நாளாந்தம் இந்தியாவிலிருந்து படை எடுத்து வந்து, தங்களைப் பிரபல சாத்திரப் பண்டிதர்கள் என்று பிரஸ்தாபித்து, புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து வசூலித்த பெருந்தொகைப் பணத்துடன் வீடு திரும்பும் இவர்களிடம், ஏன்தான் எம்மவர்கள் தொடர்ந்தும் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள்?
நான், இந்த சாத்திரத் துறையில் என்னதான் இருக்கிறது என்று ஆராய்ந்து அறிவதற்காக, இக்கலைதனை ஆழமாய்க் கற்றுணர்ந்து, அதன்பின் பல சாத்திரிமார்கள் உலகின் பிரபலங்கள் பற்றிய முன்-பின் கூறல்கள் பற்றி எழுதியவை எல்லாவற்றையும் அலசிப்பார்த்து விட்டேன். முடிவு? உலகின் எந்தவொரு சாத்திரியும், என்னவொரு நிகழ்வையும் சரியாகச் சொல்லவே இல்லை! அப்படிச் சொன்னபடி நடைபெறாதவை எவைக்கும், பின்னர் ஏன் அப்படியானது என்று கிரக நிலைகளைக் காட்டி நியாயப் படுத்துவதுதான் வழக்கமாய் இருக்கிறது.
அத்தோடு, அவர்கள் பலன் கூறும்போது வழக்கமாக குழப்பியும், ஒரு பிடி வைத்தும் சொல்வார்கள்:- " நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் நல்ல பலனை உங்களுக்குத் தருவதில்லை. குருபகவான் 2 வது பாவத்தில் இருந்து, 2 வது பாவாதிபதி திரிகோணத்தில் சுக்கிரனோடு சேர்ந்து இருப்பதால் உங்களுக்கு ஆறு மாதத்திலிருந்து பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறது. ஆனால், சனியானவன் செவ்வாயோடு சேர்ந்து குருவைப் பார்ப்பதால் அதை அவன் தடுத்துக்கொண்டே இருப்பான். இதற்கு, நீங்கள் வெள்ளிக்கிழமைதோறும் விரதமிருந்து, சனி நீராடி, சனிபகவானுக்கு விளக்கெண்ணை ஏற்றி விரதம் முறைப்படி அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடக்கும்".பாருங்கள்! அவரின் பல நிபந்தனைகள், இடைத்தடங்கல்கள்,எதிர்ப்புகள், முறைமைகள் என்று பலவற்றைத் தாண்டினால்தான் முடிவு என்னவென்று தெரியும். ஜோசியுங்கள்! இது சாத்திரமா? அப்படி எல்லாம் நாம் செய்து பலனை மாற்றலாம் என்றால்என்றால் சாத்திரம் என்பது எப்பவும் மாறிக்கொண்டே போகுமா?
அக்கால, பல்பரிமாண நோக்கு, பல்புலணறிவு கொண்ட பல அறிஞர்கள் வானியல் சாத்திரம் பற்றி நுணுக்கமாக எழுதியுள்ளனர். அதேபோல, திரிகாலமும் உணர்ந்த ஞானிகள் பலர் வரும்காலம் பற்றியும் கூறக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள். யாரோ, எப்பவோ அப்படியே சரியாகப் பிற்காலம் பற்றிக் கூறினார்கள் என்பதைச் சாட்டாக வைத்துக்கொண்டு, சாத்திரம் என்ற பெயரில், துன்பத்தின் உச்சியில் இருக்கும் அப்பாவி மக்களின் விடிவை நோக்கிய ஏக்கத்தினை, தமக்கு சாதகமாக்கி, அவர்களிடம் பணம் பறிக்கப் பல சாத்திரிமார் அலைகிறார்கள்.
ஒரு சிலர், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகளால் எழுதப்பட்ட காண்டம் ஓலைச்சுவடிகள் என்று கூறிக்கொண்டு, ஒரு 50 பனை ஓலைகளை ஒரு சிறு கட்டாக வைத்திருந்து, அதுதான் அந்த மூல ஒலை என்றும், அந்த ஓலையிலே, உலகில் இதுவரை காலமும் வாழ்ந்த, இப்பொது வாழும், இனிமேல் வாழப்போகும் எண்ணற்ற மனிதகுலம் அனைவரதும் பூரண சரித்திரமும் அடங்கியிருப்பதாகச் சொல்ல, அதை நம்பி வரும் ஏமாளிகள் நூற்றுக்கணக்கான வெள்ளிகளை அவர்களுக்கு இளக்குவதைப் பார்க்கக் கண்ணிறாவியாய் இருக்கிறது. அதுமட்டுமில்லை, மூட நம்பிக்கை கொண்ட பழைய காலத்தில் இருந்து, தற்போது முற்றாகவே இல்லாமல் போன பேய், பிசாசு, பில்லி, சூனியம், வசியம் என்று எல்லாவற்றையும் திரும்பவும் கொண்டுவந்து, அவற்றை ஒழிப்பதற்கு வைர,இரத்தின, மாணிக்க கற்களும், வளையல்களும் அணியுமாறு அவற்றை விலைபப்படுத்தி, தங்கள் வருமானத்தை மேலும் அதிகப் படுத்துகின்றார்கள். இவற்றை எல்லாம் செய்து உங்களுக்கு நடக்கப்போவதை மாற்றினீர்கள் என்றால், அந்த ஓலையில் அல்லது சாத்திரத்தில் உங்களைப் பற்றிய எழுத்து இப்போது தானாகவே மாற்றப்பட்டு இருக்குமா?
