எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20

இன்றைய உலகில்,மிகவும் குழப்பமான,தீர்க்கப் படாத புதிர் என்னவென்றால் பண்டைய நாகரிகமான சிந்து வெளியின் மொழி அல்லது எழுத்து பற்றிய தகவல்களாகத் தான் அதிகமாக இருக்கும். அங்கு 4200 கல்வெட்டுகள், முத்திரைகளிலும் மட் பண்டங்களிலும் இருந்தாலும், அந்த எழுத்துக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதாக இன்னும் குறிவிலக்கம் கொடுக்கப் படவில்லை. முக்கிய காரணம் எல்லா கல் வெட்டுகளும் குறுகியதாக சராசரியாக 4 அல்லது 5 குறியீடுகளை மட்டுமே கொண்டிருப்பதே ஆகும். எழுத்து, மொழி இவைகளுக்கு இடையிலான தொடர்பில், இது ஒரு கடினமான நிலையில் இருப்பதும் ஆகும். அதாவது ஆங்கிலத்தை எடுத்தால், அது எமக்கு தெரிந்த ரோமன் எழுத்து தொகுதியில் எழுதப் பட்டு உள்ளது. ஆகவே பொருள் கண்டு பிடிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் இதுவோ, இது வரை சரியாக, அடையாளங் கண்டுணர முடியாத எழுத்தையும் மொழியையும் கொண்டுள்ளது.

எது எப்படியாயினும்,முத்திரையில் இருக்கும் சிந்து வெளி எழுத்துக்களின்
குறியீடுகள், அதிகமாக வர்த்தக பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு பாவிக்கப் பட்டவையாக தோன்றுகிறது. எனவே, அது வர்த்தக பண்டங்களின் விபரத்தை ,உதாரணமாக என்ன பண்டம்,எவ்வளவு என்பதை அடையாளப் படுத்தலாம் அல்லது வர்த்தகம் செய்யும் வியாபாரியின் பெயர், தலைப்பு, இடம், குலம் போன்ற விபரங்கள் உள்ளடக்கி இருக்கலாம். உதாரணமாக, சிந்து நகரங்கள் வர்த்தகம் செய்த மெசொப்பொத்தேமியர், தமது வர்த்தக பண்டங்களில், அதை அடையாளப் படுத்த முத்திரை இட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது. மேலும் சமீபத்தில், 2012 ஆண்டில், ஆப்கானிஸ்தானில் ஹரப்பான் ஓலைச் சுவடி [எழுத்தோலை] ஒன்று கண்டு எடுக்கப் பட்டு உள்ளது. ஆனால் அதுவும் இன்னும் அர்த்தப்படுத்தப் படவில்லை.

சிந்து எழுத்து பொதுவாக பிராமி எழுத்துடன் ஒத்துப் போவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகவும் ஆரம்ப காலத்திலிருந்து கவனித்து உள்ளார்கள். இந்த பிராமி எழுத்தை அடிப்படையாய் கொண்டு தான் இந்தியா மற்றும் தென் ஆசிய எழுத்துக்கள் தோன்றின. உதாரணமாக,1920 இல், மொகெஞ்சதாரோ ஹரப்பா நகரங்களைக் கண்டு பிடித்த சார் ஜான் மார்ஷல் [Sir John Marshall ,the Director-General of the Archaeological Survey of India from 1902 to 1928 ] ,சிந்து எழுத்தில் இருந்து பெறப்பட்ட  பிராமி எழுத்துக்களின் நீண்ட பட்டியல் ஒன்று தயாரித்துள்ளார். மேலும் 1934, இல் G.R. ஹண்டர் [G.R. Hunter ],தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரையில் [doctoral dissertation], சிந்து வெளி எழுத்துக்களை ஆய்வு செய்து, அவை பிராமி எழுத்துக்களின் முன்னோடி [ precursor of the Brahmi script] என குறிப் பிட்டுள்ளார். மற்றும் இந்தியா அறிஞர்களின் கருத்தும் அதுவே. என்றாலும் எப்படி எப்பொழுது இந்த மாற்றம் நடை பெற்றது என்பது தெளிவற்று இருக்கிறது. உதாரணமாக, வட இந்தியாவில், பிராமி எழுத்து அசோகர் (கிமு 273 - கிமு 236) காலத்தில், மௌரியப் பேரரசில் முதல் முதலாக தோன்றியது. நாளடைவில் அசோகன் பிராமி மெல்ல மெல்ல வளர்ச்சியுற்று, இன்றய தேவநாகரி [Devanagari ,என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும்] ,ஷாரதா அல்லது காஷ்மீரி மொழி [ Sharada script is an abugida writing system of the Brahmic family of scripts, developed around the 8th century. It was used for writing Sanskrit and Kashmiri.], பெங்காலி-அஸ்ஸாமி [Bengali-Assamese], நெவாரி [Newari] மற்றும் ஒரியா [Oriya] எழுத்துக்கள் உருவாகின. ஆனால்,தென் இந்தியாவிலோ, தமிழ் பிராமி அல்லது தமிழி கி மு  ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பேயே, அசோகர் காலத்திற்கு முன்பே தோன்றியது. மேலும் அண்மைய ஆய்வுகள் முதனிலைத் திராவிட மொழியே [Proto-Dravidian] அதிகமாக சிந்து வெளி எழுத்தாக இருக்கலாம் என பரிந்துரைக்கிறது. இது சமஸ்கிருதம் என எடுத்துக் காட்ட பல முயற்சிகள் செய்தவர்களை பின்னோக்கி தள்ளி விட்டது.

