செந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]


கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது

            கடை அருகாமையில் இருக்கிறது என்ற அடி தவறாகும். கடை அருகில் இருக்கிறது என்ற அடியே சரியாகும்.

பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்

            பொம்மை செய்ய முயற்சித்தான் என்று எழுதுவது தவறாகும். முயற்சித்தல் என்ற சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுதல் சரியாகும்.

அலமேல் மங்கை - அலர்மேல் மங்கை

            அலர்மேல் மங்கை என்று வருவதே சரியாகும். (அலர் : பூ ) பூவின் மேல் அமர்ந்திருக்கின்ற மங்கை

நாட்கள் - நாள்கள்

   கால்கள் என்ற சொல்லைக் காற்கள் என்று எழுதுவதில்லை. எனவே நாட்கள், நூற்கள், தொழிற்கள,; ஆகிய சொற்களை நாள்கள், நூல்கள், தொழில்கள்; எனறே எழுதுக.

எந்தன் - என்றன்

            எந்தன் என்று எழுதுவது தவறாகும். என்  தன்  என்றன் என்று புணரும். (என் - ஒருமை, தன் - ஒருமை,) எம்  தம்  எந்தம் என்று புணரும். (எம் - பன்மை, தம் - பன்மை,) எந்தன் என்பதில் (எம் - பன்மை, தன் - ஒருமை, இது தவறான புணர்ச்சியாகும்

சாற்றுக்கவி - சாற்றுகவி

            சாற்றுக்கவி என்று 'க்' மிகுத்து எழுதுதல் தவறாகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும். ஆனால் சாற்றுகவி என்பது வினைத் தொகையாகும், வினைத் தொகையில் வல்லினம் மிகா, வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து வினைத்தொகையாக வந்தால் வல்லினம் மிகாமல் எழுதுதல் மரபாகும். பாரதியார் எழுதிய விநாயகர் நான்மணி மாலையில் முதலடியில் 'பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்'  என மிகாமல் இருப்பதைக் காண்க.

கொக்குப் பறந்தது - கொக்கு பறந்தது

            கொக்கு என்ற சொல் வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.  வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும்.  வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து எழுவாய்த் தொடராக வந்தால் வல்லினம் மிகா. கொக்கு பறந்தது என்பது எழுவாய்த் தொடராகும். ஏனவே கொக்குப் பறந்தது என எழுதுதல் தவறாகும்.

பாப் படைத்தான் - பா படைத்தான்

            ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும். (தீச்சுடர், நாப்பழக்கம்,) ''பா'' ஓரெழுத்து ஒரு மொழிதான், ஆனால் பா படைத்தான் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகா. ஓரெழுத்து ஒரு மொழியாக இருந்து, இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரின், வல்லினம் மிகா. எனவே பாபடைத்தான் என்பதே சரியாகும்.


வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்

            வறுமைகளை ஒழிப்போம் என்பது தவறாகும். வறுமையை ஒழிப்போம் என்று எழுதுக. (வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது, (புல், நீர் தாகம், ஆகியவற்றிற்கும் பன்மை கிடையாது) ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும், ஆடுகள் புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறாகும், பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்பது சரியாகும். நண்பர்களின் தாகங்களை நீக்கினேன என்பது தவறாகும,; நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.

மனதை - மனத்தை

            மனதை என்று எழுதுவது தவறாகும். மனம்  ஐ  மனத்தை என்றே வரும். பணம்  ஐ  பணத்தை என்றே வரும். பணதை என்று வாரா.. தனம், வனம், சினம், கனம், இனம், குணம், பிணம்,  ஆகிய சொற்களுடன் ஐ சேர்ந்தால் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, குணத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும். தனதை, வனதை, இனதை, குணதை,,, என எழுதமாட்டோம். எனவே மனத்தை என்று எழுதுக
                                                             (அடுத்த வாரம் தொடரும்)
நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் 

👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக...
 Theebam.com: செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]:

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
 
Theebam.com: செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]

No comments:

Post a Comment