எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:23

டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆப்பிரிக்காவிற்கு திரும்பவேண்டும். முன்னைய ஆப்பிரிக்க மக்களின் ஆதி  இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன், ஆசுத்திராலோ பித்தேக்கசு அஃபெரென்சிசு  [Australopitheus Afarensis] க்குப் பிறகே, ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா
மத்திய கிழக்கு,ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பின்,நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ்  [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன், மரபணு அடையாளம் காட்டி அல்லது குறியீடு M168 கொண்ட இவ் மனிதன், இரண்டாவது அலையாக ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது. இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன் இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். இவர்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு
மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இடம் பெயர்வு நடந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers], ஆப்ரிக்காவின் கடற்கரையோரமாக  தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் ஆகும். இந்த உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசுவாக, தமிழ் நாடு, உசிலம்பட்டியில் வாழ்ந்து
கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே என உலக மரபணு ஆய்வாளர்கள் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் [oxford university] கூடி அறிவித்து உள்ளார்கள். இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது!. இன்று இந்த  கடற்கரையோர அடையாளம் காட்டி, இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே.அவையும்
தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படு கின்றது. இறுதியாக, இவர்கள்  விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் குடியேறிய  முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்களின் வழித்தடம் - M130 (M168-M 130) ஆகும். 

இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில்  M9 ,40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த இந்து குஷ் (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத்தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக

பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று இந்து குஷ்ஷினது  வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோ சோம்மில் [chromosome/மரபணுச் சரம்/மரபணுத் தாங்கி]  திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M 20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில்  கணிசமான அளவு
இல்லை-மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத்தட்ட  50 சத வீதத்திற்கு அதிகமாக  உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த திட்டத்திற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள் . மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் [தமிழர்களின்] மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி,30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின்[Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து,அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின்
[Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள். இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை, முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். 650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை தமிழ் நாட்டை தமிழ்மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்து “திராவிடம் ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட [தமிழர்] வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது. இது இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு
ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கை துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலை செய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது  அதே போல சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம். ஒவ்வொரு மனித குழுவினதும் வரலாறு அவர்கள் எங்காவது ஓரிடத்தில் இருந்து ஒரு கால கட்டத்தில் வந்தவர்கள் என்பதை காட்டுகிறது. அத்துடன் ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித் துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.கலை, கலாச்சாரம், பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஆனால் சிலவேளை ஒரு இன குழு தாம் சேர்ந்த மற்றும் ஒரு மேலாதிக்க மக்கள் குழு ஒன்றின் மொழியை பேச முயலலாம். அது கால போக்கில் தமது மொழியை மறக்க ஏதுவாகலாம். அப்படி அவர்கள் வேற்று மொழியை பேசினாலும், இன்னும் தாம் ஒரு தனி இனம் என்றே நம்புகிறார்கள். இதனால் இப்ப உலகில் 10,500 இனக்குழுக்கள் இருப்பினும் ஆக 6700 மொழிகள் மாத்திரமே உண்டு. ஒவ்வொரு முறையும் ஒரு மனித கூட்டம் இடம் பெயரும் போது, அங்கு முன்னமே வாழ்ந்து கொண்டு இருக்கின்ற குடிமக்களுடன் திருமணம் செய்து கொள்வதும் அதே நேரத்தில் அவைகளுக்கு இடையில் முரண்பாடு நிகழ்வதும் வழமை என வரலாறு காட்டுகிறது. இதனால் வெற்றி கொண்டவர்கள் சண்டையால் மேலாதிக்கம் கொள்வதும் பின் நாளடைவில் பெருபாலான வேளைகளில் ஒற்றுமையாகி ஒன்றாவதும் உண்டு. இதனால் படிப்படியாக பழங்குடி யினரும் புது குடியினரும் ஒரு குடியினராக மாறுகின்றனர். இப்படித்தான் மரபுக் காட்டி எம் இருபதும்[M 20] எம் நூற்றி முப்பதும்[M 130] ஒன்றாகி இன்றைய திராவிட இனம் அல்லது தமிழ் இனம் தோன்றியது எனலாம்.

