எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24

எப்படி எழுத்து உண்டாக்கியது? என்பதற்கு, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, பெரும் பாலோர் கூறும் சாதகமான விளக்கம் தெய்வீக தோற்றம் என்பதே. அதனால் தான்  “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான “வெற்றிவேற்கை’’யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டு களுக்கு முன்பும் கூறிப்போந்தான். அதே போல கி மு 3100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பொது மக்களும் தமது முன்னைய காலத்தையும் அது போல இனி வரும் காலத்தையும் கடவுளே கட்டுப்படுத்துகிறார் என நம்பினார்கள். எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப்படுத்தியதாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு
வழங்கியதாகவும் நம்பினர். தமது ஆற்றலாலும் திறமையாலுமே உலகின் முதலாவது நாகரிகம் மலர்ச்சியுற்றது என்ற அறிவு விளக்கம் அவர்களிடம் அன்று இருக்கவில்லை. தமது தொழில் நுட்ப, சமுக வளர்ச்சி பற்றிய ஒரு உள்ளறிவு அவர்களிடம் இருக்க வில்லை .மத குரு மார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை அதற்கு தக்கதாக திரித்து இந்த தொழில் நுட்ப, சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால், ஆற்றலால், அறிவால், ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர். இதை மக்களும் நம்பினர்.இப்படித்தான் எமது வரலாறு தொடர்ந்தது. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே தான் எழுத்தின் கண்டு பிடிப்பும் அகர வரிசையின் தோற்றமும் கடவுளின் கைக்கு மாறி விட்டது!  அதே போலத் தான் பிராமண இந்து மதமும் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே! என்றும், எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே! என்றும் உரைக்கிறது.

உதாரணமாக, மகாபாரத்தை வேதவியாசர் எடுத்துரைத்தபோது, அந்த மகா காவியம் காலாகாலத் துக்கும் அழியாது அனைவரும் படித்துப் பேறுபெறும் பொருட்டு, விநாயகர் தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து, அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதினாராம்! என்கிறது. அதனை ஒப்பித்தல் போல,அருணகிரிநாதர், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே’ என பாடி போற்றுகிறார்.

பொதுவாக, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ, எல்லா பண்டைய சமூகமும், எழுத்து ஆண்டவனால் மனிதனுக்கு கொடுத்த கொடை என நம்பினர். ஆகவே எப்படி எழுதுவது என்பதை ஆண்டவனே மனிதனுக்கு படிப்பித்தான் என்கிறது.

உதாரணமாக, சுமேரிய காவியம், நிசப அல்லது நிடப [Nisaba / Nidaba]
என்று அழைக்கப் படும் பெண்தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும், ஈனன்னா/ இஸ்தார் பெண் தெய்வத்தை சொல்லின் தெய்வமாகவும் [Goddess of Words] கருதினார்கள்.அப்படியே  மாயர்களும்  [Mayan] , இட்சம்ன [Itzamna ] என்ற தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும் கருதினார்கள்.

அதே போல,நோர்சு தொன்மவியலில் (Norse mythology), ஒடின் [Odin] என்ற தெய்வம் ரூனிக் அகர வரிசையில் [runic alphabets] உள்ள ரூன்[rune] எழுத்துக்களை கண்டுபிடித்த தாகவும், எகிப்தின் புனித எழுத்துமுறையை [Egyptian hieroglyphs], தோத் [Thoth ] கடவுள் கண்டு பிடித்ததாகவும் , கிரேக்க அகர வரிசையை [Greek alphabet], ஹெர்மஸ் (ஹெர்மஸ்/ ரோமர்களின் மெர்க்குரி/ the Roman Mercury) என்ற கடவுள் கண்டு பிடித்ததாகவும், கருதினார்கள். இந்துக்கள்,மகா பாரத விநாயகர் கதையை தவிர, எழுத்தைப் பற்றிய அறிவை, மும்மூர்த்திகளுள் ஒருவரான, பிரம்மா மனிதர்களுக்கு கொண்டுவந்த தாகவும் ,சில வேலை,பெண் தெய்வம் சரஸ்வதியையும் குறிப்பிடு கிறார்கள்.  

பண்டைய மக்கள் ,எழுத்து முறைகளின் தோற்றத்தையோ அல்லது அதன் வளர்ச்சியையோ குறித்து வைக்கவில்லை. இதனால் அதைப் பற்றிய அறிவு ஒரு இடைவெளியாக, வெற்றிடமாக இருந்தது. இதனால், மத குருமார்கள் இந்த இடைவெளியை தந்திரமாக, தமக்கு சார்பாக பாவித்தார்கள். மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட , தெய்வீக ஆற்றல் ஒன்று, அல்லது கடவுளின் சக்தி அல்லது கடவுளே எழுத்தின் பிறப்பிற்கு மூல காரணம் என்றனர். அதுவே, அந்த நம்பிக்கையே இந்த விநாயகர்,பிரம்மா,சரஸ்வதி,நிசப அல்லது நிடப, ஈனன்னா/ இஸ்தார், ஒடின், தோத், ஹெர்மஸ் போன்ற கடவுள்கள் ஆகும். இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்!

இன்று அதிகமாக, எல்லா அறிஞர்களும் கணக்கியலில் இருந்து தான் எழுத்து உருவாக்கியதாக ஏற்றுக் கொள்கிறார்கள். எனினும், எகிப்து, இந்திய, மத்திய அமெரிக்கா போன்ற இடங்களில் போதுமான சான்றுகள் கிடைக்க வில்லை. அங்கு அவை அழிந்துபோகக்கூடிய பொருட்களில் வர்த்தக பதிவுகளை வைத்திருந்து இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது? இதற்கு மாறாக,கி மு நான்காம் ஆயிரம் ஆண்டில், சுமேரியர்களின் வர்த்தகம் மிக உச்ச நிலைக்கு போய், அதனால், அதை நிரந்தரமாக ஞாபகத்தில் வைத்திருக்க ஒரு வழியாக, களி மண் பலகையில் எழுத வேண்டிய அவசியம் வந்திருக்கலாம் என நம்பப் படு கிறது.அதனால் அங்கு எமக்கு பல ஆதாரங்கள்  இன்று கிடைக்கின்றன.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:25  தொடரும்

0 comments:

Post a Comment