வந்து விடுமா முதுமை? தந்திடுமா தொல்லை ?



Image result for முதுமை
விரும்பி வருவதில்லை தானே நிகழ்ந்து விடும் 
திரும்பி விடுவதில்லை இயல்பாய் பற்றி விடும் 
வேண்டாம் என்றினினும் வலியத் திணித்து விடும் 
சீண்டி வெறுத்திடினும் ஒட்டிப் பிணைந்து விடும் 

வீறு நடையெல்லாம் விரைவாய் குறைந்து விடும்
கூறும் மொழியெல்லாம் வெகுவாய் மழுங்கி விடும்
விழியின் புலனெல்லாம் இருளாய் மறைந்து விடும்  
செவியின் திறனெல்லாம் அறவே குறைந்து விடும்

தோலும் சுருங்கி விடும் நாவும் குழம்பி விடும்
காலும் துவழ்ந்து விடும் முதுகும்  வளைந்து விடும் 
மேலும் தளர்ந்து விடும் குரலும் பிதற்றி விடும் 
முடியும் வெளுத்து விடும் உதிர்ந்தும் விழுந்து விடும்

அழுத்தம் மிஞ்சி விட இனிப்பும் தொல்லை தர
கொழுப்பும் ஏறி விட சிறப்பும்  குன்றி விட
அலுப்பும் சேர்ந்து விட இடுப்பும் நொந்து விட
குழப்பம் கண்டு விட கை கால் வலித்து விழும் 

சலமும் சென்று விட சில நாள் நின்று விட
மலமும் நின்று விட மறு நாள் வந்து விட
நிலம் மேல் சாய்ந்து விட சிலை போல் ஆகி விட
பல நாள் பழகியதும் நிலையாய் நின்று விடும்

சொற்கள் பயனின்றி வீணாய்ப் போயும் விடும்
பற்கள் உரமின்றி தானே விழுந்து விடும் 
பந்தம் என்பதுவும் பஞ்சாய்ப் பறந்து விடும்
சொந்தம் இடை நடுவே தூர்ந்தும் விலகி விடும்

அச்சுடைந்த வண்டியாகி உடைந்த மரக் கிளையுமாகி
மிச்சமில்லா வங்கியாகி தூர்ந்து போன ஏரியாகி
இச்சையில்லா ஜீவனாகி நொருங்கிப் போன ஆடியாகி
நச்சரிப்புக் கேதுவாகி நடுத்தெருவில் நின்று கொண்டு,   

 மற்றோர்தெரியாமல் உலகம் புரியாமல் 
 உற்றார் உடனிருந்தும் பழக்கம் பிடியாமல் 
பற்றா வாழக்கை இது ஏன்தான் எனக்கென்று 
கூற்றான் திசை பார்த்து முதுமை புலம்பியதே!

                          ஆக்கம்; செல்வத்துரை,சந்திரகாசன்                

1 comment:

  1. முதுமை ஒரு வெறுமையே .

    ReplyDelete