Ø பள்ளிப் பருவ மதில்
அள்ளியே புத்தகங்களை
அணைத்தே கையினில்
நனைந்தே வெய்யினில்
நடையாகச் செல்கையில்
நண்பனானவன் ஒருவன் .
Ø மாலை வேளைகளில்
சாலை ஓரங்களில்
கிட்டிப் பொல்லடித்து
முட்டி விளையாடுகையில்
இளநீர் குடித்து இனிய
நண்பனானவன் ஒருவன்
Ø காளைக் காலமதில்
வேளைக்கொரு வீதியில்
வண்டியை மிதிக்கையில்
அண்டிப் பழகியதில்
எண்ணங்களைப் பகிர்ந்தே
நண்பனானவன் ஒருவன்.
Ø ஆலை இல்லை ஊரும் பாழ்
வேலை இல்லா ஆணும் வீண்என
புத்திகள் கூறிப் பக்தியுடனே
உத்தியோகமதில் உழைத்திடவே
உண்மை யுணர்வில் உதவி செய்தே
நண்பனானவன் ஒருவன்.
Ø புலம் பெயர்ந்து வந்த வேளை
குலத்துடன் கூடி இருந்து
காலம் கடந்த காலத்தில்
புதிய நாட்டின் புதினங்களை
புரிய வைத்த பண்பாளனாய்
நண்பனானவன் ஒருவன்.
Ø சுழன்று ஓடும் நாட்களில்
வாழ்ந்து கடந்த பயணங்களில்
குலைந்து போன கனவுகளாய்
தொலைந்து போன நண்பர்களை
ரெயில் சிநேகிதர் என்றே
மையில் எழுதி வைத்தேன்.
----------------செ.மனுவேந்தன்.
0 comments:
Post a Comment