நாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்


திரைகடல் ஓடித் திரவியம் தேடினோர் பலர்-அத்
திரவியத்தினால் திசைமாறி யழிந்தனர் சிலர்.

உயிரினைக் காக்க அகதியாக ஓடி வந்தோர் பலர்,
உயர் மானத்தை இழந்து உருக்குலைந்தனர் சிலர்.

பண்பாடு மறவாது பழமைகள் பேணியோர்  பலர்,
கண்  போக்கில் வாழ்ந்து காணாமல் போனோர் சிலர்.

 பாழும்  வாழ்க்கை யிதுவென ஏசிக் கொண்டனர்  பலர்,
நாளும்  பொழுதும்  நல்லுயர் வாழ்வினிலே மகிழ்ந்தனர்  சிலர்.

நட்புடன் நெருங்கி நற்ரோரில்   நனைந்து நலம் பெற்றனர் பலர்,
உட்பகை உறவில் வாழ்வினை வெற்றிடம் ஆக்கினர் சிலர்.

போட்டிகளில் பொருளாதாரத்தைபெருக்கிக் கொண்டனர் பலர் -
மூட்டிடும் பொறாமைகளினால்  பொசுங்கிப்போனவர் சிலர்.

உடன்பட்டு க்கடன் கொடுத்து தவித்தனர் பலர்,
கடன்பட்டுக் காலத்தைக் களிப்புடன்  கழித்தனர்  சிலர்.

அடைவு வைத்துச் சீட்டுக் கட்டி அழிந்து போனவர் பலர்,சீட்டுக்
 கடையை மூடி ஊர்க்காசுடனே   ஒளிந்து போனவர் சிலர்.

புலம் பெயர்ந்து வந்து புதுமைகள் படைத்தனர் பலர்-அப்
புதுமைகளினால் புண்ணாகிப்போனவர் சிலர்.

தங்க நகைகளுக்கு அடிமையான நங்கையர் பலர்-அத்
தொங்குநகைகளைத் தாங்கும் தாங்கிகளாயினர் சிலர்.

பெற்றவரோடு வாழ்ந்து பெருமை பெற்றனர்  பலர்-
பற்றில்லாமலே அவர்களை அனாதைகளாக்கினர் சிலர்.

பிள்ளைகளைப்  பெற்று  பொத்தி  வளர்த்தனர்   பலர் -அப்
பிள்ளைகளாலேயே  பெருமையிழந்தனர்   சிலர்.

துளித் துளியாய் துட்டினை சேர்த்து சொத்தினைச் சேர்த்தனர் பலர்-
அழித்தே அதை ஒருநாளில் கொண்டாடி த்திண்டாடினார் சிலர்.

காப்புறுதி கட்டிக் களைத்தனர் பலர்-அதனையே
 பெரும் பணமாகப் பெற்று பிழைத்தனர் சிலர்.

வருமானத்திற்கேற்ப வீடு வாங்கி மகிழ்ந்தனர்  பலர்
பெருமைக்காகப் பெரும் வீட்டில் தொங்கினர்  சிலர்.

வாகனம் ஓடும்  வசதி பெற்றனர் பலர்-அதனை
வீட்டின் முன் நிறுத்தியே வடிவு பார்த்தனர் சிலர்.

ஊருடன்    ஒற்றுமை ஊட்டி  ஒன்றுகூட்டி  வாழ்ந்தனர் பலர்,
வேருடன்  தொடர்பின்றி  என்றும் மறைந்து தாழ்ந்தனர் சிலர்.

முகநூலில் முகம்காட்டி உறவைத் தொடர்ந்தனர் பலர்.
அக த்தோற்றம் காட்டி நாற்றம் அடைந்தனர் சிலர்.

ஊருக்காய் உழைக்கும் உத்தமனானவர் பலர்.

பேருக்கு தொண்டனாய் சுருட்டியோர் சிலர்.



                      கனடியப் புலத்திலிருந்து செ.மனுவேந்தன் 

1 comment:

  1. vinothiny pathmanathan dkTuesday, July 19, 2011

    superb. great job sir

    ReplyDelete