பண்டைக் காலத் தமிழகத்தில் ஓலைச் சுவடி, நடுகல், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப் பெற்று வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட ஓலைச் சுவடிகள் கிடைக்கப் பெறவில்லை; எனினும் அதன் விபரங்கள், நாலடியார் 253-3 இலும் மற்றும் நாலடியார் 397-1 இலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.உதாரணமாக,நாலடியார் 253 இல்:
"கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
'எழுத்தோலை' பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்."
இளம் பருவத்தில் தந்தை 'படி' என்று சொல்லியும், அச்சொல்லை ஒரு சொல்லாக மதியாது புறக்கணித்தவன், பிற்காலத்தில் மெதுவாக ஒருவன், எழுத்துக்களைக் கொண்டிருக்கும் ஓர் ஓலையைப் பலருக்கு முன்னிலையில் 'படி' என்று தர, (அது கண்டு அவன் தன்னை அவமதித்ததாகக் கருதி) வெகுண்டு அவனைத் தாக்கத் தடித்த கோலைக் கையில் எடுத்துக்கொள்வான் என்கிறது.இங்கு 'எழுத்தோலை' என ஓலைச் சுவடு குறிக்கப் பட்டுள்ளதை கவனிக்க . ஆனால் காலத்தால் முற்பட்ட, பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. உதாரணமாக,பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர் தொடர்பிலும், முக்கிய நிகழ்வுகள் தொடர்பிலும் கல்வெட்டுக்கள் உள்ளன. எனவே, பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதன் மூலம் எழுத்துக்களின் படிமுறை வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அதே போல,செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்கால த்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன. இந்தியாவில் இதுவரையில் 1561 செப்பேடுங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாடு 489, ஆந்திரப் பிரதேசம் 289, கர்நாடகம் 162, கேரளா 9 ஆகும்.எனவே தென் இந்தியாவிலேயே பெருவாரியாக மொத்தம் 949 செப்பேடுங்கள் எடுக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தமிழ்-பிராமி என்று குறிப்பிடுகின்றனர். தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்திய பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மை க்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டே தமிழி என்று பெயரிட்டனர் அறிஞர்கள்.
முந்தைய தமிழ் எழுத்துக்கள் ஒரு சில கால இடைவெளியில் தமிழியில் எழுதப்பட்டு இருப்பதால், முன்னைய தமிழ் எழுத்து வடிவங்களின் மேலதிக விவரங்களை அறிய, கல்விமான்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களை நாடினர். தமிழ் முதனூல்’ என்று போற்றப்படும் தொல்காப்பியம் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழமையும் முதன்மையையும் பெற்றதாகும். தொல்காப்பியத்தை நாம் மொழி விளக்கவியல் நூலாகவே கொள்ளலாம். தொல்காப்பியம், தொல்காப்பியர் காலத்து மொழி நிலையையும் அதன் முந்திய நிலையையும் ஓரளவு உணர்த்துகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட மொழி நூலின் விதிகளை ஒட்டியே தமிழ் எழுத்துக்கள் பெரிதும் அமைந்து இருப்பதால், அதனைக்கொண்டு மொழியின் பொதுவியலையும் ஓரளவு அறியவியலுகிறது. தொல்கப்பியர் காலத்தில் ‘நூல்’ என்றால் . அது இலக்கண நூல் ஒன்றையே குறிக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பெரும் பிரிவுகளை உடையது. உதாரணமாக, எழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துகளின் உச்சரிப்பு நிலை, சொற்களில் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியன கூறப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்தில், வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு (டெக்கான்) வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. ஆகவே வடமொழிக் கலப்பு பெற்ற தெலுங்கு-கன்னட மொழிகளையும், தமிழகத்தே வட மொழி சிறிதளவு கலப்பதையும் கண்ட தொல்காப்பியர்,
"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே''
-தொல்காப்பியர்-
என்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி (ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது.
ஒவ்வொரு மொழிக்கும் அடிப்டபடையாய் இருப்பவை ஒலிகள், ஒலி இன்றி மொழிகள் இல்லை. ஓலிகள் எழுத்து என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவ்வெழுத்து பொதுவாக ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் குறிப்பதாக அமைகிறது, தொல்காப்பியத்தின் முதல் அத்தியாயம் எழுத்து ஆகும். இது அகரவரிசை எழுத்தை குறிப்பிடு கிறது. இந்த எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் முதல் பாட்டில் , எழுத்து என்று சொல்லப்படுபவை யாவை என்றால், அவை, 'அ' என்ற எழுத்தில் தொடங்கி, 'ன்' என்ற எழுத்தில் முடியும் முப்பது என்று ஆசிரியர் கூறுவர்” என்ற கூற்றோடு தொல்காப்பியர் தொடங்குகிறார்.
"எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே."
மேலும் பொருளதிகாரம், புறத்திணையியல்,பாட்டு 60 இல்,
"காட்சி கால்கோ ணீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்"
என்கிறது. இங்கு தொல்காப்பியர் நடுகல் நடுவதற்கான ஆறு அமைப்புகள் பற்றிச் சொல்கிறார். அவை : காட்சி, கால்கோல், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என உயர்த்திக் கூறுகிறார்.
முதலில் ஊர் மக்கள் பொருத்தமான கல்லை தேர்ந்து எடுத்து [காட்சி], அந்த கல்லை குளிப்பாட்டி தூய்மை படுத்துவார்கள். அதன் பின்,அதற்கு பூக்களால் படைத்து, தூபம் காட்டி, போற்றுவார்கள் [கால்கோல்] ,ஏனென்றால் இந்த கல்லு தான் அந்த வீரனின் பெயரையும் தீரத்தையும் எடுத்து கூறப் போகிறது. மூன்றாவதாக அந்த கல்லை சுத்தமான தண்ணீரில் பல நாட்களுக்கு ஊறவைப்பார்கள் [நீர்ப்படை]. அதன் பின் மாவீரனின் படம் பொறித்து, அவனின் வீரச் செயலை கல் மீது பொறித்து எழுதி,சடங்கு செய்து நடுவார்கள் [நடுதல்],....இப்படி தொகாப்பியம் ,கல்லில் வெட்டி எழுதுவதை குறிக்கிறது. இந்த தமிழரின் தனித்துவமான தமிழ் பாரம்பரியம் நீண்ட காலம் நிலைத்து நின்றது.மேலும் அகம், புறம், மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் காணப்படும் குறிப்பு கி.மு.4-5ஆம் நூற்றாண்டிகுரிய பொருங்கற்படைச் சின்னங்கள் மெல்ல மெல்ல தன் நிலையில் இருந்து மாறி வீரக்கற்களாக (நடுகல்) உருமாரின என்பதை மிகச் சிறப்பாக எடுத்து இயம்புகின்றது. இதன் மூலம் சங்க இலக்கியம் பல நூற்றாண்டு கால தமிழரின் வாழ்வியல் நிலையை பதிவு செய்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
அகத்தியர் என்பவர் இயற்றிய, குறைந்தது 12000 சூத்திரங்கள் கொண்ட அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருதப் பட்டாலும், அது முழுமையா இன்று எமக்கு கிடைக்க வில்லை. ஒரு சில வரிகள் மட்டும் மேற்கோளாக அவரின் மாணவரான, தொல்காப்பியரால் எடுத்து கூறப் பட்டு உள்ளது. மற்றும் சில பகுதிகள் பல்வேறு நூல்களில் இருந்தும் கிடைத்துள்ளன.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி:18 தொடரும்
0 comments:
Post a Comment