எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09

(ஆ ) நாளடைவில்,கி மு 3500–3000  ஆண்டுகளில் இந்த  மூன்று பரிமாணங்கள் கொண்ட டோக்கன் [token] இரண்டு பரிமாணங்கள் கொண்ட படஎழுத்து குறிகளுக்கு மாற்றப் பட்டு, முன்னைய டோக்கன் போலவே ,பிரத்தியேகமாக  கணக்கு வைப்பு முறைக்கு பாவிக்கப் பட்டன. ஈரானில் உள்ள கோடின் டெபி [Godin Tepe, Iran] என்னும் இடத்தில்  கண்டு எடுக்கப் பட்ட அழுத்தி பதிந்த முத்திரை [Impressed tablet] ஒன்றும் மற்றும்  33 அலகு எண்ணையை குறிக்கும் ஓவிய எழுத்து/ படவெழுத்து முத்திரை [Pictographic tablet] ஒன்றும் இணைக்கப் பட்டு உள்ளது [படம் 1 & 2]. 

நான்காயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்த டோக்கன் முறை, ஒரு முறையான எழுத்திற்கு அல்லது எழுத்து ஒன்று தோன்றுவதற்கு வழி வகுத்தது எனலாம். இந்த மாற்றம் சுமேரியாவிலும், மற்றும்  இன்றைய தென் மேற்கு ஈரானில் செழித்திருந்த பண்டைக்கால நாகரிகமான ஈலாமிலும் (Elam) அதிகமாக  ஒரே நேரத்தில் நடைபெற்றது. ஈலாம், சுமேரியரின் ஆதிக்கத்தில் கி மு 3500 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடத் தக்கது. சுமேரியாவில் முதலில் அநேகமாக  ஒருவர் பெற்ற கடனை அல்லது ஒருவர் கொடுத்த கடனை குறித்து காட்டும் டோக்கன்கள் களி மண்ணால் செய்யப் பட்ட   ஒரு வெற்று பந்து ஒன்றிற்குள், அதை ஒரு உறை [envelope] போல் பாவித்து, கடன் திருப்பி கொடுக்கும் வரை, ஒரு நினைவூட்டும் பெட்டகமாக, சேமித்து வைக்கப் பட்டன. ஆனால்,வெவ்வேறு டோக்கன் வடிவிலும் எண்ணிக்கையிலும் தயாரிக்கப் பட்ட  கியூனிஃபார்ம் [cuneiform] ஆவணம் நிறை வேற்றப் பட்டு, உறையினுள் போட்டு மூடியதும், மீண்டும் அதன் விபரத்தை அறிந்து கொள்வது இயலாமையாக இருந்தது, ஏனென்றால், இப்ப களி மண் உறை மூடப்பட்டு விட்டது, உள்ளுக்குள் இருப்பதை எவராலும் பார்க்க முடியாது. எனினும், தொல் பொருள் ஆய்வுகள், இதற்கான தீர்வை அந்த சுமேரியர்கள் கண்டு பிடித்தார்கள் என்பதை சுட்டிக் காட்டு கிறது. உதாரணமாக, சில சுமேரிய கணக்காளர்கள், உள் வைக்கப்பட்ட ஆவணத்தின் விபரத்தை இலகுவாக அறிவதற்காக , உறையின் மேல், உள் சேமித்து வைக்கப் பட்ட டோக்கன்களை, அவ்வற்றை உள் வைத்து மூட முன், உரையின் வெளிப் பரப்பில், உறை ஈரமாக இருக்கும் பொழுதே, அழுத்தி பதிந்து அடையாளப் படுத்தினார்கள். இதனால்,
உள்ளுக்குள் சேமித்து வைக்கப் பட்டுள்ள டோக்கன்களின் வடிவமும் அவையின் எண்ணிக்கையும் இலகுவாக எந் நேரமும், எல்லா நேரமும் சரிபார்க்கக் கூடியதாக இருந்தது. உறை
யில் பதித்து டோக்கனின் பிரதியை எடுத்தமை ஒரு அறிவியல் முன்னேற்றமாக கருதப் படுகிறது. இங்கு மூன்று பரிமாண டோக்கன், இரு பரிமாண வடிவத்திற்கு மாற்றப் பட்டுள்ளது. இதுவே எழுத்து உருவாக்களின் முதல் அறிகுறி ஆகும். 

