ஒருநாள் காலையில், கௌதம புத்தரிடம் ஒருவர் வந்து கேடடார், "கடவுள் இருக்கின்றாரா?" என்று. அவர் சொன்னார் "இல்லை" என்று.
அதேநாள் பகல் இன்னொருவர் வந்து
"கடவுள் இருக்கின்றாரா?" என்று கேட்க, அவர் சொன்னார் "ஆம்" என்று.
மீண்டும் மாலையில் வேறு ஒருவர் அதே மாதிரி "கடவுள் இருக்கின்றாரா?" என்று கேட்க, புத்தர் மௌனமாக , ஒன்றும் பேசாது, கண்களை மூடி இருந்தார்.
அவருடைய பிரதம சீடருக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தப் பெரிய மஹான் ஒன்றுக்கொன்று முரணாகப் பேசுகின்றாரே என்று கலக்கத்தில் அவரிடம் " என்ன இன்று உங்களுக்கு நடந்தது? என்ன களைப்பு மிகுதியா? அதற்கான விளக்கம் கூறாது விட்டால் எனக்கு இன்று தூக்கமே வராது" என்று கேடடார்.
அதற்குப் புத்தர் புன்முறுவலுடன் சொன்னார்:
அப்பதில்கள் எல்லாம் அவர்களுக்குச் சொல்லப்படடாதே ஒழிய உமக்காக அல்ல. கேள்வி ஒன்றுதான் என்றாலும் அது கேள்வி கேட்பவர் தன்மை, சந்தர்ப்பம் என்பவற்றால் பதில்கள் வேறுபடலாம்.
முதலில் வந்தவர் ஓர் ஆஸ்திகர்; கடவுள் உண்டு என்று கண்மூடித்தனமாக நம்புபவர். அவர் தன்னுடைய நம்பிக்கைக்கு வலுவூட்டுவதற்காக என்னையும் தன்னோடு இழுக்கப் பார்க்கின்றார்.
யாரோ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் என்று, பயம் நிமித்தம் ஒன்றை நம்பிக்கொண்டு இருப்பவர்கள், இருட்டுக்குள்ளேயே இருப்பதால் உண்மையை ஆராய்ந்து அறிய முனைய மாடடார்.
அவரின் நம்பிக்கையை உடைத்து, சிதைக்கவே அப்படிச் சொன்னேன். என் பதிலுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அப்படியான பதிலே அவருக்கு அப்போது தேவைப்பட்டது. இப்போது அவர் சிந்தித்து ஒரு தெளிவுக்கு வந்ததும் திரும்பவும் வருவார்.
அப்படியானால் இரண்டாவது நபர்?
அவர் ஒரு நாஸ்திகர்; கடவுள் இல்லவே இல்லை என்ற நம்பிக்கையில் வலு திடமாக உள்ளவர். அவரும் தன் தனக்கு ஆதரவு தேடித்தான் என்னிடம் வந்தார். முதலாமவர் போலவே இவரும் ஒன்றை, தானாக
முற்றாக ஆராய முனையாமல் முட்டாள்தனமாக நம்புகிறார். மற்றையோர் சொல்வதை நம்புவதிலும் பார்க்க தாங்களே உணர்ந்து அனுபவம் பெறுவதே மேன்மையானது. அதற்காகவே அவரின் நம்பிக்கையையும் நொறுக்க நினைத்துப் பதில் கூறினேன்.
என்றால் அந்த மூன்றாம் நபர்?
அவர் ஆஸ்திகரும் அல்ல; நாஸ்திகரும் அல்ல. அவர் என்னிடம் இருந்து 'ஆம்' என்றோ 'இல்லை' என்றோ பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் இதய சுத்தி உள்ள ஓர் அப்பாவி. எவருடைய போதனைகளாலும் ஈர்க்கப்படுத்தப் படாதவர். அவர் ஒரு விசாரித்து அறியும் ஆர்வத்தில்தான் கேட்டார்.
நான் அவருக்கு இட்ட பதில் "கண்கள் மூடியபடி அமைதியான மௌனம்". எனது பதில் விளங்கி, பிரகாசமான புத்துணர்ச்சியுடன், தன் கண்களையும் மூடி அமைதியுடன் இருந்ததில் இருந்து, எனது பதில் அவருக்கு விளங்கிவிட்டது என்பது புலனாயிற்று.
உணமையைத் தேடுபவர்களுக்கு வாய் மொழியில் பதில் தேவை இல்லை.குருவின் இதயத்தில் இருந்து இதயத்திலும், ஆத்மாவில் இருந்து ஆத்மாவுக்கும், ஆழ ஊடுருவிச் சென்று அவரை விழித்தெழச் செய்யும்.
புத்தர், கடவுள் கொள்கை ஓர் அவசியம் அற்றது என்று கண்டார்.
பழைய மனிதன் இயற்கை அழிவின் பயம் நிமித்தம், தங்களை காப்பாற்றுவதற்காக கடவுளை உண்டாக்கினான். பின்னர் பல கடவுள்களும், சமயங்களும் வந்தும், மனிதனுக்கு அந்தக் கடவுள்களால் எந்த ஒரு நன்மையும் கிடைத்ததற்கு சான்றுகள் ஒன்றும் இல்லை என்றும் கண்டார். மேலும், கடவுள்தான் செய்தார் என்ற சொல்லப்படட பல விடயங்களை மனிதனாலேயே செய்ய முடியும் என்றும் கூறி வைத்தார்.
புத்தரின் போதனையின் படி, கடவுள் என்று ஒருவர் தேவை இல்லை. ஒவ்வொரு மனிதனும் மனதைத் தூய்மைப்படுத்தி, உயிர்களிடத்து அன்பையும், இரக்கத்தையும் காட்டி, பூரண புரிந்துணர்வுடன், (சொர்க்கம் போவது பற்றிக் கனவு காணாது) இதய சுத்தியோடு, சுய புரிதலுடன் சேவை செய்வதே நிம்மதியான, சந்தோசமான வாழ்வை அளிக்கும்.
"புத்தம் சரணம் கச்சாமி"
-'ஓஷோ' வில் தழுவி தொகுத்தவர்: செல்வதுரை சந்திரகாசன்.
0 comments:
Post a Comment