கேரளத்தில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்த மனோதத்துவர்,சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளர் ஆபிரஹாம் கோவூர் என்பவர், உலகில் உள்ள சகல சாத்திரிமார், சாமிமார், பாதிரிமார், அல்லது வேறு எவருக்கும் ஒரு அறைகூவல் விடுத்தார். எவராவது அவர்கள் நிகழ்த்துவதாகக் கூறும் அதிசங்கள், அற்புதங்கள், முடம் நீக்கல்,பிணி நீக்கல், ஊமை பேசுதல், பொருள் உருவாக்கல் என்று எந்த விதமான அசாத்திய திறமைகள் எதையாவது தனக்கு முன்னால் செய்து நிறுவிக் காடினால், உடனேயே அவர் வங்கியில் வைத்திருக்கும் ஒரு லட்சம் (1963இலங்கை) ரூபாவையும் அவருக்கு வழங்குவதாகப் பகிரங்க அறிவிப்பு விடுத்தார். பலர் வந்து மண் கவ்விச் சென்றார்கள். சிலர், தங்கள் சாயம் வெளுத்துவிடும் என்று அவர்பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை. சில பெரிய சாமிகள், அவர் ஒரு அற்பப் பதர் என்று தங்களை உயர்த்திக் கொண்டனர்.
ஒரு பிழையான கொள்கையானது, உலகில் பலராலும் நம்பப்படுவதாலோ, அல்லது மூதாதையர் காலத்திலிருந்து பின்பற்றுப்படுவது என்ற காரணத்தினாலோ அது சரியாக இருக்க வேண்டும் என்று வாதிப்பது எவ்வளவு அறிவீனம்! அவர்கள், கிரகங்கள் என்று கூறுவதில் 5 தான் உண்மையான கிரகங்கள்.ஒன்று சூரியன், மற்றது சந்திரன்,மீதி இரண்டும் இல்லாத கிரகங்கள். அத்தோடு கிரகங்களும், நட்சத்திரங்களும் எமக்குப் புலப்படும் இடங்களுக்கும், அவை உண்மையிலே நிலைகொண்டிருக்கும் இடங்களும் வேறு வேறு.
எங்கோ இருக்கும் இந்தக் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒருபோதும், எந்தவித தாக்கத்தையும் எமக்கு ஏற்படுத்தாது.அங்கு ஒரு மின்காந்த விசைகளும் இல்லை. ஈர்ப்பு விசைகளோ அவை மிகத் தூரத்தில் இருப்பதால் பூமியைப் பாதிக்காது. அப்படி என்றால், இன்னும் அருகில் இருக்கும் லட்சக்கணக்கான விண்கற்கள்,கூடிய ஈர்ப்பு விசைகளிக் கொண்டிருப்பதால் அவற்றையும் சாத்திரத்தில் சேர்த்திருக்கலாமே!சரி, அப்படித்தான் இவை எங்களைத் தாக்கும் என்றால், அது உலக ஜீவராசிகளை ஒரேமாதிரி அல்லாவா பாதிக்கவேண்டும்! என் வேறு வேறு விதமமான விளைவுகளை உண்டாக்க வேண்டும்?
அதுசரி சிந்தியுங்கள்! ஒரே நாளில் போரின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும் ஒரு லட்சம் மக்கள் இறக்கும் தருணத்தில், இவர்களுக்கெல்லாம் அன்று ஒரேயடியாகச் சாவு வரும் என்று எல்லோருடைய சாத்திரத்திலும் ஒட்டுமொத்தமாகக் கூறப்பட்டுள்ளதா?அல்லது, திடுதிப்பென்று, மரணம் தரும் கிரகங்கள் எல்லாம்,இரவோடு இரவாக இடம் மாறி அமர்ந்து கொண்டார்களா?
மக்களே, கொஞ்சம் உங்கள் பொது அறிவைப் பாவியுங்கள்! இந்தச் சாத்திரிமார் எத்தனையோ பேர் தங்கள் சொந்த வாழ்வையே சரியாகக் கணிக்காது தாழ்ந்தார்கள்! தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் வாழ்வையும் பிழையாகச் சொல்லிக் கோட்டை விட்டவர்கள்! பெரும் பெரும் கடவுள் என வணங்கப்பட்டோரே தங்கள் உடல்நலக் குறைபாடுகளையோ, பிணிகள் மற்றும் இறப்பு தொடர்பாகவோ கணிக்க முடியாமல் இருக்கும்போது இந்தச் சாத்திரிமார் மட்டும் என்னவிதத்தில்தான் உங்களுக்கு உதவப் போகிறார்கள்?
இவர்கள் எல்லாம் தங்கள், தங்கள் வாழ்வுக்குச் செல்வம்தேடியே உலகம் சுற்றி வருகிறார்களே ஒழிய உங்களை வளமுடன் வாழ வைக்க வழிசொல்ல அல்ல!
ஆகவே, உங்கள் பணத்தை இந்த பொய்யர்களிடம் கொடுத்து ஏமாறாதீர்கள்!
………… ஆக்கம்:செல்லத்துரை சந்திரகாசன்
No comments:
Post a Comment