வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு?


சமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி  இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர்களைப் புகழ்ந்து  'வந்தாரை வாழவைக்கும் / வரவேற்கும் தமிழ் நாடு' என்று தமிழ் இரசிகர் கூட்டத்தினரைப்   பாராட்டிப் பெருமைப் படுத்தினார்கள் அங்குள்ள நடுவர்கள்.

இது தமிழனுக்கு உண்மைலேயில் பெருமைதானா என்பதுதான் கேட்கப்படவேண்டிய ஒரு கேள்வி.

ஒரு பிற மாநிலத்தவன் கஷ்டத்தில் வந்து உதவி கேட்க்கும்போது அவனை அரவணைத்து, புகலிடம் கொடுத்து, உணவும் கொடுத்து, அவனுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் குணம் தமிழனுக்கு உண்டு. இதை 'வந்தாரை வாழ வைப்பது'  என்று என்று ஏற்றுக்கொள்ளலாம். அதில் அவனுக்கு ஒரு பெருமையும் இருக்கின்றது.

ஆனால், இப்படியான இசைப்போட்டிகளில், பெரும்பாலும் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் அதிகமாக வந்து பங்கு பற்றி, தமிழ் வரிகளைத் தம் மொழிகளில் எழுதி, மனனம் செய்து, பொருளே விளங்காது பாடி, கடைசியில் முதல் பரிசுகளையும் வென்று கொண்டு போகிறார்களே; இது எல்லாம் தமிழனுக்குப் பெருமையென்றா சொல்ல வேண்டும்? இது தமிழனின் இயலாமையும், திறமை இன்மையையும்,  ஆற்றல் குறைவையும் அல்லவா மறை முகமாகப் பறை சாற்றுகின்றது!

அவர்களால் முடிந்தது, மொழி தெரிந்த நம்மவர்களால் இயலாமல் போய் விட்டதே!

அதுமட்டுமல்ல, அங்கு தீர்ப்புச் சொல்லும் நடுவர்களுமே பெரும்பாலும் பிற மாநிலத்தவர்களே!
தமிழன், அன்று தொடக்கம் இன்று வரை பிற மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பழகி விட்டான். அதை பெருமை என்று கூறிக்கொள்ளவும் பழகி விட்டான்!

தமிழனை, பலகாலமாக வேற்று மொழியினர் ஆண்டார்கள்; ஆனால் வீரத் தமிழன் என்று பேசிக் கொள்வானாம்!

தமிழ் திரை இசை பாடகர்கள் பிற மாநிலத்தவர்கள்தான் கொடிகட்டிப் பறக்கின்றார்கள். தமிழனால் இயலாதாம்!

பிரபல பிற மாநில நடிகர்கள் பலரும் நம்மை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள்;  நம்மவர் திறமை மிகக் குறைவாம்!

நடிகைகள்? சொல்லவே வேண்டாம்! நம்மவர்களில் அழகானவர்களே இல்லையாம்! மொழி தெரியாத, வெள்ளைத் தோலினர்  வந்து வாயை அசைத்தாலே போதுமாம்!

இவை எல்லாம் ஏன்? நம் முதல் அமைச்சர்களாகக் கூடி பிற மொழி பேசுவோர் வரமுடியும்; நம்மவர்கள் பின்னால் நின்று கும்புடு போட வேண்டுமாம்!

ஆனால் கேட்கின்றேன்;
ஒரு தமிழன், பிற மாநிலத்தில்  போய் பாடி முதல் பரிசினைத் தட்டிக் கொண்டு வர முடியுமா? 
ஒரு தமிழன் பிற மாநில முதல் அமைச்சர் ஆக முடியமா?
ஒரு தமிழன் பிற மாநில பெரும் நடிகர் ஆக முடியுமா?
ஒரு தமிழன் பிற மாநில அதி உயர் பதவி ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
ஒரு தமிழன், இந்தியாவின் பிரதமராக வரத்தான் முடியுமா?
முடியாது!

ஏனென்றால், 
எல்லை தாண்டி தமிழன் போனால் சட்டம், நியாயம் இன்றிச் சுட்டுத் தள்ளுகின்றார்கள்!
அங்கு வாழும் தமிழரைக் காலத்துக்கு காலம் கலவரம் செய்து, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்!
தமிழனுக்கு வரவேண்டிய இயற்கை வளங்கள் எல்லாவற்றையும் சுற்றி வளைத்து முடக்குகிறார்கள்!
தமிழன் அங்கு சென்று நீதி கேட்டு, அகிம்சைப் போராடடம் நடத்தினாலும் கேவலமாக அலட்சியம்  செய்கிறார்கள்!
என்பதால்.

எந்தத் துறையில் என்றாலும், தமிழ் பேசினால், தமிழனாய் இருந்தால், தமிழன் தலைவனாக முயன்றால் தமிழன் மதிப்பதில்லை. இது பிற மாநிலத்தவர்களுக்கு நம்மை ஆக்கிரமிக்க மிகவும் இலகுவாகப் போய் விட்டது.

தமிழன் ஆங்கிலம் மோகம் கொண்டு ஆங்கிலத்தில் படிப்பது, ஆங்கிலத்தில் கதைப்பது, ஆங்கில வாழ்வு வாழ்வது என்று இருப்பதால் தமிழ் உணர்வு குன்றிவிட்ட்து. யார் வந்து என்ன செய்துவிட்டும் போகட்டும் என்ற மனப்பான்மை பெருகிவிட்டதால் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ் நாடு ஒரு கோட்டையாகி  விட்ட்து. 

இதனால் தமிழ்நாடு பெருமையா பட வேண்டும்? அவமானமாகவே உணர்தல் வேண்டும்.

இப்படியே போனால்?
மெல்லத் தமிழ் இனி ................?
மெல்லத் தமிழ் நாடு இனி .........?

-செல்வதுரை,சந்திரகாசன்.

0 comments:

Post a Comment