எம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல


எம்.ஜி.ஆரின் ஆத்திகம்

மறைந்த தலைவர்களில் பொன்மனச்செம்மல் மறக்க முடியாத மனிதராகிவிட்டார்.அவர் தொடர்பான கட்டுரைகளில்  சில ஊடகங்கள்  அவர் நாஸ்திகர் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றன.அவரின் உண்மையினை விளிக்காட்டுவதே இப்பக்கத்தின் நோக்கமாகும்.

தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறை மற்ற எந்தத் தலைவர்களிடமிருந்தும், நடிகர்களிடமிருந்தும் வித்தியாசமானதாகும்.
இதில் அவரது ஆன்மிக உணர்வுகளும் அடங்கும். அதை இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். தி.மு..வில் சேர்வதற்கு முன்பு ஆன்மீக வெளிப்பாடு, சேர்ந்த பின்பு நாத்திக வெளிப்பாடு. இரண்டிலுமே யாருடைய மனமும் புண்படாத வகையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். தி.மு..வை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு - . தி.மு..வை தொடங்கிய பின்பு எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயில் சென்றது- அதனால் எழுந்த விமர்சனங்களுக்கு எம்.ஜி.ஆரின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது என்பதையெல்லாம் ஆராய்ந்தால் - அவை வியப்பூட்டும் உண்மைகளாக இருக்கின்றன.
 'எம்.ஜி.ஆர். பொங்கல் பண்டிகையை மட்டும் விமரிசையாகக் கொண்டாடுவார். அன்று அனைவரையும் தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து பணமுடிப்பு தருவார். தன் பணியாளர்கள், நாடக மன்றத்தினருக்கு ஒரே மாதிரி வேஷ்டி-சட்டை, புடவைத்துணிகளைத் தருவார்' என்று நாம் நிறைய படித்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம். சரி, அவர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியதில்லையா? கொண்டாடியிருக்கிறார்! அது தி.மு..வில் சேருவதற்கு முன்!
 பேசத்தெரிந்த பருவம் முதலே எம்.ஜி.ஆருக்கு, தன் தாயார் சத்யபாமா மூலமாக கடவுள் நம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கிறது. நாடக கம்பெனியில் சேர்ந்தபோது அங்கு பொதுவான இறைவழிபாடு இருந்தது. அதனாலும் குருகுல நாடகப் பயிற்சி முறையாலும் எம்.ஜி.ஆர். பண்பட்ட நடிகராக மட்டுமின்றி, பண்பட்ட மனிதராகவும் வளர, மாற முடிந்தது.

மதுரை 'ஒரிஜினல் பாய்ஸ்' கம்பெனியில் நாடக நடிகராக - அந்த கம்பெனியிலுள்ள சக தோழர்களுடன் எம்.ஜி.ஆர். தீபாவளி கொண்டாடியிருக்கிறார். தீபாவளி சமயம் அம்மாவுடன் இருக்கும் வாய்ப்பிருந்தால் கேரள வழக்கப்படி கொண்டாடுவார். தீபாவளி சமயங்களில் சிறுவர்களுக்கே உரிய குதுகலம் எம்.ஜி.ஆரிடமும் இருந்திருக்கிறது- வாலிப வயது வரையில். அதாவது தி.மு..வில் சேரும்வரை எம்.ஜி.ஆரிடம் பண்டிகை ஜோர் இருந்தது. குடும்பத்தில் அண்ணன் சக்ரபாணியின் குழந்தைகளுக்கு, பண்டிகைக்காக புதுத்துணி, பட்டாசு வாங்குவதற்கு முயற்சிப்பார் எம்.ஜி.ஆர்.
 வால்டாக்ஸ் சாலையில் குடியிருந்தபோதும் சரி, அடையாறு காந்தி நகரில் குடியிருந்தபோதும் சரி, தீபாவளி கொண்டாட்டம் என்பது எம்.ஜி.ஆர். குடும்பத்தில் இருந்தது. பயந்த சுபாவமுள்ள அண்ணன் குழந்தைகள் பட்டாசு வெடிக்க தைரியமூட்டுவதற்காக, பட்டாசுகளை அவரே வெடித்துக் காட்டுவார். 1950-க்கு மேல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா காலமாகிவிட, அதனால் எம்.ஜி.ஆர். குடும்பத்தில் தீபாவளி இல்லை.
 1952-ல் எம்.ஜி.ஆர். தி.மு..வில் சேர்ந்தபின் தீபாவளிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லாமல் போனது.
 இது பற்றி எம்.ஜி.ஆர். 1968-ல் தி.மு. ஆட்சியின்போது பேசியிருக்கிறார். 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிர் பிழைத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின், நாடகமொன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய பேச்சு இது:
"நான் ஒரு நாத்திகன் என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான்.
 நமக்கெல்லாம் மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.

நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா? போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன்.
 மர்மயோகி' படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் முருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை.
 என்னுடன் நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.
 ஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம்.
 சற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம்.
 அவர், "உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்"... என்றார் அந்த நண்பர்.
 என் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது.
 'ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா?' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா?' என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா?
 எனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது."
 இப்படி எம்.ஜி.ஆர். பேசியதற்கு தி.மு.-விலிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆட்சிக்கு வந்தபின், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அண்ணா சமரசம் செய்துகொண்டு விட்ட சமயம் அது. தன மனதில் ஒரு கருத்து தோன்றிவிட்டால் அதன் முன்பின் விளைவுகளை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவே மாட்டார்.
 கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நம்புவராக எம்.ஜி.ஆர். எப்போதும் இருந்ததில்லை. முப்பது வயதிலேயே எழுபது வயது மனிதரின் ஞானம் பெற்றிருந்தார் அவர்.
 1952-ல் எம்.ஜிஆர். தி.மு.-வில் சேரும்வரை காந்தியவாதியாக கதர் உடை அணிந்து, கழுத்தில் துளசி மாலையும், நெற்றியில் பட்டையாக சந்தனமும் குங்குமமுமாக பக்திமயமாக இருப்பார்.
 முருகக்கடவுள், அம்மனின் மீது எம்.ஜிஆருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜிஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோயில்களுக்குத் தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார்.
 புராணப்படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வந்த எந்த நாட்களில், எம்.ஜிஆருக்கு 'புராணப்படங்களில் நடிக்கக் கூடாது. சமூகப்படங்களில் தான் நடிக்கவேண்டும். அப்போதுதான் நமது நடிப்புத்திறமையை வெளியுலகம் அறியச் செய்ய முடியும்!' என்ற எண்ணம் இருந்தது.
 ஆனால், வறுமையும், அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால் எம்.ஜிஆர். தனது எண்ணத்தை தளர்த்திக் கொண்டு எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். புராணப் படங்களிலும் தொடர்ந்து அவரால் நடிக்க முடிந்தது. படிப்படியான முன்னேற்றமும் அவருக்கு வந்தது.
 தட்ச யக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதாஜனனம் (இந்திரஜித் வேடம்), ஜோதிமலர்(சிவன்), அபிமன்யு (அர்ஜுனன்) ஆகிய படங்களில் எம்.ஜிஆர். நடித்தார்.
 'ஸ்ரீ முருகன்' படத்தில் எம்.ஜிஆர். சிவனாக ஆனந்தத்தாண்டவம், ருத்ரதாண்டவம் ஆடியதும்- அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுத்தர-அதுவே அவருக்கு மூலதனம் போல் ஆகியது. ' ஸ்ரீமுருகன்' தயாரித்த ஜுபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'ராஜகுமாரி'யில் எம்.ஜிஆர். கதாநாயகனாக அறிமுகமானார். 'மோகினி'யில் மீண்டும் நாயகன்- அடுத்து ஜூபிடரின் 'மர்மயோகி'. அதிலிருந்துதான் எம்.ஜிஆர். முதல் நிலை ஆக்க்ஷன் ஹீரோவாக உருவாகத் தொடங்கினார். இதற்கு ஸ்ரீமுருகன் படம் தானே சென்டிமெண்ட் என்ற வகையில் எம்.ஜி.ஆருக்கு முருக கடவுள் மீது அலாதியான பக்தி உண்டு. தி.மு.-வில் சேர்ந்தபின் இறைவழிபாடு இல்லாத தோற்றத்தில் அவர் இருந்தாலும்- துன்பம் நேரிடும் சமயங்களில் எல்லாம் அவர் 'முருகா' என்று அழைத்ததை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
 தி.மு.கவில் சேர்ந்ததால், புராணம் சமபந்தப்பட்ட படங்களை எம்.ஜி.ஆர். தவிர்க்க தொடங்கியதால், அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள்கூட குறைந்து போயிருந்தது. வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையில் இருந்தார். அதனாலேயே நாடகமன்றத்தைத் தொடங்கி அதன் மூலம் நிலைமையைச் சரி செய்தார். எம்.ஜி.ஆர். நாடக மன்றம் மூலம் வருமானம், மக்களோடு நெருக்கம், தி.மு.. பிரசாரம் என்று ஒரு வழியை பழமுனை அனுபவ லாபமாக்கினார்.

