பண்டிகை என்றாலே அதில் திரையரங்குக் கொண்டாட்டமும் தவறாமல் இடம் பிடித்துவிடும். குடும்பத்துடன் பண்டிகை தினத்தின் பாதி நாளை கொண்டாடிவிட்டு திரையரங்கிற்கு படையெடுக்கும் கூட்டம் ஏராளம். அதற்காகவே பண்டிகை தினத்திற்கு பல படங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் வரவிருக்கிற பொங்கல் தினத்திற்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதைப் பார்க்கலாம்.
தானா சேர்ந்த கூட்டம்:
‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ் மேனன், ஆர்.ஜே.பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படம், இந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக். ஆனால்,திரைக்கதையில்
பல மாற்றங்களைச் செய்துள்ளாராம்
இயக்குநர்.இதற்கு முன் இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாகியுள்ளதால், ‘தானா சேர்ந்த கூட்டம்’, பொங்கல் பண்டிகையில் வெளியாகும் சூர்யாவின் மூன்றாவது படம். பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா நடித்த படம் பொங்கலுக்கு வெளிவருவதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
குலேபகாவலி:
‘தேவி’ படம் மூலம் நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்த பிரபுதேவா, அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘குலேபகாவலி’. பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கிறார். ‘தேவி’ படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பதால், ‘குலேபகாவலி’ படத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள்.
ஸ்கெட்ச்:
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது முதல் படமான ‘வாலு’வை ரிலீஸ் செய்த இயக்குநர் விஜய் சந்தர், விக்ரமுடன் கைகோத்திருக்கும் படமே ’ஸ்கெட்ச்’. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம், தமன்னா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படம், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.
மன்னர் வகையறா:
நடிகர் விமல் நடிக்கும் 25ஆவது படம்தான் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்க விமல், கயல் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை நடிகர் விமலே தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலியும் இந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் விமல் படம் ரிலீஸான காலம் போய், நீண்ட நாள்களுக்குப் பிறகு விமல் படம் ரிலீஸாவதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.
மதுரவீரன்:
‘சகாப்தம்’ படத்திற்குப் பிறகு விஜயகாந்தி ன் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் ‘மதுரவீரன்’. ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இயக்குநராகக் களமிறங்கும் இந்தப் படத்தில், சண்முகபாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, தேனப்பன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பொங்கலுக்கு ரிலீஸாவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது. டீசர், ட்ரெய்லரும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment