ஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன?[பகுதி 03]
[பகுதி
01]அலுவலகத்தில் பழகுதல்
[பகுதி
02]கல்லூரியில் நமது வாழ்க்கை
[பகுதி
03]சமூகத்தில் பழகுதல்
வேறு சில ஆலோசனைகள்
சமூகத்தில் பழகுதல்
நாம், நமது சமூகத்துடன் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்து, நமது தனித்தன்மை முடிவு செய்யப்படுகிறது. நேர்மறை எண்ணம் கொண்ட, பிறரிடம் எளிதாக பழகத்தக்க மற்றும் சந்தோஷமான மனிதர்களை, இந்த சமூகம் எப்போதுமே விரும்பும்.
பொதுவாக, நமது சிந்தனையுடன் ஒத்த சிந்தனையுள்ள நபர்களுடன், நாம் பிறரைவிட அதிகம் பேசுவோம். பிறருடன் பேசும்போது, உங்களின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல, உங்களின் உடல் மொழியிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தகவல்தொடர்பில், 60% முதல் 80% வரையிலானவை, வார்த்தைகளற்றவை என்றே உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பாகவே, தங்களின்பால் கவனத்தை ஈர்க்கக்கூடிய நபர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். அதுபோன்ற நபர்கள், ஒருவார்த்தைக்கூட பேசாமலேயே, தங்களின் செய்தியை பிறருக்கு தெரிவித்து விடுவார்கள்.
நாம், வாயைத் திறந்து வார்த்தைகளை வெளிப்படுத்தும் முன்னதாகவே, நாம் எந்த வார்த்தைகளை, எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருப்போம். சிறப்பான தகவல்தொடர்புக்கு, ஒரு மொழியுடன் நல்ல அறிமுகம் இருப்பதும் முக்கியம்.
ஒரு தனிமனிதரைப் பற்றியோ அல்லது ஒரு சமூகத்தைப் பற்றியோ, மோசமான எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிப்போரையோ அல்லது தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்போரையோ, பொதுவாகவே, இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இதன் அர்த்தம், நீங்கள் எதையுமே விமர்சிக்கவோ அல்லது உங்களின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது என்பதல்ல. விமர்சிக்கும் விதம்தான் இங்கே கவனிக்கத்தக்கது.
(சமூகத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு சரியானதாகக்கூட இருக்கலாம். ஏனெனில், பொதுவாக, ஒரு சமூகத்தில், சரியானவை 20% இருந்தால், தவறானவை 80% இருக்கின்றன. ஆனால், என்ன செய்வது? எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே?) உங்களின் விமர்சனமோ அல்லது சொந்தக் கருத்தோ, ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒரு தனிப்பட்ட நபரை காயப்படுத்துவதாக இருந்தால், நீங்கள் விமர்சனம் செய்யாமலும், கருத்து சொல்லாமலும் இருப்பதே நல்லது.
வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நட்பு வட்டம், கண்ணியமானதாயும், வாழ்வில் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கட்டும்.
வேறு சில ஆலோசனைகள்
நம்பிக்கையுடன் இருத்தல்
பேசும்போது தடுமாறியோ அல்லது தயங்கி தயங்கியோ பேசுவதானது, நீங்கள் போதுமான நம்பிக்கையுடன் இல்லை என்பதை வெளிக்காட்டும். ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுவிட்டு, நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை ஒருமுறை தெளிவாக யோசித்து, அதன்பிறகு, உங்களுடைய உலகிற்குள் பிரவேசியுங்கள்.
கொஞ்சம் மகிழ்ச்சி
பேசும்போது, சிறுசிறு நயமான நகைச்சுவைகள், உங்களின் உரையாடலை சுவையாக்குவதோடு, தனிப்படுத்தியும் காட்டும். நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த நபரை, முடிந்தளவு சிரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்ட முயற்சிக்கவும்.
தனிப்பட்ட நன்மைக்காக அல்ல
ஒரு நபருடன் பழகத் தொடங்குகையில், அவரால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பழகக்கூடாது. மாறாக, ஒரு உண்மையான நட்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
மென்மையாக இருத்தல்
நீங்கள் சந்திக்கும் நபர்களிடம், முடிந்தளவு மென்மையானவராகவும், இனிமையானவராகவும் இருக்க முயலுங்கள். இதன்மூலம், நீங்கள் பலராலும் விரும்பத்தக்கவராகவும், பலரின் ஆதரவைப் பெற்றவராகவும் திகழ்வீர்கள். இதுமட்டுமின்றி, எளிதில் அணுகக்கூடிய நபராகவும் இருப்பீர்கள்.
நல்ல உடை
உங்களின் பழகும் மற்றும் பேசும் விதங்கள், உங்களின் மதிப்பு மற்றும் நட்பு வட்டத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்தாலும், உங்களின் உடைக்கும் கணிசமான பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம். எனவே, முடிந்தளவு நன்றாக உடையணியவும்.
ஆதாரம் : துடி இயக்கம், சென்னை [நன்றி:vigaspediya]
No comments:
Post a Comment