சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!



வெள்ளித்திரையில் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாடிய டாப் மோஸ்ட் நடிகைகள், சின்னத்திரையையும் கலக்கத் தவறியதே இல்லை. அந்த வகையில் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் இன்றைக்கும் டிவி உலகின் வான்டட் நாயகிகள். இந்த இரண்டு பேரும் உதாரணம் மட்டுமே! மெகாத்தொடர் வரலாறு தொடங்கிய காலகட்டத்திலிருந்தே சினிமாவில் பல ரவுண்டுகளை முடித்துவிட்டு, டிவியிலும் ஒரு ரவுண்டு வருவதுதான் கதாநாயகிகளின் ஃபேஷன்...இன்றும் அது தொடர்கிறது. அவர்களில் சிலரைப் பற்றிய ஒரு குட்டி ரீகேப் இது!

சுகன்யா:

சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னைக் கடிக்குதா?’ என்று பிரபுதேவாவுடன் அதிரிபுதிரி நடனம் ஆடி சிட்டி ரசிகர்களையும், ‘முத்துமணி மாலை’ என்று கண்டாங்கி கொசுவப் புடவையுடன் கிராமத்து ரசிகர்களையும் ஒருசேரக் கவர்ந்த சுகன்யா, பரதநாட்டியத்திலும் கில்லி. சினிமாவில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர், அதிலிருந்து விலகியதும் கால் வைத்தது டிவி சீரியல்களில்.  சன் டி.வியில் ஒளிப்பரப்பான ‘ஆனந்தம்’ சீரியலுக்கு சிறுசுகளில் இருந்து மீசைகள் வரை ரசிகர்களாக இருந்தனர். ‘ஆனந்தம் இது ஆனந்தம்’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போதே  கணவர், குழந்தைகளை மறந்து சுகன்யாவை ரசிக்கத் தொடங்கியிருப்பார்கள் இல்லத்தரசிகள்.

தேவயானி:

டி.வி சீரியல்களில் ‘ப்ரைம் டைம்’ என்னும் ஹாட் சீட்டில் ஒளிபரப்பான சீரியல் ‘கோலங்கள்’. இதில் க்யூட்  அபியாக, வில்லன் ஆதிக்கு சவால் விடும் பிசினஸ் லேடி ‘அபிநயா’வாக நடித்திருந்தவர் ‘காதல் கோட்டை’யில் கமலியாகக் கலக்கிய அதே தேவயானிதான். ராஜகுமாரனை மணம் புரிந்த பிறகு சினிமாவுக்கு லீவு விட்டிருந்த தேவயானியின் முதல் ‘டிவி என்ட்ரி’ கோலங்கள் சீரியல். 1,500 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது இந்த சீரியல்.

பானுப்ரியா:

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று 80 மற்றும் 90-களில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர் பானுப்பிரியா. திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர், கணவருடனான பிரிவுக்குப் பின்னர் சீரியல் உலகில் பிஸியானார். ஏ.வி.எம்-ன் `வாழ்க்கை’ சீரியலில் சீதாவாக நடித்து அசத்தினார். நடிகர் சிவக்குமாருடன் அவர் இணைந்து நடித்த `பொறந்த வீடா புகுந்த வீடா’ திரைப்படம் அதே கதையுடன் சீரியலாக உருவெடுத்தபோது, அதிலும் ஹீரோயின் பானுப்ரியாதான். தற்போது பானுப்ரியா எடுத்திருக்கும் அவதாரம், `யமுனா’.