'காத்தவராயன்' படத்தில் முதலில் எம்.ஜி.ஆர். தான் நடிப்பதாக இருந்தார். ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணம் பெற்றுவிட்டார். படத்தில் மந்திரக் காட்சிகள் நிறைய உண்டு. அதை இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவிடம் பேசி தந்திரத்தால் வெல்வது போல் மாற்றிவிடலாம் என்று ஒரு நம்பிக்கையில் படப்பிடிப்புக்குப் போனார். ராமண்ணா எம்.ஜிஆரின் யோசனைக்கு இணங்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர். விலகிக் கொண்டுவிட, சிவாஜி காத்தவராயனாக நடித்தார்.
 இதேபோல்தான் 'ராணி லலிதாங்கி' பட வாய்ப்பும் தட்டிப் போனது. இதிலும் சிவாஜியே நடித்தார்.
 எம்.ஜி.ஆர். தன்னை தமிழனாக எண்ணி, அந்த எண்ணத்தையே சுவாசித்து வாழ்ந்தார். அதனாலேயே தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைப் பெரிதாகக் கொண்டாடினார்.
 தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்ற எம்.ஜி.ஆரின் கொள்கையை அவருடைய குடும்பம் (கூட்டுக்குடும்பமாக இருந்த அண்ணன் சக்ரபாணியின் குடும்பம் உட்பட) பின்பற்ற வேண்டியதாக இருந்தது.
 லாயிட்ஸ் சாலை வீட்டில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தீபாவளி வரும். ஆனால், அந்தப் பண்டிகைக்குரிய எந்த அடையாளமும் காணமுடியாது. எம்.ஜி.ஆருக்கு படப்பிடிப்பு இருக்காது என்றாலும் தனது அலுவலகப் பணிகள், கதை விவாதமெல்லாம் வைத்துகொள்வார். அன்று ஓய்வாக இருக்கலாம், விடுமுறை என்றுதானே என்று எண்ணாமல் அந்த நாளையும் அவர் வீணாக்கமாட்டார். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாளையும் அர்த்தமுள்ளதாக்கியவர் அவர்.
 தீபாவளியின்போது தனக்கு வந்து சேரும் இனிப்புகளை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.
 எம்.ஜி.ஆரிடம் பணிபுரிகிறவர்களில் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் உள்ளவராக இருந்தால் அவர்களுக்கு மட்டும் தீபாவளி போனஸ் உண்டு.
 1962-ல் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜிஆர். குடியேறிய பின்பு- தோட்டத்தில் கலகலப்பு வேண்டுமென்பதற்காக அண்ணன் மகன்களைத் தன்னோடு இருக்கச் செய்தார். அண்ணன் மகன்களுக்கு அந்தச் சூழ்நிலை, எம்.ஜி.ஆரின் கண்டிப்பு ஒத்துவரவில்லை. அதனால் லாயிட்ஸ் சாலைக்குச் சென்றுவிட்டனர்.
 மனைவி ஜானகியின் விருப்பத்தின் பேரில், அவர் தம்பி மணியின் பெண்குழந்தைகளை குழந்தைப் பருவம் முதலே அங்கு வளர அனுமதித்தார் எம்.ஜி.ஆர். அந்தக் குழந்தைகளுக்கும் தீபாவளி என்பது பாடப்புத்தகங்களில் மட்டும் இருந்தது அப்போதெல்லாம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தைச் சுற்றயுள்ள பகுதியில் வேறு வீடுகளே கிடையாது அதனால் பட்டாசு சத்தம் தீபாவளியன்று கேட்க வாய்ப்பில்லை. இந்தப் பெண் குழந்தைகள் வளர்ந்து உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது பெற்றோரின் இருப்பிடம் சென்று தீபாவளியைக் கொண்டாட முடிந்தது. எம்.ஜி.ஆர். அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியபோது குடும்பத்தில் அவரது கொள்கை, கட்டுப்பாடு தளர்ந்துபோனது என்றே சொல்லலாம்.
 ராமரின் வனவாசம் 14 ஆண்டுகள் என்பார்கள். அதுபோல் இந்த ராமச்சந்திரனின் நாத்திக வாசத்துக்கு 'தனிப்பிறவி' திரைப்படம் (1966-ல் வெளிவந்தது) ஒரு 'கமா' போட்டது. அந்தப் படத்தில் 'எதிர்பாராமல் நடந்ததடி... முகம் கண்ணுக்குள் விழுந்ததடி' என்ற பாடலில் எம்.ஜி.ஆர். முருகனாகவும்,  ஜெயலலிதா வள்ளியாகவும் நடித்தார்கள். 'எம்.ஜி.ஆர்., முருகனாக நடிக்கலாமா?' என்று தி.மு.-விலும், அவரைப் பிடிக்காத காங்கிரஸ் தரப்பிலும் கேள்விகள் எழ, 'ஜெயலலிதாவின் கனவில்தானே எம்.ஜி.ஆர்., முருகனாக நடித்தார்.' என்ற பதில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளிடமிருந்து வந்தது. இது பெரிய சர்ச்சையாக வளரவில்லை.
 இயேசு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த 'தலைவன்' படத் தயாரிப்பாளர் பி..தாமஸ். ஒரு யுக்தியைக் கையாண்டார்.

