எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16

நாம் இதுவரை கூறியதில் இருந்து அறிந்து கொள்வது என்ன வென்றால், திராவிடருக்கு என தனியான எழுத்து முறை உண்டு. அவர்களே சிந்து வெளிக்கான எழுத்தை அறிமுகப் படுத்தியவர்கள். பின் அதை தென் இந்தியாவில் தொடர்ந்து பானை ஓடுகளிலும் மற்றும் நாணயங்களி லும் எழுதியுள்ளார்கள். உதாரணமாக, உருசிய அறிஞரான யூரி நோரோசோவ் [Yuri Knorozov], சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் திராவிட மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார். இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முதனிலைத் திராவிடமொழி [proto-Dravidian] என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார். பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும் [Asko Parpola], சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் [Indus script and Harappan language] பெரும்பாலும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ததாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.1960கள் முதல் 1980கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முதனிலைத் திராவிட மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் [Heras and Knorozov] ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின ("மீன்" குறியீட்டைத் திராவிடச் சொல்லான "மீன்" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன. 1994 வரையான பர்ப்போலாவின் ஆய்வுகளின் விரிவான விளக்கங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்தறிதல் (Deciphering the Indus Script) என்னும் அவரது நூலில் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மையில், சிந்துவெளிக் குறியீடுகள் எனக் கருதப்படும் குறியீடுகளுடன் கூடிய புதியகற்காலக் (கி.மு 2ம் ஆயிரவாண்டுத் தொடக்கம். அரப்பாவின் வீழ்ச்சிக்கு முந்திய காலம்) கற்கோடரி ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டமை திராவிடமொழிக் கருதுகோளுக்கு வலிமை சேர்ப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிடுகிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.

 புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் அவர்கள் பெருவழுதி நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள், அசோகர் காலத்துக்கு முந்தியவை என தெரிவிக்கிறார். அதே போல,டாக்டர் கிஃவ்ட் சிரோமணி [Dr.Gift Siromoney] என்பவர், 1983லேயே, 

1.] தமிழ் பிராமி, அசோகர் பிராமிக்கு முந்தியது 
2.] தமிழ் பிராமியில் இருந்துதான் அசோகர் பிராமி உருவானது, 

ஆகிய இரண்டு கருதுகோள்களை முன்வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. கி மு 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துக்கள் இதை மேலும் ஆதரிக்கின்றன. அது மட்டும் அல்ல எழுத்தைப் பற்றிய குறிப்புகளையும் தொல்காப்பியத்தில் காணலாம். அதே போல திருக்குறள் ,சிலப்பதிகாரம் போன்றவையும் எழுத்தைப் பற்றி கூறுகின்றன. பனை ஓலை எழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை  நாலடியாரிலும், நடுகல் எழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை புறநானுறும் தருகின்றன. உதாரணமாக, நாலடியார் - 40.காம நுதலியலில் பாடல் 397 இல் தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப நிலையை கூறும் பொழுது:

"ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து."

என்று கூறுகிறது. அதாவது, ஓலையிலே எழுதும் கணக்கரின் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள் என்கிறது. இது சங்கம் மருவிய காலத்தில்,வள்ளுவர் காலத்தை அண்டியதும் ஆகும். 

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர் ஆகும்.  2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகளும் மற்றும் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும்  இங்கு கண்டு எடுக்கப் பட்டுள்ளன. தாழியில் இருந்த எழுத்தை "‘கரி அரவ நாதன்"  [ `Ka ri a ra va [na] ta'] என்று படித்து
உள்ளனர். இது கி மு 500 ஆண்டை சேர்ந்ததாகும். ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழி தான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் [Front line] ஆங்கில இதழில் வெளிவந்தன. இதன் படம் இங்கு இணைக்கப் பட்டு உள்ளது.

பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி அவர்கள், அங்கு பிந்திய  ஹரப்பா தளங்களில் காணப்படும் கீறல் குறிகளை அதிகம் ஒத்த கீறல் குறிகளைக் கொண்ட பானை ஓடுகளும் உள்ளன என்கிறார்.  இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்திய  ஹரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்பு டையன என்பதை நிறுவி உள்ளன. இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இது ஹரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார். அப்படி அகல் ஆய்வு செய்யும் பட்ச்சத்தில், தமிழ் எழுத்துக் களின் ஆரம்பம்,தொடர்புகள், மற்றும் வளர்ச்சியைப் பற்றி மேலும் விபரமாக நாம் அறியலாம்? 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:17  தொடரும்

0 comments:

Post a Comment