்லை அவர்கள் பெற்றோர்கள் சகோதர
சகோதரிகள் என்று எவரையும் விட்டு வைப்பதில்லை. அதுபோலவே எந்த தவறுமே செய்யாத
கண்ணியமான ஆண்களின் மீது இட்டுக்கட்டப்படும் அவதூறுகளினால் சமூகத்தில் மதிப்பையும்
மரியாதையும் இழக்க நேரிடுகிறது .
சமூகமாற்றத்துக்கும்
நல்ல பல ஆரோக்கியமான விசயங்களை பகிர்ந்துகொள்ளவும் அசுர வேகத்தில் அது மக்களை
சென்றடைய அரிதாக கிடைத்த முகநூல் வாட்சப் போன்ற ஊடகங்கள் மூலம் இப்போது மிகவும்
அசுர வேகத்தில் பரப்பபடுவ தென்னவோ அவதூறுகள்தான் .முகநூலில் சில நாட்களுக்கு
முன்பு ஒரு ஆசிரியையும் மாணவனும் ஊரை விட்டு ஓடிவிட்டார்கள் என்ற புகைப் படத்துடன்
கூடிய செய்தி.எட்டுதிக்கும் பரப்பப்பட்டது . அதே செய்தி மறுநாள் நாளிதழில்களில்
செய்தியாக வந்ததோ முற்றிலும் வேறு..முதல் நாள் பரப்பபட்ட புகைப்படமும் மறுநாள்
பிரசுரிக்கப்பட்ட புகைப்படமும் ஒன்றுகொன்று சற்றுமே தொடர்பில்லாதது .இதில் தவறு
இழைக்காத ஒரு பெண்ணின் புகைபடத்தை பரப்பினார்களே, இதை காணும் அந்த பெண்ணின் மனநிலை என்னவாகியிருக்கும் என்று யாரும் சிந்தித்து பார்த்தார்களா ? அப்படி சிந்தனை செய்திருந்தால் அதுபோன்ற
தவறை செய்திருப்பார்களா? இதில் ஜனநாயகத்தின் நான்காம்
தூண்கள் கூட நாங்களும் இதில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று பொய்யான
புகைப்படத்தை வெளியிட்டு பிறகு நீக்கிவிட்ட கன்றாவி காட்சிகளும் அரங்கேறியது.
அவதூறுகள் பரப்புவதில் இவர்களுக்கெல்லாம் எத்தனை அவசரம். என்ன மாதிரியான மனநிலை
கொண்ட மனிதர்களாக இருப்பார்கள் இவர்கள்.
இதேபோன்றுதான் வேறொரு
சம்பவம் முக்காடு அணிந்த இஸ்லாமிய
சகோதரியை ,சகோதர சமூகத்தை சேர்ந்த இளைஞர்
முத்தமிடுவதைப்போல் புகைப்படம் வாட்சப் மூலமும் அதை வாயிஸ் மெசேஜிலும் பரப்பும்படி,தகவல் பரப்பப்பட்டது.ஆனால் இந்த சம்பவம்
அந்த ஊரில் நிகழ்ந்ததா என்று விசாரிக்கப்பட்டபோது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை
என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் மறுத்திருக்கிறார்கள்.இப்படி கேட்டதையெல்லாம்
செவிமடுத்து பரப்பியவர்கள் என்ன பலனை தேடிகொண்டார்கள் என்பது தெரியவில்லை
.குறிப்பிட்ட அந்த ஊரின்மீது களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு பரப்பபட்ட அவதூறே
அல்லாது வேறு என்னவாக இருக்க முடியும்.
நண்பர்களையும் நாம்
அவதூறு கூறுவதில் இருந்து விட்டு வைப்பதில்லை . அவர்கள் நம் எவ்வளவு
நெருக்கத்திற்குரிய நண்பராக இருந்தாலும் அவருடன் நமக்கும் அவருக்கும் ஒரு சின்ன
கோபம் வந்தாலும் அவர்கள் மேல் இருக்கும் வெறுப்பால் அவதூறு பரப்புகிறோம்..
என்னதான் நம்மோடு நெருங்கி பழகிய நபராக இருந்தாலும் அவரை பற்றி நாம் அவதூறு
கூறாமல் இருப்பதில்லை. அவதூறு கூறுவது தவறு என தெரிந்தும் கூட நாம் அந்த தவறை
விட்டு விலகுவதுமில்லை. எந்த ஒரு விஷயத்திற்கும்
இரு பக்கங்கள் உண்டு. அதனை அல்லாஹ்வே அறிவான். மறுமையை நம்பும் மக்கள் மறுமையில் அல்லாஹ்
தண்டனை வழங்குவான் என்பதனையும் அறிந்தே
வைத்துள்ளார்கள். அப்படியிருக்க, தன்னால் உறுதி செய்யப்படாத கேள்விபட்ட விஷயங்களை பரப்பி
இம்மையிலேயே தண்டனை வாங்கிக்கொடுக்க துடிக்கும் இவர்கள், அது பொய்யான செய்தி என தெரியவரும் போது அதற்குரிய தண்டனையை ஏற்பார்களா? இழந்த மரியாதையை மீட்டுக்கொடுப்பார்களா?
இதில் ஆண்களும்
விதிவிலக்கில்லை ..சில வீடுகளில் பெண்களை சொல்லி திருத்த வேண்டிய அவர்களே அதை
சேர்ந்து பேசுவதும் அதை ஆதரிப்பதும் வேதனைக்குரியது. முன்பெல்லாம் புறம் பேசுவதும்
அவதூறு பரப்புவதும் பெண்களே என்ற நிலை மாறி இப்போது ஆண்களும் தங்கள் சளைத்தவர்கள்
அல்லர் என்பதனை வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள் பகிர பயப்படும் விஷயத்தையும் எளிதாக ஆண்களின் டைம்லைன்களில் காண முடிகிறது.
ஆயிரம் குற்றவாளிகள்
தண்டனையிலிருந்து தப்பித்தாலும், ஒரு நிரபராதி
கூட தண்டிக்கப்பட கூடாது என்ற சொல்வழக்கு நடைமுறையில் இருப்பதைப்போல்., குற்றம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை
அனுபவிக்கவே வேண்டும் .அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கவே முடியாது. ஆனால்
எந்த காரணம்கொண்டும் தவறே இழைக்காத ஆண்களானாலும் பெண்ளானாலும் சரி அவதூறை கொண்டு,அவர்களை உயிருடன் நடை பிணமாக்காதிருக்க
அவர்கள் மீது கருணை காட்டுவோம். இங்கே நாம் படைக்கப்பட்டது அடுத்தவரின் குறைகளை வெளிபடுத்துவதற்கு அல்ல...
எது உண்மை எது பொய் என்பதை பலகீனமான நாம்
அறியமாட்டோம். கேள்விபட்டதெல்லாம் வைத்து தீர்ப்பு
வழங்கும் அநீதியாளர்களாய் ஆவதிலிருந்து விலகி மனிதராக வாழ்வோம்.
படித்ததில் புடித்தது:கயல்விழி,பரந்தாமன்
No comments:
Post a Comment