திராவிடன் அல்லது தமிழ் இனம் என்றால் என்ன?இது ஒரு பண்பாடா?,மொழியியல் குடும்பமா? அல்லது  ஒரு இனமா? இது எங்கு தோன்றியது?பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்திலா [Fertile Crescent]? அல்லது தென் இந்தியா விலா? எப்பொழுது தோன்றியது? 30,000 ஆண்டுகளுக்கு முன்பா,10,000 ஆண்டுகளுக்கு முன்பா அல்லது 4,000 ஆண்டு களுக்கு முன்பா? இன்னும் திராவிடர்களின் தோற்றுவாய் ஒரு குழுப்பமான, சிக்கலான ஒன்றாகவே வரலாற்றாசிரியர்களுக்கு இருக்கிறது. இந்தியாவின் பழமையான குடிகளின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என சில அறிஞர்கள் நம்புகிறார்கள். சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் சில அறிஞர்கள் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியாவிற்கு வந்தவர்கள் என வாதாடுகின்றனர். பாகிஸ்தானின்,பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இன்று பெருமளவில் புழங்கி வரும் பராஹவி மொழி (பிரஹுயி/Brahui language ] ஒரு திராவிட மொழி என்பதை கவனத்தில் கொள்க. மேலும் கிறிஸ்துவுக்கு முன்பே, தென் இந்தியா  திராவிடர்கள் தமக்கு என ஒரு தனித்துவமான பண்பாட்டையும் நாகரிகத்தையும் கொண்டு இருந்ததுடன், அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அரசையும் கொண்டிருந்தார்கள். சில திராவிட அரசர்கள் செல்வாக்கு மிக்க வெற்றிகரமான வர்த்தகத்தை முதலில் மேற்கு ஆசியாவுடனும் எகிப்துடனும் பின் கிரேக்கம்,ரோமனுடனும் வைத்திருந்தார்கள். இப்படி வர்த்தகம் வைத்திருந்தவர்கள் குறிப்பாக,சேர, சோழ, பாண்டிய என்னும் தமிழ் மூவேந்தர்கள் மற்றும் பல்லவ பேரரசுகள் [ கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்], தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள்,கலிங்கர் [கலிங்க நாடு.தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும்,ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு.], மகாராஷ்டிரா [மராட்டி,இவர்கள் கருநாடகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கி மகாராட்டிரத்தையும் ஆட்சி செய்தனர்.] ஆகும். தமிழ் மன்னன் பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கு வதாகச் சொல்லப்படுகின்றது. பாண்டிய நாடு கல்வியிலும்,வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக் காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க,ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஆரம்பகால தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது. இந்தோ ஆரியன் இந்தியாவிற்கு வருவதற்கு முன், திராவிட மொழி இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டதுடன் அதன் ஆதிக்கம் தெற்கிலும் வடக்கிலும் அதிகாரம் செலுத்தியது என கருதுவதற்கு நல்ல ஆதாரங்கள் உண்டு. திராவிட பண்பாடும் முதனிலைத் திராவிட மொழியும் பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்தின் கிழக்கு பகுதியில் தோன்றியது என்பது எமக்கு கிடைக்கும் சுமேரிய இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன. ஆகவே இது திராவிடரின் ஆரம்ப நாடாக இருக்கலாம் எனவும், திராவிட மொழி அங்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் பேசியிருக்கலாம் எனவும் விவாதிக்கப்படுகிறது .இந்த கருதுகோள் திராவிடர்கள், ஆரியர்கள் போலவே வெளியில் இருந்து ஆனால் ஆரியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரவேசித்தவர்கள் என சுட்டிக் காட்டுவதுடன், தென் இந்தியா திராவிடர்களின் ஆரம்ப இடம்  என்பதை கேள்விக் குறியாக்கிறது.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:24  தொடரும்

No comments:

Post a Comment