மனிதன் எனப்படுபவன் யார்?



மனிதன் என்ற சீவப்பிராணியும் அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும் இருந்த பொருள்களிலிருந்தே படிப்படி யாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான்
என்று மணிவாசகப்பெருமானின் மணியான பாடல்பகுதியை நினைக்கலாம். இது மனிதனைப் பற்றிய ஒருவிதமான விளக்கம்; படிவளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) அடிப்படை யாகக் கொண்டது.

மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான்;மனிதனாக மதிக்கப்பட வேண்டியவன்.பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலியவை போல் மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் குருதியை உறிஞ்சியும் வாழும்  அவைகள் சீவப்பிராணிகளேயாகும் என்பது தந்தை பெரியாராவர்களின் கருத்தாகும்.

 உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே"[2] என்பது தொல்காப்பியம். மனிதவடிவமாக இருப்பவர்கள் அனைவரும் மக்கள் அல்லர்; 'இவன்தான் மனிதன்' என்று சுட்டியுரைக்கப் பெறும் தகுதி உள்ளவர்களே மனிதர்கள், உயர்திணையைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் மாக்கள்; அஃறிணையைச் சார்ந்தவர்கள் என்கிறான் அந்த இலக்கணப்புலவன்.

மனிதன் மனித இனத்தின்-மனித சமுதாயத்தின் ஓர் அலகு; சிறிய அளவு கோல். இவனே குடும்பமாக வளர்பவன். மனிதன் பகுத்தறிவுள்ளவன். இதுதான் மனிதனுக்கும் ஏனைய பிராணிகட்கும் உள்ள வேறுபாடு. அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடையாத மனிதனாகின்றான். தனக்கென்று ஒருகருத்து சம்பிரதாயம் என்றில்லாமல் பலர் சொல்வதைக் கேட்டு ஆராய்ச்சி செய்து ஏற்புடையவற்றை ஒப்புக் கொள்வதே, சிந்திக்கும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு ஏற்புடையது என்பது தந்தை பெரியாரவர்களின் கருத்து; அறிவியலடிப்படையில் அமைந்த கருத்து. மனிதன் என்பதற்கே பொருள், விஷயங்களை பார்த்து நன்மை தீமைகளை உணர்ந்து அனைத்துத் துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மையுடையவன் என்று மேலும் விளக்குவார்கள் அய்யா அவர்கள்.

மனிதன் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கைக்கு வரும் போது ஒவ்வொரு மனிதனும் சமுதாயவாழ்க்கையில் ஒருவனுக்கொருவன் உதவிசெய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே யொழிய மற்ற மனிதனைக் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, கஷ்டப்படுத்தி அதன் பயனாய்த் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படிக்கருதி இருந்தால் சமூக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது.

மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்லன்; அப்படி வாழவும் அவனால் முடியாது. அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத்திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொருவன் செய்கிறான். ஆகவே அவன் சமுதாயத்தோடு வாழும் சீவன். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும். துறவியோ, மகாத்மாவோ, சாமியாரோ ஆக இல்லாதவனின் உலகநடை, மனிதாபிமானத்திற்கும் நாணயத்திற்கும் ஒழுக்கத்திற்கும் அடிமைப்பட்டே ஆகவேண்டும்.

பெரியார் கூறுவார்: "நரக வாழ்வாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரகவாழ்வு மட்டுமல்ல; அதைவிடப் பலகொடிய கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில நான் மனிதனாக மதிக்கப் பெறுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழிச்சாதி வாழ்வை விட சுகமான வாழ்வு என்று கருதுவேன்

-தந்தை பெரியார்.


No comments:

Post a Comment