எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12

Related image
சுமேரியன், எலாமைட், திராவிடம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பேசப்படும்  மாண்டே மொழிகள் [The Sumerian, Elamite, Dravidian[or Old Tamil] and Manding languages] மரபுவழி தொடர்புடையன என மொழி வல்லுநர்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன, மற்றும் இன, கலாச்சார உறவுகள் மெசொப்பொத்தேமியா சுமேரியனுக்கும் தென் இந்தியா திராவிடருக்கும் இடையில் இருப்பதாக நிக்கோலஸ் லஹோவரி ,மலேசியாவை சேர்ந்த முனைவர்
கி.லோகநாதன்,இந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி, வழக்கறிஞர், நீதிபதி, வரலாற்றாசிரியருமான  KP பத்மநாபா மேனன், பன்மொழிப்  புலவரும் பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம், ஞானப்பிரகாச அடிகளார் ,A S தியாகராஜா ,ராமசுவாமி அய்யர் ,கலாநிதி கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ், C.லியோனர்ட் வூல்லே, J.V.கின்னியர் வில்சன்  [Nicolas Lahovary, Dr.Loganathan Muttarayan from Malaysia,Eminent historians K.A. Nilakantta Sastri,an eminent Advocate,Judge and Historian KP Padmanabha Menon and the late Professor A.Sathasivam from Sri Lanka,Father Gnana prakasar, A S Thiyagaraja, Ramaswami Aiyar, Dr Clyde Winters ,C. Leonard Woolley ,J.V.Kinnier Wilson] போன்ற மொழியியலாளர்கள், மானுடவியலாளர்கள்,வரலாற்று ஆசிரியர்கள் [ linguists,anthropologist, historians and  authors] மற்றும் பல நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். மேலும்,சிந்து வெளி நாகரிகத்திற்கும் அண்மைக் கிழக்கு நாடுகளுக்கும் இடையில் வணிக, மத மற்றும் கலை தொடர்புகள் இருந்ததாக சுமேரிய ஆவணங்களில் குறிக்கப் பட்டு உள்ளது. இங்கு சிந்து வெளி மக்களை மேலுஹ்ஹைட்ஸ் [Meluhhaites /
மேலுஹன்/Meluhans ] என்றும் சிந்து வெளியை மேலுஹ்ஹா [Meluhha]  என்றும் குறிக்கப் பட்டு உள்ளது. உதாரணமாக கி மு 2000 ஆண்டுக்கு முற்பட்ட ஆவணம் ஒன்று, கருத்த நடனான மேலுஹ்ஹைட்ஸ், அக்காடியா[அகாதே]  அரசன் நரம்-சின்னுக்கு எல்லா விதமான வெப்ப வலய பொருட்களையும் கொண்டு வந்தனர் என்று குறிப்பிடுகிறது. ["The Meluhhaites, the men of the black land, bring to Naram-Sin of Agade all kind of exotic wares."]. அதே போல இன்னும் ஒரு, அக்காடிய மன்னன் சார்கோனின்(Sargon:2334–2279 BC) குறிப்பில் மேலுஹ்ஹா,மகன்,டில்முன் போன்ற இடங்களை சார்ந்த கப்பல்கள் அக்காடியா [அகாதே] நகரத்திற்கு வந்ததாக "மேலுஹ்ஹாவில் இருந்து கப்பல்,மகனில் இருந்து கப்பல், டில்முன்னில் இருந்து கப்பல் வந்தன, அவன் அக்காடியா கப்பல் துறையின் பக்கத்தில் கட்டினான்" ["the ships from Meluhha,the ships from Magan,the ships from Dilmun,He made tie-up alongside quay of Akkad"] என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல பல தொடர்புகள் திராவிடனுக்கும் [அல்லது சிந்து வெளி திராவிட மக்களுக்கும்] சுமேரியனுக்கும் இடையில் நிலவினாலும், வியப்படைய வைக்கும் செய்தி என்னவென்றால் ,தமிழ் அல்லது திராவிட அகரவரிசை, ஆப்பு எழுத்தில் இருந்து நேரடியாக வளரவில்லை என்பதே ஆகும். அது மட்டும் அல்ல,மேலே கூறிய இரண்டு இனங்களின் மொழிகளுக்கிடையே உள்ள ஒத்த தன்மைக்கு அப்பால், மேலும்  வாற்கோதுமை [பார்லி], கோதுமை பயிர் செய்கை [வேளாண்மை] , மெசொப்பொத்   தேமியாவில் ( இன்றைய தென் ஈராக்) இருந்து சிந்து சம வெளிக்கு பரவியது என்பதை பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்கி றார்கள். அது மட்டும் அல்ல இனக்குழுத் தாவரவியல் தரவு கண்காணிப்பும்/ [ "ethno-botanical data tracking"]  அதை உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த வேளாண்மை மெசொப்பொத்தேமியாவில், இயூபிரட்டீசு[Euphrates] ஆறு பகுதியில், கி மு 8500 அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின் அது சிந்து சம வெளிக்கும் இந்திய துணை கண்டத்திற்கும் கி மு 6500 அளவில் அடைந்தது எனவும் நம்புகிறார்கள்.  

அண்மைக் காலத்தில் வெளிவந்த ஆதாரம்,தடயம் வரை ,தமிழர்களின் வரலாறு,வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துக்கு முன்1000- 500 ஆண்டு அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. அனால்,இப்ப தமிழர்/ திராவிடர் பண்பாடு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களிலும் [பெருங்கல்லாலான இடங்களும் சின்னங்களும்] ,இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி [அல்லது கதிரவெளி] இவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள், பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான  இலங்கை,சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை [கந்தரோடை] பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இவைகள் சில கிறிஸ்துக்கு முன் 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள் ,இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து தமிழ் [அல்லது திராவிட] மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந் துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்து 169 மனித தலையோடு ,எலும்புக்கூடு,உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள் கொண்ட  சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் தோண்டியெடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அரிசி உமியும் தானியமும் கருகிய [தீய்ந்த] அரிசியும், வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கோடரி போன்ற கருவியும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என உறுதி கூறுகிறது. கல்வெட்டெழுத்துக்களையும்  கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்களையும் ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், தமிழர் நாகரிகம் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளார்கள். மேல் கூறியவற்றால் நாம் அறிவது தமிழ் திராவிடர்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்  ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது. ஆனால் இது தவறு.தமிழர்கள் இதிலும் கூடிய காலம் வாழ்ந்து உள்ளார்கள் என்பதே உண்மை, ஏனென்றால் அவர்கள் சிந்து வெளி மக்களுடனும் சுமேரிய மக்களுடனும் தொடர்பு படுத்தப் பட்டு உள்ளார்கள் என்பதால் ஆகும். 

எனவே தமிழ் அல்லது திராவிட அகரவரிசையின்  மூலத்தை கண்டறிய,நாம் சுமேரிய மொழியை மட்டும் அல்ல, சிந்து வெளி மொழியையும் ஆராய வேண்டும்.அப்பதான் உண்மையை அறியலாம்?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:13  தொடரும்

No comments:

Post a Comment