இறுதியாக, உறையிற்க்குள் மூடி வைக்கப் பட்ட டோக்கன்கள், வெளியே உறையின் மேல் பதியப்பட்ட  இரண்டு பரிமாண படத்தால் குறிப்பிடப் படுகின்றன என்றால், மேலும் அந்த உறை நெருப்பால் சுடப்பட்டு அங்கு பதியப்பட்ட படம், அதனால், எவராலும் எப்படியும் மாற்ற முடியாத நிலையை அடைந்தது என்றால், இனிமேல் உறைக்குள் டோக்கன்கள் வைப்பது அவசியம் இல்லை ,என்ற உண்மையை பண்டைய மெசொப்பொத் தேமியர்கள் நாளடைவில் உணர்ந்தார்கள். ஆகவே, கி மு 3200 ஆண்டளவில், அழுத்தி பதியப் பட்ட குறியீடுகளின் கருத்தை பொதுவாக எழுத்தா ளர்களால் விளங்கப் பட்டதும், களி மண் முத்திரைகள் அல்லது வில்லைகள் [clay tablets] ,முன்னைய டோக்கன்களால் நிரப்பி மூடப் பட்ட உறையை மாற்றிடு செய்தது. இந்த கியூனிஃபார்ம் குறியீடு [cuneiform signs] உண்மையில் டோக்கன்களின் வடிவத்தில் இருந்தும் உரையில் பதிய பட்ட அதன் வடிவத்தில் இருந்தும் பெறப் பட்டவை ஆகும். இதுவும் ஒரு ஓவிய எழுத்து தான், என்றாலும் இது பொதுவாக எதிர் பார்க்கப் படும் உண்மையான படத்தில் இருந்து பெறப் பட்ட ஓவிய எழுத்து அல்ல, உண்மையான படத்தை பிரதி பலித்த டோக்கனில் இருந்து பெறப் பட்டதாகும். எழுத்தின் கண்டு பிடிப்பில் இது ஒரு தீர்க்கமான முதல் படி மட்டும் அல்ல, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சியும் ஆகும். முன்பு டோக்கன் எதை பிரதி நிதித்துவம் செய்ததோ, அதையே அதன் பதிவால் ஏற்பட்ட குறியீடும் பிரதி நிதித்துவம் செய்தது. இதை, இந்த பட எழுத்தை, சில வேளைகளில் கருத்தெழுத்து (ideogram) என்றும் குறிப்பதும் உண்டு. இது பொதுவாக சொற்களையும், ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக
எண்ணங்களைக் குறிப்பனவாகும். பட எழுத்துக்கள் பல்வேறு முறைகளில் ஒழுங்கு படுத்தப்பட்ட காட்சிக் கூறுகளால் ஆனவை. இவை அகர வரிசை எழுத்து முறைகளைப் போல் ஒலியன் கூறுகளால் ஆக்கப்பட்டவை அல்ல. அகர வரிசை முறையில் எழுதப்பட்ட சொற்களின் ஒலியமைப்பைச் சுலபமாக நினைவில் வைத்திருக்க முடிவது போல, பட எழுத்துக்களின் பொருளை இலகுவாக நினைவில் வைத்திருக்கவும், ஊகிக்கவும் ஒருவரால் முடியும். பட எழுத்துக்களில் இன்னொரு சிறப்பம்சம், ஒரே பட எழுத்தைப் பல்வேறு மொழிகளிலும் அதே பொருளைக் கொடுக்குமாறு பயன்படுத்த முடியும் என்பதாகும். 

