ஏமாந்துகொண்டே இருப்போம்,இந்த உயிர் உள்ளவரை..

ஏமாற்றாதே ஏமாற்றாதே 
ஏமாறாதே ஏமாறாதே -கவிஞர் கண்ணதாசன்




ஆபிரஹாம் கோவூர்:மூட நம்பிக்கைகளை ஒழிக்கப் போராடியவர்.

காலம், காலமாக மனிதன் ஊறிப்போய் இருக்கும் கடவுள், சாத்திரம், பேய், பிசாசு, செய்வினை, சூனியம் போன்ற பலவிதமான மூட நம்பிக்கைகளை எதிர்த்து, வாதிட்டு, நிறுவி, மனித குலத்திற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றிய ஒரு பகுத்தறிவாளர்தான் ஆபிரஹாம் கோவூர்.

இவர் கேரளாவில் 1898  இல் பிறந்து, விலங்கு-தாவர இயலில் கலாநிதி பட்டம்  பெற்றாலும், அவருடைய சுயமான சிந்தனை எல்லாம் மன - உளவியல் நோய்கள், ஆன்மீக அற்புதங்கள் சம்பந்தமான உண்மைகளைக் கண்டறியும் திசையிலேயே சென்றது. 

இவர்   இலங்கையைத் தன் வதிவிடமாகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் எண்ணுக்கடங்கா மக்களுக்கு அவர்களுக்குப் 'பிடித்திருந்த'  பேய், பிசாசுகள், மாந்திரிகம், செய்வினை, சூனியம் எல்லாவற்றையும், அவற்றுக்கான உண்மையான உளவியல், மனோதத்துவ ரீதியான காரணங்களைக் கண்டு பிடித்துச் சுபமாக்கினார்.

சாத்திரம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பணம் பண்ணும் சாத்திரிமார் பலரை நேருக்கு நேர் போட்டி வைத்து, அவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று நிறுவி நிலை நாட்டினார்.

தாம் கடவுள்கள், கடவுளின் அவதாரங்கள், மைந்தர்கள், தூதர்கள், மகான்கள், சுவாமிகள், அமானுஷ சக்தி உடையவர்கள் என்று கூறுபவர்கள் எல்லோரையும் ஏமாற்றுக்காரர்கள், பொய்யர்கள், மூளைக் கோளாறு கொண்டவர்கள்  என்று சவால் விட்டு, தன்னாலும் அவர்களைப்போல்  'அற்புதங்கள்' செய்ய முடியும் என்று சவால் விட்டார். 

ஆவிகளுடன் கதைப்போர்களையும் சாடினார். ஆவிகள் பற்றி பெரிய ஆராய்ச்சிகள் செய்து மக்களுக்கு பகுத்தறிவினை ஊட்டினார்.  மனிதனின் பலவீனத்தினைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் பேய்களின் நாடகம்தான் இது என்று புரிய வைத்தார்.

அப்படியான  அபூர்வ சக்தி கொண்ட எல்லாக் கடவுள்மார்,  சாமிமார்கள், சாத்திரிமார்கள், மாந்திரீகர்கள், சூப்பர் ஹீரோக்கள் எல்லோருக்கும் கோவூர் நேராக ஒரு திறந்த சவால் விட்டார்.1963 இல் ஓரு வங்கியில் ஓரு இலட்சம் இலங்கை ரூபாவை (இப்போதய மதிப்பு ஓரு கோடிக்கு மேல்!) இட்டு, எவராவது தனக்கு முன்னால், பின்வரும் அற்புதங்களில் ஏதாவது ஒன்றையாவது செய்து காட்டினால் அப்பணம் அவர்களுக்குப் போய்ச் சேரும் என்றார். அவர் 80  வயதில் இறக்கும்வரை ஒருவராலும் அதை வெல்ல முடியவில்லை. 

கோவூர் இட்ட அந்தச் சின்ன 'அற்புத'  சவால்கள் இவைதான்:

- உறையில் உள்ள ஒரு நாணயத்தாளின் வரிசை எண்ணை சொல்லுதல்.
- ஒரு நாணயத்தாள் போல இன்னொரு பிரதி உருவாக்குதல்.
- அரை நிமிடம் நெருப்பில் நின்று புண் இல்லாது வெளியில் வருதல்.
-  கேட்கும் ஒரு பொருளை உண்டாக்கிக் காட்டுதல்.
-  ஒரு பொருளை அசைத்து அல்லது வளைத்து காட்டுதல்.
-  ஒருவர் மனதில் நினைப்பதை வெளியில் எடுத்துக் கூறுதல்.
-  நோய் ஒன்றைத் தீர்த்தல்.
- காற்றில் மிதந்து நிற்றல்.
- இதயத்தை ஐந்து நிமிடம் நிறுத்தல்.
- மூச்சை 30  நிமிடம் நிறுத்தல்.
- உடம்பை இங்கு மறைத்து அங்கு தோன்றல்.
- நீர் மேல் நடத்தல்.
- எதிர்காலம் நடப்பது ஒன்றைச் சொல்லல்.
- சக்தியால் பேரறிவு அடையச் செய்தல்.
- இன்னொரு மொழி பேசுதல், புரிதல்.
- பேய், கடவுள் யாராவது ஒருவரின் புகைப் படம் பிடித்துக் காட்டுதல்.
- படம் பிடித்தால் அதில் அகப்படாது தப்புதல்.
 -பூட்டிய அறையில் இருந்து வெளியே வருதல்.
- ஓரு பொருளின் நிறையைக் கூட்டுதல்.
- ஒழித்து வைத்த பொருளைக் கண்டு பிடித்தல்.
- தண்ணீரைப் பெட்ரோல், அல்லது வைன் ஆக மாற்றுதல்.
- 10 பேரின் பிறந்த திகதி, இடம் கொடுத்தால் அவர்கள், ஆணா, பெண்ணா,  இருக்கின்றாரா, இறந்துவிட்டாரா என்று கூறுதல்.

ஆனால், ஐந்துக்கும், பத்துக்கும் அலைந்து திரிந்து, அப்பாவி மக்களை உறிஞ்சித் திரியும் முதுகெலும்பில்லாத எவருமே இவ்வளவு பெரிய தொகையை வெல்ல முடியவே இல்லை. வேறு சிலர், தம் முகமூடி  கிழிந்து விடும் என்று கோவூரின் நேரடிச் சவாலை முகம் கொடுத்து ஏற்காது ஓடி ஒளிந்து கொண்டார்கள். 

வேறு சிலர், தாம் இப்படியான சோதனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட  பெரு மஹான்கள் என்று தங்களைத் தாங்களே  உயர்த்தி வைத்துக் கொண்டு, கோவூர் ஓர் அற்பப் பதர், ஒன்றும் புரியாதவர் என்று அவரைச் சிறியவனாக அலட்சியப்படுத்தி,  தங்களைச் சூழ்ந்து வருபவர்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.

ஏமாளிகள் ஏராளமாக இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் ஏராளமாக  ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். 

அதில் ஓரு மாற்றமும் வரப்போவது இல்லை.

-செல்வதுரை , சந்திரகாசன் 

No comments:

Post a Comment