தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:03‏



"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்"  


என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது.ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன்.என்றாலும் இது  பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று.ஆமாம்.‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள்,முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார்  பயாலஜி’['the Centre for Cellular and Molecular Biology /Hyderabad] ஆய்வு மையத்தினர். இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது.இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில்  ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!.உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே என்கின்றனர்.இப்போதைக்கு இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை
வெளியிட்டுள்ளார்.




அது மட்டும் அல்ல,2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 51 அன்றே இந்த தமிழனின் சிறப்பை உறுதிப்படுத்துவது போல பாடுகிறது.



"நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
10 செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே."
புறநானூறு 51,

நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை
[அணைக்கட்டுவை பற்றி அப்பவே அவனுக்கு தெரிந்து உள்ளது] ; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை[இன்றும் காட்டு தீயின் அழிவை அறியாதவர்கள் இல்லை.அதுமட்டும் அல்ல அதற்கான பாதுகாப்பு இந்த நவீன உலகிலும் இன்னும் இல்லை]; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை[இன்று எந்த நேரமும் வானொலி,தொலை காட்சி செய்தி இவைகளே] நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு [தமிழ் நாடு எவ்வளவு வீரத்திலும் வாழ்க்கையிலும் அன்றே முன்னேறி இருந்தது என்பதை கவனிக்க]மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான்.அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர்.ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில்,  தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது இன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.[மரபனு குறியீடு ஆய்வுகள் ] 


"குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை
மயில் நடம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை
உயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை"

என்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும்.அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம்,ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம்.

-[கந்தையா, தில்லைவிநாயக லிங்கம்]


1 comment:

  1. வணக்கம்!
    கல் தோன்றி .......என்ற அடியின் பொருள் கல் எனும் கல்வி ேதான்ற முன்பு ,மண் இல்லை மன் எனும் மன்னராட்சி. ேதான்ற முன் தோன்றிய தமிழ் என .........

    ReplyDelete