சீதா:

விசுவின் குடும்பம் சார்ந்த கதையாகட்டும், கமலின் தைரியமான கதாபாத்திரமாகட்டும், ரஜினியின் அல்ட்ரா மாடர்ன் பெண் கேரக்டராகட்டும் அத்தனையிலும் அசத்தக் கூடியவர் நடிகை சீதா. ஜோ-வுக்கு முன்பே தன்னுடைய குண்டு விழிகளால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். சினிமாவிற்கு முழுக்குப்போட்ட பிறகு சீரியலுக்குள் நுழைந்தார். ‘இதயம்’, ‘பெண்’ என்று அழகான, அன்பான மாமியாராகவும், வழிமாறி வந்து அடைக்கலம் கேட்ட பெண்ணுக்கு நல்ல தோழியாகவும் நடிப்பில் மிளிர்ந்தார். கூடவே, ‘வேலன்’ தொடரில் முருகனுக்கே அம்மாவான வேடம் என்று ‘ஹேப்பி டூ ஆக்ட் இன் சீரியல்’ என்றார் சீதா.

சிம்ரன்:

90களின் பிற்பாதியில் இளைஞர்களின் மனம்கவர்ந்த கனவுக்கன்னி. இடைக்காகவே பெயர் போனவர். மொழி தெரியாவிட்டாலும் நடனத்திலும் நடிப்பிலும் அத்தனை பேரையும் ரசிக்க வைத்தவர். பைலட் தீபக்குடனான திருமணத்துக்குப் பிறகு குழந்தை, குடும்பம் என்று செட்டில் ஆனவர் மீண்டும் டிவி உலகின் மூலமாக ரசிகர்களுக்காகத் திரும்பி வந்தார். ‘ஜாக்பாட்’ ஷோவில் குஷ்புவை ரீப்ளேஸ் செய்தவர், ‘சிம்ரன் திரை’, ‘அக்னிப் பறவை’ என சீரியல்களிலும் சூப்பர் சிம்ரனாக நடிப்பில் பின்னியெடுத்தார்.

ஸ்ரீப்ரியா:

பில்லா’வில் ரஜினிக்கே சவால் விட்ட கதாநாயகி ஸ்ரீப்ரியா. சினிமா கடலிலிருந்து ஒதுங்கி, சீரியல் கரையோரம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ பார்ட்-1ல் சின்னப் பாப்பாவாக காமெடி நடிப்பில் கலகல அட்ராசிட்டி செய்திருப்பார் ஸ்ரீப்ரியா.



பூர்ணிமா இந்திரஜித்:

இவர்களுக்கெல்லாம் நடுவில் இவர் யார் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம். மலையாள, தமிழ் சினிமாவில் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர் ப்ருத்வி ராஜின் அண்ணன் இந்திரஜித். அவரும் மலையாள சினிமாவில் டாப் நடிகர்தான். இந்திரஜித்தின் மனைவிதான் பூர்ணிமா இந்திரஜித். தமிழில் விஜய், ஷாலினி நடிப்பில் காதலர்களின் உலகில் நீங்கா இடம்பிடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினி தோழியாக ஒரு பெண் வருவாரே... அவரேதான். மலையாள சினிமா, திருமணம், குடும்பம் என்று செட்டிலானவர், தமிழில் ஒரே ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை தமிழ் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பவர்ஃபுல்லான கேரக்டர். ‘கோலங்கள்’ சீரியலில் ’மேனகா’ என்னும் பிசினஸ் பெண்ணாக, தேவயானிக்கே சவால் விட்டுக் கலக்கியிருப்பார் பூர்ணிமா. தற்போது மேடம் கேரளாவில் பாப்புலர் காஸ்ட்யூம் டிசைனர்.

இவர்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்திலிருந்த ஆச்சி மனோரமா, குஷ்பு, சோனியா அகர்வால், நளினி, சங்கவி, மீனா, விஜயலட்சுமி, உமா என்று முக்கால்வாசி ஹீரோயின்கள் டிவி சீரியல்களிலும் ஹீரோயின்களாக வலம் வந்துள்ளனர். சுஹாசினி, அமலா, ரேவதி, ஸ்ரீவித்யா என எல்லா டாப் நடிகைகளுக்குமே சினிமா தாய் வீடு... சீரியல் உலகம் புகுந்த வீடு!
-தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்.

No comments:

Post a Comment