அதன் பிறகு,அடுத்த படியாக,அவர்கள் அழுத்தி பாதிப்பதை கைவிட்டு, ஈரமான களி மண் பலகையில் [உறையில்] ,குறியீட்டின் படத்தை வரையத் தொடங்கினார்கள்.எனவே கி மு 3100 அளவில்,டோக்கனை, எழுத்தாணி கொண்டு அடையாளப் படுத்தும் பட எழுத்து உலகில் முதன் முதல் ஆரம்பிக்கப் பட்டது. எழுத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல் கல்லாகும். அதாவது,எத்தனை எண்ணெய் ஜாடி என்பதை குறிப்பதற்கு முன்பு அத்தனை தரம் எண்ணெய் ஜாடி திருப்ப திருப்ப  பதியப் பட்டது. இப்ப அதற்குப் பதிலாக, உதாரணமாக,33 எண்ணெய் ஜாடிகளை குறிக்க, எண்ணெய் ஜாடி யை குறிக்கும் பட எழுத்தின் முன்னால் மூன்று வட்டமும், மூன்று ஆப்பும் வரைய பட்டன. இங்கு வட்டம் பத்தையும் [10] ஆப்பு ஒன்றையும் [1] குறிக்கின்றன. இந்த எண் பத்தும் [10] ,எண் ஒன்றும் [1] புதியது அல்ல, இவை முன்பு தானியத்தின் அளவை குறிக்க அழுத்தி பதியப் பட்ட  கோளத்தினதும் கூம்பினதும் அடையாளமே ஆகும். மேலும் 33 எண்ணெய் ஜாடியை குறிக்க 7 குறிகள் போதும். ஒன்று- எண்ணெய் ஜாடியை குறிக்க, மூன்று- மூன்று பத்தை குறிக்க, இறுதி மூன்று- மூன்று ஒன்றைக் குறிக்க ஆகும். எனவே எழுத்து முன்னைய டோக்கன் முறையின்
விரிவாக்கமே ஆகும். மேலும், டோக்கன், மூன்று பரிணாமத்தில் இருந்து இரண்டு பரிமாணத்திற்கும் மற்றும் அழுத்தி பதிப்பதில் இருந்து, எழுத் தாணி கொண்டு வரையும், ஒரு முறையான மாற்றங்கள் அடைந்தாலும், குறியீடுகளால் கருத்து ஒன்றை விவரிக்கும் அல்லது சொல்லும் அடிப்படை முறையில் எது வித மாற்றமும் இல்லை. எனினும், செதுக்கப்பட்ட  படவெழுத்தும் பதியப்பட்ட எண்களும் [incised pictographs and impressed numerals] முன்னைய டோக்கன் முறையில் இருந்து, இதன் முதன்மை வேறுபட்டை  காட்டுகிறது. இந்த குறியீடுகளின் கூட்டு [ பிணைப்பு ],எண்ணப்படும் பொருளுக்கும் எண்களுக்கும் இடையில் உள்ள சொற்பொருள் பிரிவை [semantic division] உண்டாக்கியது எனலாம்.

'வடிவெழுத்து பெயரெழுத்து முடிவெழுத்து தன்மையெழுத்தென எழுத்தின் பெயர் இயம்பினரே' 

என்று நிகண்டுகளில் ஒன்றான திவாகர நிகண்டு எழுத்தின் பரிணாம வளர்ச்சியை கூறியிருப்பதும்,  இன்று தொல்லியல் அறிஞர்களால் வறையறுக்கப்பட்டுள்ள படவுருவன்/ ஓவிய எழுத்து (PICTO GRAPH), சொல்லுருவன் / உருபனெழுத்து (LOGO GRAPH), உயிர்மெய்யன்/ அசையெழுத்து (SYLLABARY), ஒலியெழுத்து (PHONETIC) என்று குறிப்பிடுவதையும் ஒப்பு நோக்கும்போது தமிழின் எழுத்துவகைகளை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்துள்ளதையும் நாம் அறிய முடிகிறது என்பது பெருமைக்கு உரியதே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:10  தொடரும்

No comments:

Post a Comment