சிந்து வெளி குறியீடுகள் ஒரு ஒலி, குறித்துக் காட்டாத சொல்லின்
கருத்துக்குறியீடு அல்லது படவெழுத்து [Ideograms] ஆகவும் அதே நேரம் பிராமி எழுத்துக்கள் [Brahmi letters ] பொதுவாக ஒலிப்பு முறை சார்ந்தவையாகவும் [phonetic in nature] உள்ளன. பல அறிஞர்கள், உதாரணமாக, இந்தியத் தொல்லியல் ஆய்வுகளில் பெயர் பெற்ற, 30 ஆண்டுகள் கேம்பிரிட்சில் பேராசிரியராக இருந்த, பிரித்தானியத் தொல்லியலாளர் ரேமண்ட் ஆல்ச்சின் , ஹன்டர் ,சுபாஷ் கக்  [Raymond Allchin, Hunter, Subash Kak ] போன்றோர்கள், பிராமி ஒலியன்கள்  [Brahmi phonemes] சிந்து வெளி குறியீட்டில் [Indus signs] இருந்து வளர்ந்ததாக முன்மொழி கிறார்கள். எனினும், தமிழ் பிராமி எழுத்து, சிந்து வெளி குறியீட்டின் நேரடி வழித் தோன்றலான பொதுச் சுவற்றில் எழுதப்பட்ட, கிராஃபிட்டி குறியீடுகளில் [Graffiti symbols ] இருந்து பெறப்பட்ட தாகவும் இருக்கலாம்? எனவும்  தோன்றுகிறது. மேலும் 'அ' அல்லது 'अ' என்ற சொல், 'H' போன்ற சிந்து வெளி குறியீட்டில் இருந்தும், அதே போல, 'ம' அல்லது 'म' என்ற சொல்,சிந்து வெளி மீன் குறியீட்டில் இருந்தும் தோன்றியதாகவும் பல அறிஞர்கள் கருது கிறார்கள்.

எது  எப்படியாயினும்,எமக்கு இன்று இன்னும் ஒரு சான்று, விழுப்புரம் அருகே உள்ள  மருங்கூர் (Marungur near Villupuram) என்னும் இடத்தில் கண்டு எடுக்கப் பட்ட  பானை ஓட்டில் இருந்து கிடைத்துள்ளது. இங்கு சிந்து வெளி  குறிகளுடன் சேர்ந்து  தமிழி எழுத்தும் எழுதப் பட்டுள்ளது. இது கி மு நூறாம் ஆண்டை சேர்ந்ததாக கருதப் படுகிறது. தமிழி முத்திரை 'அம்' என எழுதப் பட்டுள்ளது.எனவே சிந்து வெளி குறியீடும் அதையே,அதாவது 'அம்' மையே குறிப்பதாக கருதலாம்.தமிழில் 'அம்' என்பது- அழகு ; நீர் ; மேகம் ; விகுதி[tamil suffix ] இப்படி பலவற்றை குறிக்கும். இந்த பானை ஓடு இறந்தோரை அடக்கஞ்செய்து வைக்கும்  இடுகாடில், மேலும் இரண்டு பொறிக்கப் பட்ட  தாழிகளுடன் கண்டு பிடிக்கப் பட்டது. 'அம்' என்பது நீரைக் குறிப்பது .இறந்தவருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பானையாக  இது இருக்கலாம் என எம்மை  சிந்திக்க வைக்கிறது? எனவே எழுத்து 'அ' , 'ம' என்பவை, ஐராவதம் மகாதேவனின் [Iravatham Mahadevan] சிந்து வெளி குறியீடு 287 ,225 போன்றவற்றில் இருந்து உருவாக்கியதாக கருதலாம் எனவும் சிலர் கூறுகின்ற்னர். எது சரியாக இருந்தாலும், அடிப்படை உண்மை என்னவென்றால், தமிழி எழுத்து அல்லது பிராமி எழுத்து, சிந்து வெளி குறி யீட்டில் இருந்து அல்லது அதன் நேரடி வழித் தோன்றல் ஒன்றில் இருந்து உருவாக்கியது என்பதே ஆகும்!   

உதாரணமாக, அசோகா பிராமி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பட்டிப்புரலு [Bhattiprolu] என்ற பகுதியில் கண்டு எடுக்கப் பட்ட பட்டிப்ப்ரோலு பிராமி, தமிழி அல்லது தமிழ் பிராமி [Asokan Brahmi, Bhattiprolu and Tamili  or thamil Brahmi ] போன்றவற்றின்  ஒப்பீட்டில் ,'ம' என்ற சொல்லில் பெரிய வேறுபாடு ஒன்றும் காணவில்லை. 

மேலும்  குஜராத் மாநிலத்தின் துவாரகையில் இருந்து சிறிது தொலைவில் கடலுக்குள் இருக்கும், கி மு 1500 ஆண்டை சேர்ந்த,ஆதி துவாரகா [பெட் துவரகை / Bet Dwarka ] நகரத்தில் கண்டு எடுக்கப் பட்ட , ஒரு  பிற்பகுதி ஹரப்பான் [late Harappan] குறியீட்டில் [படம் இணைக்கப் பட்டு உள்ளது], கடைசி அடையாளம் [terminal sign] ,தமிழி 'ம' மாதிரி உள்ளது. எனவே தமிழி 'ம' பிற்பகுதி ஹரப்பான் குறியீட்டில் அநேகமாக பரிணமித்து இருக்கலாம் என்றாகிறது. இந்த சான்றுகள் தமிழி சிந்து குறியீட்டில் இருந்து வளர்ந்தன என்பதை உறுதிப் படுத்து கிறது எனலாம்? 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:21  தொடரும்

0 comments:

Post a Comment