'தலைவன்' படம் துவங்கி நீட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ், எம்.ஜி.ஆர். விருப்பப்படி 'இயேசுநாதர்' படத்தைத் துவங்கினார். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அந்தப் படவிழாவில் தலைமை தாங்கினார். "ஆனால், கதையின் முடிவில், இயேசுவை சிலுவையில் அறைவது போன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். நடிப்பதை எங்களால் தாங்க இயலாது" என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, படம் பூஜையோடு நின்றது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டர்களாக வெளிவந்து ஏராளமாக விற்பனையாகின.

'நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தபோது ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். இயேசுநாதர் போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஆசைக்காக எடுத்துக்கொண்டது.

'உழைக்கும் கரங்கள்' படத்தில் தீய அரசியல்வாதிகளை அடையாளம் காட்ட சிவன் வேடமணிந்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோல எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.

கேரள இந்து மலையாளிகளுக்கு குலதெய்வமாக விளங்குவது, கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை. அங்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம், எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா, எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதியின் தாயார் மூகாம்பிகை அம்மாள், ஜானகி ஆகியோருக்கு இருந்தது. அது எம்.ஜி.ஆர். மனதிலும் இருந்தது. அதற்கு விதை போட்டவர் இயக்குநர் கே.சங்கர்.

1976-ல் நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள உடுப்பியில் 'மீனவ நண்பன்' படபிடிப்பு முடிந்தபின் ஒரு நாள் நம்பியார், கே.சங்கர் (மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் வழியில் அங்கு வந்திருந்தார்) ஆகியோருடன் எம்.ஜி.ஆர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூகாம்பிகை கோயிலுக்குச் செல்வது பற்றிய தனது குடும்பத்துப் பெண்களின் கருத்தை எம்.ஜி.ஆர். சொன்னார். நம்பியார், எம்.ஜி.ஆரிடம் சங்கரைக் காட்டி, "இவரோடு ஒருமுறை கோயிலுக்குப் போய்விட்டு வாருங்களேன்" என்று சொல்ல, எம்.ஜி.ஆர். பதிலேதும் சொல்லாமல் புறப்பட்டு விட்டார்.

அதிகாலை 5.00 மணிக்கு(4 மணிக்கே கோயில் திறக்கப்படும்) கோயிலுக்குள் சென்ற எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வணங்கிவிட்டு பொழுது விடிவதற்குள் திரும்பிவிட்டார்.

மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி எம்.ஜி.ஆர்., தொப்பி, கண்ணாடி, இன்றி மேல சட்டையில்லாமல் பட்டுத்துண்டு ஒன்றை அணிந்தபடி கோயில் சந்நிதானத்துக்குள் சென்று வந்ததை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டு விலகாத நேரம் வேறு. கோயிலில் ஆதிசங்கரர் வழிபட்ட இடம் 'சங்கரபீடம்' என்றழைக்கப்படுகிறது. காற்று வசதியில்லாத இந்தச் சிறிய அறைக்குள் ஐந்து நிமிடம் கூட இருக்கமுடியாது. வியர்த்துக் கொட்டிவிடும். அங்கு 30 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து எம்.ஜி.ஆர் தியானம் செய்துவிட்டு வெளியே வந்தபோது வியர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தார். அவருடைய முகத்தில் புதிய ஒளி தென்பட்டதுபோல இருந்தது சங்கருக்கு. "இப்படியோரு பரவசமான அனுபவத்தை என் வாழ்நாளிலேயே நான் பெற்றதில்லை!" என்று சங்கரிடம் எம்.ஜி.ஆர். கூறினாராம்.

1977-ல் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர். மீண்டும் ஒருமுறை மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வந்தார். தேர்தலில் வெற்றி பெற்றபின் தன் மனைவி ஜானகியிடம் (மதுரையில் 'நாடோடிமன்னன்' வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளைக் கொடுத்தனுப்பினார். அந்தத் தங்கவாளைத்தான் இரவு மூகாம்பிகை அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள்.

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் பதினோரு முறை சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் மெய்காப்பாளர்களே உடன் சென்று வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் எம்.ஜி.ஆர்.., தொப்பி, கண்ணாடி, மேல் சட்டையைக் கழற்றிவிட்டே கோயிலுக்குள் சென்று வந்திருக்கிறார். அவருடைய அந்தத் தோற்றம் அபூர்வமான காட்சி என்று நேரில் பார்த்த அந்தப் பகுதி போட்டோ ஸ்டூடியோவைச் சேர்ந்தவர், எம்.ஜி.ஆர். கோயில்விட்டு வெளியே வரும்போது படம் எடுத்துவிட்டார்.
எம்.ஜி.ஆரை அவர் விரும்பாத நேரத்தில், தோற்றத்தில் யாரும் புகைப்படம் எடுத்துவிட முடியாது. அதனால் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளர்கள் மூகாம்பிகைக் கோயிலில் படம் எதுத்தவரிடம் காமிராவை பறித்து அதில் உள்ள பிலிமை உருவி எடுத்துவிட்டார்கள். அதனால் எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்கு வந்து போனதற்கு எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை.

எம்.ஜி.ஆர். தி.மு.-வில் சேர்ந்தபின் துளசிமாலை நீக்கிவிட்டாலும், தாயார் மறைவுக்குப் பின் அவர் அணிந்திருந்த துளசி மாலையை அவ்வப்போது அணிந்து கொண்டிருக்கிறார். இது ஏன், எதற்கு, எப்படி என்பது போன்ற காரண காரியங்களையெல்லாம் அவரிடம் ஆராய்ந்து கண்டுபிடிப்பது சிரமமான விஷயம் தான்.
எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில், மாம்பலம் அலுவலகத்தில் தாயார், தந்தை படங்களுடன் இயேசு, காந்தி, புத்தர், விவேகானந்தர் படங்களெல்லாம் உண்டு. அவர்களையும் அவர் தெய்வமாக வழிபட்டிருக்கிறார். விவேகானந்தர் மீது எம்.ஜி.ஆருக்கு உள்ள பக்தியின் அடையாளம்தான் அவர் 'இதயவீணை'யில் விவேகனந்தர் போல் ஒப்பனை செய்து, ஒரு காட்சியில் நடித்திருந்தார். மற்றொரு காட்சியில் தங்கையின்(லட்சுமி) திருமணத்துக்கு மாறுவேடத்தில் வருவார். அந்த ஒப்பனை இயேசுவைப் போல இருக்கும். தான் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகவாதி என்பதை உலகம் அறிந்துகொள்ளவே இப்படியோரு வெளிப்பாடு.
எம்.ஜி.ஆர். முதல்வரான பின் தீபாவளி பண்டிகைக்கு உள்ள கெடுபிடி குறைந்தது. அண்ணன் சக்ரபாணி வீட்டில் மூன்றாவது தலைமுறை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது இனிப்பு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தீபாவளி பண்டிகை நாளில் வந்து போயிருக்கிறார். தோட்டத்தில் மட்டும் எப்போதும் போல் அமைதி நிலவியது. அவர் எப்போதும் போல் மாம்பலம் அலுவலகம் வந்து அரசுப்பணிகளைக் கவனிப்பதோடு, கோப்புகளையும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஒரு தீபாவளிக்கு முதல் நாள் இரவு 11.00 மணியாகி விட்டது. அப்போதுதான் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மறுநாள் தீபாவளி என்று நினைவு வந்தது. தோட்டத்தில் தனக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆறுமுகத்தை அழைத்து தனித்தனியாக உறைகளில் பணம் வைத்துக் கொடுத்தார்.

