சமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு!:அறிந்துகொள்ளுங்கள்

மலேசிய விமானம் சமுத்திரத்தினுள் எங்கோ விழுந்து விட்டது; அது எங்கே உள்ளது  என்று கண்டு பிடிப்பது மிகவும் சாதாரண விடயம் அல்ல! ஏனென்றால், சமுத்திரம் என்பது நாம் எட்டிப் பார்க்கும் நம் கடல்போல் அல்ல; அது படு பயங்கரமானது!
  பூமியின் மேற்பரப்பின் 71% சமுத்திரத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. சமுத்திரத்தின் ஆழமோ வெறும் மீட்டர் கணக்கில் என்று எண்ணவேண்டாம். சராசரியாக அதன் ஆழம் 4 கிலோ மீட்டர் என்றாலும், அது பல இடங்களில் 6, 8, 10 கிலோ மீட்டர்களையும்  தாண்டி, பசுவிக் சமுத்திரத்தில் உள்ள மரியானா அகழி என்று கூறப்படும்
இடத்தில் 11 கிலோ மீட்டர் ஆழத்தையும் அடைந்து விட்டது.
நமது இமயமலையே கடல் மட்டத்தில் இருந்து 8.9 கிலோ மீட்டர் உயரம்தான். இமமலையை அப்படியே முழு இந்தியப் பெரும் கண்டத்துடன் தூக்கி இவ்வகழியினுள் போட்டால், அதன் உச்சியைக் காணவே 2.1 கிலோ மீட்டர் உள்ளே போக வேண்டி இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
அந்த விமானம் எந்த இடத்தில் என்ன ஆழத்தில் விழுந்து இருக்கின்றதோ யார் அறிவர்?

இந்த மரியானா அகழியின் அடியில் அமுக்கமோ பூமியின் மேற்பரப்பிலும் விட 1100 மடங்கு அதிகமானது. அதாவது, நமது தலையில் ஒரு 360 தொன் பாரத்தைத் (+து: மூன்று ஜெட் விமானங்களைத்) தூக்கி வைத்திரும் அமுக்கம் அளவு! ( இமய மலை உச்சியில் அமுக்கம மூன்றில் ஒன்றாகத் தான் குறைந்திருக்கும்).

விமானம் மூழ்கும் வழியில் அமுக்கத்தினாலேயே நசுங்கிப் போய் இருக்கும்.

விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டி (உண்மையில் அது ஆரஞ்சு நிறம்)! அது கூடிய அதிர்ச்சியைத் தாங்கியும், பெரும் வெப்ப, அமுக்க, ஈர  நிலைகளிலும்  தொடர்ந்து இயங்கக் கூடியது. ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு தடவை ஒரு கூரிய ஒலிச் சமிக்ஞையை எழுப்பியபடி இருக்கும். இது ஒரு நாலு கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தால்தான் இதை உணர்வது சுலபம். ஆறு கிலோமீட்டர்? சிலவேளை முடியலாம். ஆனால்.... இப்பெட்டியின் பாட்டரி ஆக ஒரு மாதம்தான் நின்று பிடிக்குமாம்!
இப்போது ஒருமாதம்தான் முடிந்து விட்டதே!
கண்டு பிடிக்க முடிமா இனியும்? சில புதிய தொழில் நுட்பம் வழிகாட்டினால் முடியவும் கூடும்!

பி.கு:
மரியானா அகழி:
மரியானா அகழிக்குள் போவது என்பது முடியாத காரியம் என்றாலும், மிகவும் கடின உழைப்பின் மூலம் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் போன்ற நீர்மூழ்கிக் கலம் ஒன்றில், கமரோன் என்பவர் 2012 இல் தனியாக இவ்விடத்தை அடைந்து புகைப் படங்கள் எடுத்தார். ஆனால், கலத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணத்தினால் பெருமளவில் மாதிரிக் கனிமங்களையும் சோதனைக்காக அவரால் எடுத்து வர முடியவில்லை.
ஆனால், கொண்டுவந்த சில துகள்களில் இருந்து அங்கு பல நுண்ணுயிர்கள் ஒளி இல்லாத நிலையிலும், உணவுக்குக் கடலின் மேல்பக்கம் வராது அங்கேயே சில இராசயனத் தாக்கங்களினால் உயிர் வாழ்வதற்கான சக்திதனைப் பெறுகின்றன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அத்தோடு நம்மைக் கொல்லும் பல வியாதிகளுக்கான மருந்துகளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களும் இருப்பதாக அறிகின்றார்கள். [மீள்வெளியீடு]

சமுத்திரத்தின் ஆழமறியாமல் விமானத்தில் காலைவிடாதே:நவீனமொழி   
ஆக்கம்:செல்வதுரை சந்திரகாசன் 


No comments:

Post a Comment