எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா ?


தஞ்சாவூர் [Thanjavur] மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. பிற்கால சோழர்களின் தலைநகரான விளங்கியது.
பெயர்க் காரணம்
தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள் .
தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.
 
பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.
சிறப்புகள்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. உலக புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோவில் உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தை தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
தஞ்சாவூர் ஓவியங்களும்,கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உலக புகழ் பெற்றது
கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.

மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும் .
தஞ்சை வரலாறு
கி.பி. 655-ஆம் ஆண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றித் தஞ்சை சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.கி.பி. 1532இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர்மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு
புகையிரத நிலையம் 
மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.
கி.பி 1676-ல் மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798–1832) ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிற மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி (1832–1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வருகிறது.
சுற்றுலாத் தலங்கள்
*தஞ்சை பெரிய கோயில்.
*தஞ்சை சரசுவதிமகால் நூலகம்.
*கல்லணை.

தொகுப்பு: கயல்விழி  கயல்விழி கருணாநிதி 

1 comment:

  1. ஒரு மனுஷனை கொலை பண்ணியிற்று உரிமை கொண்டாடுறதில்லை கூட போட்டி போடும் கடவுளுகளை இந்தியாவில தான் பார்க்கலாம்.

    ReplyDelete