எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19

எந்த வித  சந்தேகத்திற்கு இடமின்றி, மனித இனத்தின் மிக முக்கியமான வளர்ச்சி அல்லது முன்னேற்றம் எழுத்தே ஆகும். என்றாலும் பொதுவாக எழுத்து முழுமையாக உருவாவதற்கு அது எடுத்துக் கொண்ட காலத்தையோ அல்லது கடந்து வந்த பாதையையோ, மற்றும் அதில் ஏற்பட்ட சிக்கல்களையோ பெரும்பாலோர் இன்னும் அறியார். பாட சாலையில் ஆசிரியர் எப்படி எழுத்து பிறந்தது அல்லது படி வளர்ச்சி பெற்றது என்பதை பொதுவாக கற்பிப் பதில்லை. ஆனால், எதோ அது எப்பவும் இருந்தது போல மாணவர்களுக்கு அதை வழங்கு கிறார்கள். இதனால், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எழுத்தின் கதை அல்லது வரலாற்றின் பெருமையையும் மகிமையையும் கூறி அவர்களின் கவனத்தை ஆர்வத்தை இதன் பக்கம் கட்டி இழுக்கும் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறார்கள். சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்கள் கூட  எழுத்து எதோ அது தன் பாட்டில் வழங்கப்பட்டது போல எண்ணி, அதைப்பற்றி அலட்டிக் கொள்வதும் இல்லை,அது கடந்து வந்த சிக்கலான பாதைகளை சிந்திப்பதும் இல்லை. 


வடமொழி செய்யுட் காவியங்களில், ஸ்ம்ருதி நூல்களில் [smriti scriptures] ,பெரும் பாலும் வழக்குகளைக் குறிக்கும் வ்யவஹாராத்யாயத்தில் [ Vyavahara / 'legal proceeding'] பெரும்பாலும் எழுத்தியல் குறிப்புகள் காணப்படுகின்றன. நாரதஸ்ம்ருதியில் [Narada smṛti, also called Naradiya Dharmasastra] எழுத்துக்களின் தோற்றத்தைக் குறிக்கும்போது. 

- नाकरिष्यद्यदि ब्रह्मा लिखितं चक्षुरुत्तमम्। तत्रेयमस्य लोकस्य नाभविष्यच्छुभा गतिः।। नारदस्मृतिः, 4.70. /தத்ரேயமஸ்ய லோகஸ்ய நாப⁴விஷ்யச்சு²பா⁴ க³தி​:|| நாரத³ஸ்ம்ருʼதி​:, 4.70.  

சுலோகம் 4.70 இல் ,ஒரு வேளை ப்ரஹ்மதேவன் [பிரம்மா] கண்களுக்கு மேன்மையான எழுத்துக்களை உண்டாக்கி யிரா விட்டால், அப்போது இவ்வுலகத்தின் போக்கு நல்லதாக இருந்திராது என்கிறது. இதன் மூலம் எழுத்துக்களின் தோற்றம் ப்ரஹ்மாவினால் [பிரம்மாவினால்] உண்டான தென்றும் இப்படி ப்ரஹ்மாவினால் உண்டாக்கப்பட்ட எழுத்து முறையே ப்ராஹ்மி [பிராமி] என்றும் கூறுகின்றனர். மேலும் வ்யவஹார ப்ரகாசி கையில் [Vyavahara Prakashika], ஒரு சுலோகத்தில், ஆறு மாதகாலத்தில் மனிதர்களுக்கு மறதி மற்றும் தடுமாற்றம் ஏற்படுவதால் ப்ரஹ்மாவினால் எழுத்துக்கள் படைக்கப்பட்டு தாள்களில் ஏற்றப்பட்டன என்கிறது. இப்படியான கருத்துக்களுக்கு முதல் இடம் கொடுத்து பல ஆசிரியர்கள் உண்மையை உரைக்காமல், எல்லாம் ஆண்டவன் செயலே என வரலாற்றை மூடி மறைத்து விட்டார்கள்? இது சுமேரியர் காலத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது!  

ஆனால், உண்மையில்,தொடக்கத்தில், ஏதாவது ஒன்றை சுட்டிக்
காட்ட  அதன் படத்தையோ அல்லது ஏதாவது வசதியான குறியீடுகளையோ பாவித்தார்கள். அதன் பின் பல காலம் கழித்து, ரீபஸ் [rebus]என்ற முறையின் அடிப்படையில்,  ஒலிப்பு எழுத்து முறை [phonetic writing] ஒன்றை பாவித்தார்கள். பின்  அசை எழுத்து முறையை கையாண்டு, இறுதியாக  அகரவரிசை எழுத்து முறைக்கு [alphabetic writing] வந்தார்கள் எனலாம்.

ஒரு சொல்லுக்கு ஒரு குறியீடு [Word-signs] என்ற முறையில், உதாரணமாக ,  சூரியன், மலர், மற்றும் கண் போன்ற பொருட்களைக் குறிப்பதற்கு அவற்றின் உருவங்களையே குறியீடுகளாக பாவித்தல் ஆகும். அதாவது இது ஒரு படத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். இந்த உருவங்கள்  'சொல் அடையாளங்கள்' (Word-Signs) எனப்படும். இதில் இருந்து நாளடைவில் ரீபஸ் எழுத்து  முறை [rebus writing] அல்லது சித்திரப்புதிர் எழுத்து முறை அறிமுகமாகியது. குறிப்பிட்ட ஓர் ஒலியை அல்லது ஒரு சொல்லைக் குறிக்கும் சித்திரம் கருத்தளவில் அதற்குத் தொடர்பற்ற வேறொரு பொருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவது ரீபஸ் முறை எனக் குறிக்கப்படுகின்றது. ஒரு சொல்லையோ அல்லது பெயரின் ஒரு பகுதியையோ அறிவிப்பது போன்று சித்திரங்கள் அமைந்திருப்பதும், அந்தச் சித்திரங்களின் மூலம் மறைமுகமாக ஊகித்து அறியத்தக்க விதத்தில், ஒரே ஒலிப்புடைய சொற்கள் என்றும் சிலேடையைப் பயன்படுத்திக்கொள்ளும் முறையே ரீபஸ் எனப்படும். தொடக்கக்காலச் சித்திர–அசை எழுத்துகள் ரீபஸ் முறையைப் பயன்படுத்தி எழுத்து முறையை வாசித்து அறியப்பட்டது என்று பர்போலா [Parpola]  தெரிவிக்கிறார். எனவே மற்றொன்றின் ஒலிப்புடையதாயிருந்தும் வேறு பொருளுடைய சொல் [homophones] ஒன்றைக் குறிக்கவும்  இந்த 'சொல் அடையாளங்கள்' பாவிக்கலாம் என்றாகிறது. உதாரணமாக. ஆங்கிலத்தில், can என்ற சொல் பெயர்ச் சொல்லில் ஒரு  தகரக் குவளை யையும் வினைச் சொல்லில், முடியும் என்பதையும் குறிக்கும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:20  தொடரும்

1 comment:

  1. ஏரம்பமூர்த்திMonday, February 05, 2018

    யாருமே சிந்திக்காத தலைப்பு இது. நல்ல ஒரு முயற்சி. பல விஷயங்களை அறிகிறோம் .நன்றி

    ReplyDelete