"இப்போது இரவு 11.00 மணி தாண்டிவிட்டது. இதற்கு மேல் நமது ஆட்களைத் தொந்தரவு செய்யவேண்டாம். அதிகாலையில் இந்த கவர்களை அவரவர் வீட்டில் சேர்த்து விடுங்கள். அப்போதுதான் தீபாவளிக்கு உரிய செலவுகளைக் கவனிக்க முடியும்" என்று கூறி அனுப்பிவைத்தார்.

மறுநாள் எம்.ஜி.ஆரின் கார் டிரைவர்களுக்கு என்று நந்தம்பாக்கத்தில் தொடங்கி, தி.நகர் அலுவலகத்தில் முத்து, ராயப்பேட்டையில் மகாலிங்கத்துக்கு என கவர்களை கொடுத்துவிட்டுச் சென்றார் ஆறுமுகம்.

இதுபோன்ற விஷயங்களில் நடிகராக இருந்தபோது எம்.ஜி.ஆர். தாராளமாகச் செலவு செய்தார். முதல்வரான பின் அதுபோல செலவு செய்ய முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது.

ஆன்மிகத்தில் எம்.ஜி.ஆருக்கு எத்தனை ஈடுபாடுகள் இருந்தபோதிலும் அவர் தன் தாயை நேசித்தது போல், வழிபட்டது போல் முக்கியத்துவம் வேறெதற்கும் தந்ததில்லை. ராமாபுரம் இல்லத்தில் தன் தாயாருக்கு கோயிலொன்றை சிறிய அளவில் எழுப்பியிருக்கிறார். அந்தக் கோயிலில் தாயை தினமும் வணங்கிவிட்டுத்தான் வெளியே புறப்படுவார்.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பி- சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ராமாபுரம் தோட்டத்துக்கு திரும்பியபோது, கார் போர்டிகோவில் வந்து நின்றது. எம்.ஜி.ஆர். கிழே இறங்கி நேராகத் தன் தாயின் கோயிலுக்கு வந்து தாயின் படத்துக்கு முன் சிறிது நேரம் மெளனமாக இருந்து வனாகிய பின்பே வீட்டுக்குள் சென்றார்.

தாய்க்கு முக்கியத்துவம் என்பதற்கு ஓர் உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்டலாம். எம்.ஜி.ஆரின் குடும்பத்தைக் கட்டுப்பாடாக இருந்து வழி நடத்தியவர் தாய் சத்யபாமா. இதில் மருமகள்களோடு அவருக்கு பிரச்னை ஏற்பட்டால் சக்ரபாணி தன் மனைவிக்கும், எம்.ஜி.ஆரின் மனைவிக்கும் ஆதரவாகப் பேசியதுண்டு.

எம்.ஜி.ஆரோ தாயின் பக்கம் நின்று அவர் செய்தது, சொல்வதுதான் சரி என்று வாதிடுவார். எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் கண்ணை மூடிக்கொண்டு ஒருவருக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார் என்றால் அது தன் தாய்க்கு மட்டுமே. வாதம், விவாதம் அதிகம் செய்யாததும் தாயிடம் மட்டுமே
                                                m.g.r.

No comments:

Post a Comment